எம்.ஜி.ஆரின் மதுவிலக்கு சட்டம்

Image

நினைவு நாளில் ஒரு வரலாறு

இந்த உலகிலேயே மக்கள் நன்மையைப் பிரதானப்படுத்தி சினிமா எடுத்த ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். எம்.ஜி.ஆரின் கேரக்டருக்கு ஏற்பவே கதை, வசனம், பாடல், காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டன. திரைப்படமாக இல்லாமல் திரைப்பாடமாகவே தன்னுடைய சினிமா வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் எம்.ஜி.ஆர். மதுவை தொட்டதில்லை. தனது ரசிகர்கள் மட்டுமின்றி மக்களும் மது, சிகரெட் போன்ற போதை பழக்கத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே சினிமாவில் இவற்றைத் தவிர்த்தார். அதனாலே எம்.ஜி.ஆர். மீது மக்கள் பேரன்பு கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தால் தங்கள் குறைகள் எல்லாம் தீர்ந்துபோய்விடும் என்று நம்பினார்கள். அதனாலே எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியதும் ஆட்சியில் அமர்த்தினார்கள்.

எம்.ஜி.ஆரும் மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ‘என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவேன்’ என்று சூளுரைத்தார். மதுவிலக்கை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் சட்டத்திருத்தம் கொண்டுவந்தார்.

மது குடித்த குற்றத்திற்காக முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை. இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள்’ என்று அறிவித்தார்.

சினிமாவைப் போலவே ஆட்சியிலும் இதனை எளிதாக சாதித்துவிட முடியும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். மக்கள் நன்மைக்காக கொண்டுவரும் சட்டம் என்பதால் மக்கள் தன்னுடைய சட்டத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தார். ஆனால், இது எம்.ஜி.ஆருக்கு கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. சினிமா நடிகரை ஆட்சியில் அமர்த்தினால் இப்படித்தான் கோமாளித்தனமாக சட்டம் போடுவார்கள் என்று அத்தனை எதிர்க் கட்சிகளும் கிண்டல் செய்தார்கள், எதிர்த்து நின்றார்கள். அதனால் மதுவிலக்கு சட்டத்தை தளர்த்த வேண்டிய சூழலுக்கு எம்.ஜி.ஆர். ஆளானார்.

மக்களுக்கு நன்மை செய்வதற்கு வரும் நல்ல தலைவர்களைக் கூட அரசியலும் பதவியும் மாற்றிவிடுகிறது என்பதற்கு எம்.ஜி.ஆர். ஒரு சிறந்த உதாரணம். சர்வாதிகாரியாக மாறியிருந்தால் அவர் இந்த அதிரடி சட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், ஜனநாயகவாதி என்பதால் மக்களுக்கு மதிப்பளித்தார். எந்த மதுவை ஒழிப்பதற்கு கடுமையான சட்டம் கொண்டுவந்தாரோ, அதே எம்.ஜி.ஆர். ஆட்சியில் தான் சாராயக்கடைகளும் கள்ளுக் கடைகளும் திறக்கப்பட்டன.

இன்று அவரது நினைவு நாள். தமிழகம் மதுவால் தள்ளாடும் இந்த நாளில் இப்படியொரு சட்டம் கொண்டுவந்து மக்களை மதுவிடம் இருந்து காப்பாற்ற நினைத்த எம்.ஜி.ஆரின் புரட்சியை நினைத்துப் பார்ப்போம்.

Leave a Comment