‘’அம்மா, நீ செத்துப் போம்மா…’’ டீன் ஏஜ் கவுன்சிலிங்

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

டீன் ஏன் வயதில் பெற்றோர்கள் எதிரியாகத் தெரிவார்கள், செத்தால் கூட நல்லது என்று நினைப்பார்கள். அப்படி வந்த ஒரு மாணவரின் கதை.

ஒரு சில வார்த்தைகளை வீட்டில் பேசுவதற்கு பெரியவர்கள் கட்டுப்பாடு விதிப்பார்கள். சாதாரணமாகப் பேசும் நேரத்திலும் கோபத்தில் கத்தும் போதும் கெட்ட வார்த்தைகள் மட்டுமின்றி நெகடிவ் வார்த்தைகளும் பேசக்கூடாது என்று கண்டிப்பார்கள். உதாரணம் சொல்வதென்றால், ‘சனியனே இங்கே வா…’, ‘உன் தலையில் இடி விழ….’, ‘நாசமாப் போ…’, ‘செத்துத்தொலை’ என்பது போன்ற பேச்சுக்களை அமங்கல வார்த்தைகள் என்பார்கள்.

இந்த வார்த்தைகளை ஏன் பேசக்கூடாது என்று கேட்டால், ‘வீட்டுக்குள் கண்ணுக்குத் தெரியாத தேவதைகளும், முன்னோர்களும் வசிக்கிறார்கள் என்பது ஐதீகம். குடும்பத்தில் இருக்கும் நபர்கள் ஆசையுடன் பேசுவதை மட்டுமின்றி கோபத்தில் பேசுவதையும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசிர்வாதம் செய்து நிறைவேற்றி விடுவார்கள். அதனால் எந்தக் காரணம் கொண்டும் நெகடிவ் வார்த்தைகளைப் பேசக்கூடாது’ என்று காரணம் சொல்வார்கள்.

இந்த நம்பிக்கை உண்மையா, பொய்யா என்ற விவாதம் தேவை இல்லை. ஏனென்றால் கோபத்தில் பேசப்படும் சில வார்த்தைகள் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படுத்துவதை எல்லோருமே வாழ்க்கையில் அனுபவித்திருப்போம்.

லேசாக இடித்துவிட்டுச் செல்லும்போது, ‘ஸாரி’ என்று சொன்னால் அங்கே பிரச்னை வராது. ‘பார்த்துப் போக மாட்டியா?’ என்று சீண்டினால் மிகப்பெரிய சண்டையாக மாறுவது மட்டுமின்றி, வன்முறை நிகழவும் வாய்ப்பு உண்டு. ‘என்னை மன்னித்துவிடு’, ’ஸாரி’, ‘ப்ளீஸ்’ போன்ற வார்த்தைகள் எத்தனையோ வில்லங்கங்களைத் தீர்த்து வைத்திருக்கின்றன.

இந்த வார்த்தைகள் பற்றி இங்கே பேசுவதற்குக் காரணம் என்னவென்றால் பத்தாம் வகுப்பு படிக்கும் பாலசந்தர். அவனை அழைத்துக்கொண்டு வந்த அம்மா வசந்தி  பேசத் தொடங்குவதற்கு முன்பாகவே கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது. அவர் அழுவதை பாலசந்தர் இயல்பான ஒன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அழுது முடித்துவிட்டால் பேசுவது எளிதாக இருக்கும் என்பதால் நானும் அமைதியாக இருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் மனதை திடப்படுத்திக்கொண்டு வசந்தி பேச்சைத் தொடங்கினார். ‘’இவன் நான் தவம் இருந்து பெத்த பிள்ளை. கல்யாணம் முடிச்சு மூணு வருஷம் குழந்தை இல்லேன்னு கோயில் கோயிலாப் போய் விரதமிருந்து இவனை பெத்தேன். அப்போ நான் பேங்க் கிளார்க்கா வேலை பார்த்தேன். நல்ல சம்பளம், மரியாதை எல்லாம் இருந்திச்சு.

குழந்தையை முழு நேரமும் நல்லா பார்த்துக்கிட ஆசைப்பட்டு என் வேலையை ரிசைன் செஞ்சேன். அப்பவே எல்லோரும் என்னைத் திட்டுனாங்க. ஆனா, என் பிள்ளைதான் எனக்கு முக்கியம்னு தெளிவா சொல்லிட்டேன். நல்லாத்தான் வளர்த்தேன். இப்பவும் அதே எண்ணத்தில் இருக்கிறேன்.

ஆனால், இவன் கொரோனா காலத்துல செல்போன்ல படிக்க ஆரம்பிச்சதிலிருந்து ரொம்பவும் மாறிட்டான். நல்லா படிக்கிறான். அதேநேரம் ரொம்ப நேரம் செல்போன் பார்க்கிறான். என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை.

சாப்பிடும் நேரத்தில் செல்போன் பார்த்தான். செல்போனை புடுங்கியதும் கோபப்பட்டு, ‘என்னை ஏன் கொடுமைப்படுத்துறே…. நீ செத்துத்தொலை’ன்னு கத்துனான். எனக்கு உசுரே நின்னு போச்சு. அவன் நல்லதுக்கு சொன்னதுக்கு இப்படி திட்டுறானேன்னு மனசு உடைஞ்சு போச்சு. என் வீட்டுக்காரர்கிட்டே கூட சொல்லாம நானே அழுது தீர்த்தேன். ஆனாலும், கோபத்துல தெரியாமப் பேசிட்டான்னு மனசை தேத்திக்கிட்டேன்.

ஆனா, இப்போ எதுக்கெடுத்தாலும் என்னை செத்துப் போன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறான். நேத்து அவன் படிக்கிற ரூம்ல கூட்டுறதுக்குப் போனேன். அவன் எதையோ மறைச்ச மாதிரி தெரிஞ்சதும் என்னன்னு சாதாரணமாத்தான் கேட்டேன். அதுக்கு, சந்தேகப்படுறேன்னு காச்மூச்சுன்னு கத்துனான்.

‘’ஸாரிடா, நீ எதையோ மறைக்கிறேன்னு நினைச்சுக் கேட்டேன். ஒண்ணுமில்லேன்னா விட்டுரு’’ன்னு சொன்னேன்.

அதுக்கு, ‘நீ உசுரோட இருந்து என்ன செய்யப்போறே… என் உசுரை வாங்கிட்டு இருக்காம சீக்கிரமா செத்துத்தொலை’ன்னு சொல்லிட்டான். என்னால இவன் பேசுனதைத் தாங்க முடியலை. என் வீட்டுக்காரர் நான் அழுவதைப் பார்த்து இவனை அடிச்சுட்டார்.

அதுக்கு இவன், ‘ரெண்டு பேரும் செத்துத் தொலைங்க… நான் அனாதையா நிம்மதியா இருக்கேன்’ன்னு சொன்னேன். அவராலயும் இவன் பேசுனதைத் தாங்க முடியலை. எதுவும் சாப்பிடாம ஆபிஸ்க்குப் போயிட்டார். என் டாக்டர் ஃப்ரெண்ட் ஒருத்திகிட்டே மனசு விட்டுப் பேசுனேன். அவதான் பையனை கவுன்சிலிங் கூட்டிட்டுப் போன்னு சொன்னா. அதான் வந்திருக்கோம்.

‘நான் என்ன பைத்தியமா… என்னை எதுக்கு கூப்பிடுறீங்க?’ன்னு ரொம்பவும் டென்ஷன் ஆனான். இவன் கையை, காலைப் பிடிச்சுக் கெஞ்சு கூட்டிட்டு வந்திருக்கேன்’’ என்று சொல்லிமுடித்தார்.

‘’அம்மா சொல்றது எல்லாம் உண்மையா பாலசந்தர்?’’ என்று பையனிடம் கேட்டேன்.

‘’எங்க கிளாஸ்ல பொண்ணுங்களே கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறாளுங்க. நான் செத்துப்போன்னு கோபத்துல சொன்னதுக்கு ரொம்பவும் சீன் போடுறாங்க…’’ என்று கூலாகப் பதில் சொன்னான்.

அவன் பதிலிருந்த அசட்டையை குறித்துக்கொண்டேன். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் படிப்பு, பிடித்த சினிமா நடிகர், விளையாட்டு என்று கொஞ்சநேரம் பேசினேன். அதன் பிறகு, ‘ரொம்ப நல்ல பையனாத்தான் இருக்கான். கோபத்துல இப்படி வார்த்தை வர்றது சகஜம்… கொஞ்சம் பர்சனல் கேள்விகள் கேட்கணும், வெளியே இருங்க…’’ என்று அம்மாவை வெளியே அனுப்பிவைத்தேன்.

‘’கவுன்சிலிங் என்றாலே பைத்தியம் பிடிச்சவங்க வரும் இடம்னு நினைச்சிட்டியா?’ என்று கேட்டேன்.

‘’வேற எதுக்கு வருவாங்க?’’ எதிர் கேள்வி வீசினான்

‘’உடம்புக்கு ஒரு பிரச்னை வந்திச்சுன்னா டாக்டரிடம் போவது போன்று மனதில் கவலை, கோபம், குழப்பம், அச்சம், பதட்டம், பயம் வருபவர்கள் கவுன்சிலிங் வரலாம். உங்களைப் போன்று படிக்கும் பிள்ளைகள் எதையும் தெரியாமல் முடிவு கட்டி பேசிவிடக் கூடாது’ என்றதும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தான்.

‘’உங்க அம்மாவை செத்துப்போன்னு சொல்வது சரியென்று நினைக்கிறாயா..?’’

‘’இதை ஒரு பெரிய விஷயமா எல்லோரும் பேசிக்கிட்டே இருக்கீங்க. உண்மையிலே எத்தனை பேர் அம்மா இல்லாம இருக்காங்க தெரியுமா?’’

அவன் வேகமாகப் பேசியதிலிருந்தே மனதில் வேறு ஏதோ ஒரு விஷயம் ஆழமாகப் பதிந்திருப்பது புரிந்தது. அதனால் அதை மறுப்பது போன்று பேசினேன். ‘’அதெப்படி நிறைய பேர் அம்மா இல்லாம இருப்பாங்க. இப்போ மருத்துவம் எவ்வளவு வளர்ந்திருச்சு தெரியுமா, எல்லோரும் 80 வயசு வரைக்கும் உசுரோட இருக்கமுடியும்’’ என்று தூண்டில் போட்டேன்.

‘’அதெல்லாம் இல்லை. எங்க க்ளாஸ்ல ரெண்டு பேருக்கு அம்மா இல்லை. என் ஃப்ரெண்ட் லிங்கேஷ்க்கும் கீர்த்தனாவுக்கும் அம்மா இல்லை’’ என்றான்.

‘’ஏன் என்னாச்சு..?’’

‘’லிங்கேஷ் அம்மா கொரோனா காலத்துல செத்துப் போயிட்டாங்க…’’

‘’கீர்த்தனா அம்மாவுக்கு என்னாச்சு..?’’

‘’அது தெரியலை… அவ என் ஃப்ரெண்ட் இல்லை’’

‘’சரி, லிங்கேஷ் அம்மா இல்லாம ரொம்பவும் வருத்தப்படுவானே…’’

‘’அதெல்லாம் சும்மா. லிங்கேஷ் அம்மான்னு பேச ஆரம்பிச்சாலே அவனை சமாதானப்படுத்துறதுக்கு அவங்க அப்பா கேட்டதை எல்லாம் வாங்கித்தர்றாரு. ஆப்பிள் ஐ போன் வைச்சிருக்கான். ஸ்போர்ட்ஸ் பைக் வைச்சிருக்கான்…’’ பாலசந்தர் கண்களில் ஆர்வம் மின்னுவதைப் பார்க்க முடிந்தது. லிங்கேஷுக்குக் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் பாலசந்தருக்கு ஏக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதனாலே, நமது அம்மாவும் செத்தால் நல்லது என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. இதை நேரடியாக அவனிடம் கூறி புரியவைப்பது சரியாக இருக்காது என்பதால் பேச்சை மாற்றினேன்.

‘’நீ டாக்டருக்குப் படிக்க விரும்புவதாக உன் அம்மா ஆசைப்படுகிறார், அது உன்னுடைய ஆசையா அல்லது அம்மாவின் விருப்பமா?’’ என்று கேட்டேன்.

‘’எனக்கும் டாக்டருக்குப் படிக்க ஆசையாக இருக்கிறது. நான் நன்றாகப் படிக்கிறேன். ஆனால், இப்போது எடுக்கும் மதிப்பெண் போதுமா என்பது தெரியவில்லை’’ என்றான்.

‘’உனக்கு உண்மையிலே விருப்பம் இருந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும். நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு சில வழிகள் சொல்லித்தருகிறேன். அதேநேரம், உனக்கு குடும்பத்தினர் ஆதரவு இருக்க வேண்டும். எனவே, அம்மா, அப்பாவுக்குப் பிடிக்காத வார்த்தைகள் பயன்படுத்த வேண்டாம். ஒரு சிலருடைய ஆசிர்வாதத்துக்குப் பெரிய மதிப்பு உண்டு. அதனால், சில அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவி செய்யுங்கள். அது உளவியல் ரீதியாக நல்ல பலன் கொடுக்கும்… அடுத்த முறை படிப்பதற்கு சிம்பிள் டெக்னிக் சொல்லித்தருகிறேன்’’ என்று சொல்லி அவனை வெளியே அனுப்பினேன்.

அதன் பிறகு பாலசந்தரின் அம்மா வசந்தியிடம் தனியே பேசினேன். ‘’பாலசந்தருக்கு இன்னமும் நிஜ உலகம் புரியவில்லை. அம்மா இல்லாத காரணத்தால் நண்பனுக்குக் கிடைக்கும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கிறான். அதன் மற்றொரு பக்கம் எத்தனை கொடூரமானது என்பது அவனுக்குப் புரியவில்லை.

அதனால் அடுத்த சில வாரங்கள் அவனை அழைத்துக்கொண்டு அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு வழங்குங்கள். ஆசிர்வாதம் வாங்கும் வகையில் அங்கு இருப்பவர்கள் கதையை பாலசந்தர் கேட்கும்படி செய்யுங்கள். நீங்களாக வற்புறுத்த வேண்டாம். அதன் பிறகும் அவன் மனம் மாறவில்லை என்றால் மட்டும் அழைத்து வாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பினேன்.

அடுத்த இரண்டாவது மாதத்தில் பாலசந்தரின் அம்மா நேரில் வந்தார். நாங்கள் சில அனாதை இல்லங்களுக்குச் சென்றோம். பாலசந்தர் யாரிடமும் பெரிதாகப் பேசுவதற்கு விருப்பம் காட்டவில்லை. அதனால் நாங்களும் அவனை அடுத்து எங்கேயும் அழைத்துச்செல்லவில்லை. பாலசந்தரின் ஃப்ரெண்ட் லிங்கேஷின் அப்பா இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுத்திருக்கிறாராம், லிங்கேஷ் அழுதுகொண்டே இருக்கிறான் என்று வருந்தினான். செத்துப்போ என்று சொன்னதற்கு ஸாரி கேட்டான்…’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

இது சரியான மாற்றம் இல்லை என்பதால் அவனது அம்மாவிடம் மீண்டும் தெளிவாகக் கூறினேன்.

’’ஆதாயம் கிடைப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தவன், பிரச்னை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறான். இதில் பாலசந்தர் மாறிவிட்டான் ஆனந்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பாலசந்தருக்கு உறவின் மகத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வையுங்கள். அம்மா, அப்பா இருப்பது ஒரு வரம் என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அனாதை ஆசிரமங்களில் வளரும் பிள்ளைகளைப் பார்த்தால் தான் உண்மை தெரியும். அவனாக அங்கு உதவிகள் செய்யட்டும். அதுவே அவனுக்கு சரியான பார்வை தரும்’’ என்று சொல்லி அனுப்பினேன்.

Leave a Comment