எடப்பாடி தயவை நாடும் மோடி

Image

பா.ஜ.க. மாநிலங்களவை நிலவரம் கலவரம்

கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த மோடி அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை லட்சியமே செய்யாமல் எத்தனையோ சட்டங்களைக் கொண்டுவந்தது. குறிப்பாக சி.ஏ.ஏ., வேளாண்மை சட்டம், காஷ்மீர் பிரிப்பு போன்றவைகளை தன்னிச்சையாக நிறைவேற்றியது.

இப்போது மக்களவையில் மைனாரிட்டி அரசாக இருக்கும் பா.ஜ.க.வுக்கு மாநிலங்களவையிலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையின் மொத்த பலம் தற்போது 245ஆக உள்ளது. இதில் 233 உறுப்பினர்கள், மாநில/யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 12 பேர், நியமன எம்.பி.க்கள்.

இப்போது மத்திய பாஜக அரசால் நியமனம் செய்யப்பட்ட ராகேஷ் சிங், ராம் சாகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதனால் பாஜகவின் பலம் 86ஆக குறைந்துள்ளது. கூட்டணியின் பலம் 101 ஆக உள்ளது. பெரும்பான்மை வேண்டும் என்றால் அதற்கு 113 எம்.பி.க்கள் வேண்டும். அப்போதுதான் மசோதாக்களை நிறைவேற்ற முடியும்.

நிதி மசோதா தவிர மற்ற மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றியே ஆக வேண்டும். இப்போது மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியின் பலம் 87 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 26 எம்.பி.க்களும் மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்.பி.க்களும் டெல்லி, பஞ்சாப்பை ஆண்டு வரும் ஆம் ஆத்மிக்கும் தமிழ்நாட்டை ஆளும் திமுகவுக்கும் தலா 10 எம்.பி.க்கள் உள்ளனர்.

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளது. இக்கட்சிக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். பாஜகவை எதிர்க்காமல் சமூகமான உறவை பேணி வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-க்கு 11 எம்.பி.க்கள் உள்ளனர்.

அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும், கடந்த காலத்தில் முக்கிய விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளன. இனியும் அப்படி எடுக்குமா என்பதே கேள்வி. ஆக, இப்போது எடப்பாடியின் ஆதரவு தான் மோடிக்குத் தேவை. அரசியல் எப்படியெல்லாம் மாறுகிறது…

Leave a Comment