• Home
  • அரசியல்
  • மோடியும் அதானியும் ஒண்ணு… நாடாளுமன்றத்தில் புதுமை போராட்டம்

மோடியும் அதானியும் ஒண்ணு… நாடாளுமன்றத்தில் புதுமை போராட்டம்

Image

அமெரிக்காவில் வெடித்த அதானி ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகிறார்கள். ஆனால், இதனை மோடி அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்பது மட்டுமின்றி அதானி என்ற பெயரைப் பேசுவதற்கே அனுமதிப்பதில்லை.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று, நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் “மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “அதானி மீது விசாரணை நடத்த பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். ஏனெனில், அதானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பிறகு தானும் விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.” என விமர்சித்தார்.

இந்த நிலையில் அதானியின் ஊழல் குறித்து தோழர் ஹிஷாம் விரிவான கட்டுரை வடித்துள்ளார். அதில், ‘’கடந்த நவம்பர் 20, அன்று அமெரிக்காவின் நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குகள்/ பரிவர்த்தனை ஆணையம் (SEC) நடத்திய விசாரணையின் அடிப்படையில்ஒரு குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்க முதலீட்டாளர்களின் நிதி மற்றும் பங்குகளை பயன்படுத்தி 6 இந்திய மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் ( ஈஸ்டர்ன் நியூயார்க் நீதிமன்றத்தால்) குற்றம் சாட்டியுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை வெளிவந்த 2 நாட்களில் கென்யா அரசுடன் கடந்த மாதம் அதானி நிறுவனம் மேற்கொண்ட விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த ஒப்பந்தங்களை அந்நாட்ட அரசு உடனடியாக ரத்து செய்துள்ளது. அதானி மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டை கென்யா மட்டும் இன்றி அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள இலங்கை மற்றும் வங்கதேசத்திலும், பிரான்ஸ், ஐரோப்பா என பல சர்வதேச அளவில் பெரும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. மேலும் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து வரும் நிலையில், அதன் விளைவுகள் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்களையும், பொருளாதாரத்தையும் பாதித்தது.

அதானி மற்றும் ஆஸ்யூர் குற்றச்சாட்டுகள்

2020 – 2023 காலகட்டத்தில், (Adani Green Energy மற்றும் Azure Power Global Ltd ) அதானி-அசூர் என 2 நிறுவனங்கள்; இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான SECI (Solar Energy Corporation of India) உடன் உலகின் மிகப்பெரிய சோலார் எனர்ஜி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் , அந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் அதானி நிறுவனத்திற்கு இரண்டு பில்லியன் டாலர்கள் (USD $2 Billon) லாபம் வரப்போகிறது என்று விளம்பரம் செய்து அமெரிக்காவில் நிதி திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் முன்னவைத்த இத்தகைய கவர்ச்சிகரமான Sale Declaration னை நம்பி பல அமெரிக்க நிறுவங்களும், பொதுமக்களும் பங்குச்சந்தையில் அதானி – அசூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளனர். ( அசூர் நிறுவனம் அமெரிக்க (NASDAQ) பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)

இந்நிலையில், நிதி திரட்டும் பொழுது அமெரிக்க சட்டங்களுக்குட்டப்பட்டு தான் இந்த நிறுவங்கள் செயல்பட வேண்டும் , இதன் அடிப்படையில் அங்குள்ள பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான US Securities and Exchange Commission (USSEC) அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இத்திட்டம் குறித்த உண்மை தன்மையை விசாரித்த போது, அதில் பல முறைகேடுகளை கண்டறிந்தது. அதானி மற்றும் அசூர் நிறுவனங்கள் அமெரிக்காவில் நிதி திரட்டுவதற்கான உரிமை பெற்றபோது அமெரிக்காவின் Foreign Corrupt Practices Act (FCPA ) சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

FCPA என்பது அமெரிக்காவில் பணம் திரட்டும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான சட்டமாகும். அச்சட்டத்தின் படி அமெரிக்க பங்குதாரர்களிடமிருந்து நிதி திரட்டும்போது, ஊழல், மோசடி அல்லது தவறான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வெளிநாட்டு நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்.

உலகமயமாக்கல் காலத்தில் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வியாபாரம் செய்கிறார்கள், அந்த சூழலில் அமெரிக்க வாழ் மக்களின் முதலீடுகளை பாதுகாக்கவும்,அமெரிக்க மக்களின் முதலீடுகளை பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தமது சொந்த நலனுக்காகவோ / தவறான வழியிலோ அப்பணத்தை பயன்படுத்திவிடாமல் தவிர்க்கவும் இச்சட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால் அதானி நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தை மூலம் அமெரிக்கர்களிடம் திரட்டிய பணத்தை பயன்படுத்தி இந்தியாவில், சோலார் மின்சாரத் திட்டங்களை அமல்படுத்த 6 மாநில அரசு அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து ஊழல் செய்துள்ளது என அமெரிக்க நீதி மன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் அடக்கம். இந்த விவகாரம் தொடர்பாக அதானியை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது

அதானியின் வளர்ச்சியும் பொது துறையின் அழிவும்

2014-ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அரசு, இந்தியாவில் சோலார் எர்ஜி (சூரிய மின்சாரம்) திட்டங்களை வளர்க்க சில முன்னெடுப்புகளை செய்தது. அதன் மூலம் மாசுக் கட்டுப்பாடு, மாற்று எரிசக்தி (Alternative/Renewable Energy) நோக்கிய வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் பல மாநில அரசுகளுக்கு சூரிய மின்சாரம் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. அதாவது மாநில அரசுகள் அவர்களின் மின்சார தேவையின் ஒரு பகுதியை சூரிய மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. ( தமிழ்நாடு அரசு தனது மின் சாரத் தேவையில் ஒரு பகுதியை சூரிய ஒளி மின்சாரம் மூலம் போர்த்தி செய்து கொள்வது குறிப்பிடத்தக்கது )

சோலார் எர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற பொதுத்துறை நிறுவனம், தனியார் நிறுவனங்களிடமிருந்து சூரிய மின்சாரத்தை வாங்கி, அதை மாநில அரசுகளுக்கு விற்க நிர்பந்திக்கப்பட்டது.

அரசின் சூரிய மின் உற்பத்தி குறைக்கப்பட்டு அதானி / டாடா பவர் நிறுவனங்களிடம் சூரிய ஒளி மின்சாரம் வாங்கி அதனை விநியோகிக்கும் நிலைக்கு அரசின் பொதுத்துறை தள்ளப்பட்டது. இவ்வாறு பொதுத்துறை நிறுவனமான SECI, இந்திய அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையிலான ஒரு பாலமாக செயல்பட்டு தனியாரிடம் இருந்து சூரிய மின்சாரத்தை வாங்கி, அதை மாநிலங்களுக்கு விற்பது என தரகு வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதில் மிகப்பெரும் (MONOPOLY) ஏகபோகமாக அதானி நிறுவனம் வளர்ந்தது. இப்படி தான் அரசின் வசம் இருந்த மின் உற்பத்தி படிப்படியாக தனியார் நிறுவங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது

புதிய சூரிய மின்சக்தி ஒப்பந்தம் – மாநில அரசுகளின் தயக்கம்

அதானி மற்றும் அசூர் நிறுவனங்கள் இணைந்து SECI மூலம் சூரிய மின்சாரம் வழங்குவதற்கான ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினர். அந்த ஒப்பந்தத்தின் கீழ், பல மாநிலங்களுக்கு , SECI-யின் மூலம் சூரிய மின்சாரத்தை விநியோகம் செய்ய பேரம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் மாநில அரசுகள் இதிலிருந்த நிபந்தனைகள் காரணமாக ஈடுபாடுகாட்டடவில்லை.

உதாரணத்திற்கு, 25 ஆண்டுகளுக்கு நீண்டகால ஒப்பந்தங்களில் வாங்க பல மாநில அரசுகள் தயங்கின. மேலும் ஒரு முக்கிய காரணம், இந்த புதிய ஒப்பந்தத்தில் படி படியாக மின்சாரத்தின் விலை அதிகரிப்பதும், நிலையான விலை நிர்ணயம் இல்லாததும் தான். அதேபோல் இத்திட்டம் எதிர்பார்த்த லாபத்தையும் வருவாயும் மாநில அரசுகளுக்கு கொடுக்கவில்லை.

இத்தகைய சூழலில் எப்படியாவது மாநில அரசுகளின் தயக்கத்தை நீக்கி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என SECI- உடன் இணைந்த அதானி நிறுவனம் மாநில அரசுகள் /அரசு அதிகாரிகள் என வரிசையாக லஞ்சம் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது. இத்தகைய லஞ்சம் கொடுக்கும் பணிக்காக மட்டுமே அதானி நிறுவனம் சுமார் 2000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கியதாகவும் அமெரிக்காவின் விசாரணையில் தெரியவந்தது

அமெரிக்காவில் விசாரணையும் ஊழல் குற்றச்சாட்டும்

இதற்கிடையில் அதானி நிறுவனத்தின் போக்கை கண்டு, அமெரிக்க முதலீட்டாளர்கள் பதறவே, அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனங்கள் விசாரணையில் இறங்கின. 2023 மார்ச் மாதத்தில், அமெரிக்க அதிகாரிகளால் சாகர் அதானி மற்றும் அவரது குழுவினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களுடைய எலக்ட்ரானிக் சாதனங்கள் (Mobile Phone, Laptops) பறிமுதல் செய்யப்பட்டன. அந்த எலக்ட்ரானிக் சாதனங்களில், இந்தியாவில் எந்த அரசுகளுக்கு அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது பற்றிய விவரங்கள்/ PowerPoint பிரசென்டேஷனாக பதிவு செய்யப்பட்டிருந்தன. அதன் மூலம் 2,029 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.

இதில் ஆந்திர பிரதேசம் மட்டும் 1,750 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாடு- திமுக அரசின் நிர்வாகமும் இந்த லஞ்ச புகாரில் சிக்கியுள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள செபி (Securities and Exchange Board of India) போன்ற ஒரு அமைப்பு தான் அமெரிக்காவின் , செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்சஸ் கமிஷன் (USSEC) என்ற அமைப்பு . முதலில் அவர்கள் தனியாக ஒரு விசாரணையை நடத்தியுள்ளனர். பின்பு அதேபோல், அமெரிக்காவின் நீதித்துறை (Department of Justice) மற்றும் எப்பிஐ (FBI – Federal Bureau of Investigation) தனியாக விசாரணைகள் நடத்தின. இந்த மூன்று அமைப்புகளின் கூட்டு விசாரணையின் விளைவாக தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன. எனவே தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் மீது அமெரிக்கா பொறாமை படுகிறது அல்லது எதிர்கட்சிகளின் சதி என்று கூறுவது சரியானது அல்ல.

திமுக அரசும் அதானியும்

இன்றைய தினம், திமுக மற்றும் அதானி குழுமம் இடையிலான வணிக உறவுகள் குறித்து யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் பற்றி வெளிப்படைத்தன்மை இல்லாத செயல்பாடுகளே பலரால் விமர்சிக்கப்படுகிறது. தற்போது, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி, அதானி மீது வரும் குற்றச்சாட்டுகளைக் விசாரிக்க கோரி பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழகத்தை பொறுத்த வரையில் சில மாதங்களுக்கு முன்பு, திமுக அரசு அதானி நிறுவனத்துடன் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஏற்கனவே விசாரணையில் உள்ளது. ஆனால் இன்று வரை திமுக அரசு இதற்கு முறையான விளக்கம் கொடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு தமிழகத்தில் 42 ஆயிரம் கோடிகள் முதலீடு செய்ய அதானி குழுமம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்திய முதலாளித்துவத்தின் கோர முகம்

புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் (Neo-Liberal Policy) கீழ், பொதுமக்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.BSNL போல இந்திய மின்சார வாரியமும் இதையே எதிர்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தி திறன் 2 GW -இருந்து 92.5 GW (SOLAR POWER) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதானி குழுமம், டாடா பவர், பிரீமியர் எனெர்ஜிஸ் மற்றும் வாரி ஆகிய நிறுவங்கள் மட்டும் இத்துறையை ஆட்சி செய்து வருகின்றன.

அசுர வளர்ச்சிக் கண்டுள்ள இந்த துறையில் அதானி நிறுவனம் மட்டும் 10,000MW/ மெகாவாட் மின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. மேலும் 21 GW ஜிகாவாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் 45-GW எண்ணிக்கையை அடையும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி உற்பத்தி/விநியோகம் இரண்டிலும் ஆதிக்கம் செய்து வருகிறது.

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கான அடிப்படை மின்சக்தியும் மாற்றான மின் உற்பத்தியும் இன்று ஒரு தனியார் முதலாளிக்கு தாரை வார்க்கப்படுகிறது. வேலை வாய்ப்பின்றி , நிரந்தர தொழில் இல்லாமல் வாழ்க்கையில் பொருளாதாரப் பாதுகாப்பின்று இளைஞர்கள் தவிக்கும் நிலையில் மக்களின் வாழ்வாதாரமும் அரசின் சொத்துகளும் இங்கு தனியாரின் லாப வெறிக்கு பணயம் வைக்கப்படுகின்றன.

விரைவில் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதன் வருவாய் யாருக்கு கிடைக்கும் என்பதை கடந்த 10 ஆண்டு வரலாறு சொல்கிறது. இதனை விடவும் ஆபத்தானது என்னவென்றால் இடதுசாரிகள்/ கம்யூனிச இயக்கங்கள் தவிர்த்து இந்த அநீதியை எதிர்த்து போராட வேண்டிய பல ஜனநாயக சக்திகள் மௌனம் காத்துவருவதுதான்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும் – மக்கள் போராட்டடமும்

இன்றைய சர்வதேச அரசியலில் அமெரிக்காவுக்கும் – பிரிக்ஸ் கூட்டணிக்கும் (US vs BRICS) இடையே வெளிப்படையான போராட்டம் நடந்து வருகிறது. சீன, இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களின் வளர்ச்சியை அமெரிக்க அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது. அமெரிக்க டாலரை எதிர்க்க முயன்றால் பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி / இறக்குமதிக்கு 100% வரி விதிக்கப்படும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

சிலர் இதை அதானி மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக கருதுகின்றனர்.ஆனால் உண்மையில் அமெரிக்க முதலீட்டாளர்களுடனான அதானியின் தொடர்பும் இரட்டை முகமும் இந்த விவகாரத்தில் அம்பலமானது. மேலும் இந்த விவகாரத்தி மாநில அரசுகள் ஒன்றை அரசுகள் என அனைவரும் உடைந்தையாக இருந்திருப்பது அம்பலப்பட்டுள்ளது. அதானி முறைகேடுகளை விசாரிக்க நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருவதால், மோடி அரசுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதன் பங்குதாரர்களைத் தக்கவைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளன.

ஆகவே, இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில், பாட்டாளி வர்க்கம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நட்பு சக்திகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைப்பது அவசியம். அதே போல், ஊழல், ஏகபோகம் , கார்ப்பரேட் ஆதிக்கம் என மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சிதைந்து வரும் முதலாளித்துவ அமைப்பு பற்றி தெளிவுபடுத்துவதும் அவசியம்’ என்கிறார்.

நீதி கிடைக்குமோ இல்லையோ போராட்டம் தொடரும்.

Leave a Comment