உச்சம் பெறும் ரகசியம்
மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த கேளிக்கை,, விளையாட்டு போன்ற பல்வேறு வழிகளில் ஆனந்தம் அடையும்போது ஏற்படாத குற்ற உணர்வு, காமத்தினால் கிடைக்கும் ஆனந்தத்தில் உருவாகிறது. செய்யக்கூடாத ஒரு தவறு செய்துவிட்டது போல் உணர்கிறான். இது சரிதானா..?
மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவிடம் ஒரு பெண் தயங்கித்தயங்கி தன் சந்தேகம் கேட்டாள்.
’’40 வயதிலும் என் உடல் காமத்தை எதிர்பார்க்கிறது.. எவரிடமும் பேசுவதற்கும் அவமானமாக இருக்கிறது’’ என்று தலை குனிந்தபடி பேசினாள்.
அவள் முகத்தைப் பார்த்து பேசினார் ஞானகுரு. ’’80 வயதானாலும் வயிறு பசிப்பது போன்று உடலும் பசிப்பது தவறு இல்லை. உலகில் மனிதன் மட்டுமே குழந்தை பெறுவதைத் தாண்டியும் காமத்தை ஆனந்தத்திற்கு பயன்படுத்துகிறான். சந்தோஷம், ஆனந்தம் தரும் எதுவும் தவறு இல்லை.
அதே நேரம், இனிப்பு பிடிக்கிறது என்பதற்காக அதிகம் எடுத்துக்கொண்டால் ஆபத்து. அப்படித்தான் நீ காமத்தையும் அணுகவேண்டும். ஆணும் பெண்ணும் பிறர் துணையின்றியும் காமத்தை வெல்ல முடியும் என்பதை புரிந்துகொள். நிறைவேறாத ஆசை பெருங்கோபமாக மாறி விடும். எனவே, காமத்தை தீர்ப்பதற்கு இன்னொரு நபர் வேண்டும் என்று காத்திருப்பதில் அர்த்தம் இல்லை.
வாழ்க்கை என்பது குடும்பம், பணம், ஆரோக்கியம், கேளிக்கை, அன்பு போன்ற பல்வேறு தன்மைகள் கொண்ட முழுமையான ஒரு சக்கரம். இதில் காமத்துக்கும் ஓர் இடம் நிச்சயம் உண்டு. வாய்ப்பு கிடைக்கும் நேரம் எல்லாம் ஆனந்தமாக அனுபவி. காமத்துடன் கலந்துவிடு.
அதேநேரம், காமத்தில் மட்டுமே வாழ்க்கை இல்லை. மலர்களை ரசிப்பது போன்று காமத்தையும் அனுபவித்து நகர்ந்துவிடு. இதில் அச்சப்படவோ, மகிழவோ எதுவும் இல்லை. உன் காமத்துக்கு பிறரை இரையாக்கவோ அல்லது பிறரது இரையாகவோ மாறிவிடாதே. பரஸ்பரம் அன்பைக் கொடுத்து அன்பைப் பெறு. தனிமையிலும் உன்னால் காமத்தை அனுபவிக்க இயலும். உண்மையில் அதுவே உச்சம் பெற வழி’’ என்று சொல்லிவிட்டு மலர்களை ரசிக்கத் தொடங்கினார் ஞானகுரு.