மோடி கப்சிப், ராகுல் கொண்டாட்டம் நியாயமா?

Image

காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது என்றாலும் கொண்டாட்ட மனநிலையில் கும்மாளம் போடுகிறார்கள். அதேநேரம் 240 தொகுதிகளில் ஜெயித்த பிறகும் பா.ஜ.க.வினர் அமைதியாக இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு வெற்றி என்று ராகுல் கொண்டாடுவது நியாயமே இல்லை என்று பா.ஜ.க.வினர் கேலி செய்வதற்கு யோகேந்திர யாதவ் ஒரு தெளிவான பதில் அளித்திருக்கிறார்.

அவர், ‘’இந்தத் தேர்தலே ஒரு சமநிலையற்ற சூழ்நிலையில்தான் நடந்திருக்கிறது. தேர்தல் கமிஷன் ஏறக்குறைய பாஜகவின் ஒரு அணி போல செயல்பட்டு வந்தது. மோடியின் அவலப் பேச்சுகள் எதற்குமே எந்த நடவடிக்கையும் வரவில்லை. அமித் ஷா உட்பட இதர பாஜகவினர் செயல்பாடுகளையும் கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் பத்திரம் மூலம் பெருமளவு நிதியை பாஜக குவித்திருந்தது. இந்தியா கூட்டணிக் கட்சியினர் அனைவரின் நிதியையும் சேர்த்தாலும் அதைவிட அதிகமான நிதியை பாஜக செலவு செய்தது. இரண்டு எதிர்க் கட்சி முதல்வர்கள் சிறையில் தள்ளப்பட்டிருந்தனர்.

தேர்தலுக்குக் கொஞ்ச காலம் முன்னர் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் வங்கிக் கணக்குகள் சிலவற்றை முடக்கி வைத்தது. லோக்கல் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் மேல் அமுலாக்கத் துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தி அவர்களை எல்லாம் தம் பக்கம் இழுத்து அவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளை நீர்த்துப் போக வைத்தது.

புனேவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவரத்தன் பாட்டில் இதே போல பாஜகவில் சேர்ந்து தற்போது வழக்குகளில் இருந்து நீங்கி வாழ்பவர். இவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது ‘பாஜகவில் சேர்ந்த பின்னர்தான் நிம்மதியாக தூங்குகிறேன். எந்த விசாரணையும் இல்லை. சோதனைகள் இல்லை. டென்ஷன் எதுவுமில்லை!’ என்று உளறிக்கொட்டி இருக்கிறார்.

அது போலவே மோடியை விமர்சித்து எழுதும் ஊடகங்கள் மேல் வழக்குகள், விசாரணைகள் பாய்ந்தன. ‘Fall in line, or else,’ என்பது அரசின் தாரக மந்திரமானது. புதிய ஐடி சட்டங்கள் கொண்டு வரப்பட்டு சமூக ஊடகங்கள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன. தங்களுக்கு சங்கடமான அனைத்து பதிவுகளையும் ஒடுக்கும் ஆணையை இந்த ஊடங்களுக்கு அரசு இட்டது.

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை பெரும்பாலான ஊடகங்கள் ஒதுக்கிக் கடந்தன. இந்தி பெல்ட்டில் இருந்த செஷன்ஸ் மற்றும் உயர் நீதிமன்றங்கள் பெருமளவுக்கு இவர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டன. இதெல்லாம் செய்து விட்டு அதுவும் போதாது என்று ‘அப் கி பார், 400 பார்’ (இந்த முறை 400க்கும் மேல்) என்ற கோஷத்தையும் முன்னெடுத்தார்கள்.

போகுமிடமெல்லாம் ராமர் கோயில் பற்றியும், இந்து-முஸ்லிம் விரோதம் பற்றியும் பேசிக் கொண்டே இருந்தார்கள். இந்தியா கூட்டணிக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி வருகிறது என்றெல்லாம் மோடியே பேசினார். கட்டக்கடைசி உளவியல் உத்தியாக நானூறுக்கு அருகில் வரும்படி எக்சிட் போல்களை வெளியிட்டார்கள். ‘ஷேர்ஸ் எல்லாம் வாங்கி வெச்சிக்குங்க!’ என்று அமித் ஷாவே பேசினார்.

எமர்ஜென்சி காலத்துக்குப் பின் இந்த அளவுக்கு அரசியல் ரீதியான அடக்குமுறையை இந்தியா இப்போதுதான் எதிர் கொள்கிறது. அப்படிப்பட்ட கேவலமான நிலையைக் கடந்துதான் இந்த ரிசல்ட் வந்திருக்கிறது என்பதுதான் அதிசயத்திலும் அதிசயம். மேலே சொன்ன அத்தனையும் செய்ததற்கு நியாயமாகப் பார்த்தால் ‘அப் கி பார் 500 பார்’ என்று வந்திருக்க வேண்டும். அப்படி வராமல் அறுதிப் பெரும்பான்மை கூட வர இயலாமல் போனதுதான் இந்தியாவின் ஜனநாயகத்தின் வலிமைக்குச் சான்று.

நிஜமாகவே இது எதிர்க் கட்சிகளின் மற்றும் ராகுலின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். பாஜகவின் ஒட்டு மொத்த வெறுப்புப் பிரச்சாரத்தையும் அடக்குமுறைகளையும் மக்கள் சுத்தமாக ஒதுக்கியதுதான் இந்திய மக்கள் பாஜகவுக்கு விடுத்திருக்கும் சேதி. இந்தப் பின்னணியில்தான் வந்திருக்கும் தேர்தல் முடிவுகள் அதி முக்கியமாக பார்க்கப்பட வேண்டும். எதிர்க் கட்சிகளின் வெற்றிக்கும் இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கிய சாட்சி’ என்று கூறியிருக்கிறார்.

சரியான கூற்று தான்.

Leave a Comment