நான்கு சோதனைகளை சாதனைகளாக்கிய எம்.ஜி.ஆர்.

புரட்சித்தலைவர் பிறந்த நாளில் சைதையார் சிந்தனை

இன்று மனிதநேயம் மலர்ந்த நாள். கருணை பிறந்த நாள். முதலேழு, இடையேழு, கடையேழு வள்ளல்கள் அரசு செல்வத்தையே அள்ளிக்கொடுத்தார்கள். ஆனால் புரட்சித்தலைவர், உழைத்து சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் சக மனிதனுக்கு கொடுத்து உதவினார். இளமையில் வறுமையில் வாடியபோதும் மனிதநேய சிந்தனையை கடைப்பிடித்த புரட்சித்தலைவரே எல்லோரையும் விஞ்சிய முதல் வள்ளல் என்று சொல்ல வேண்டும். 

  • பொழுதுபோக்கு அம்சமான சினிமாவை, சிந்திக்கவைக்கும் அறிவாயுதமாக மாற்றியவர் புரட்சித்தலைவர். ஞானிகள், அறிஞர்கள், தலைவர்களின் சிந்தனைகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த வாத்தியார். பெண்களுக்கு மரியாதை, முதியோருக்கு மதிப்பு, நெருக்கடியிலும் நேர்மை, சேவை, மனிதநேயம் போன்ற நல்ல பண்புகளை பாடலாக, வசனமாக, காட்சியமைப்பாக சினிமா மூலம் விதைத்தவர்.
  • சத்துணவுத் திட்டம், தன்னிறைவுத் திட்டம், தெலுங்கு கங்கை திட்டம், இட ஒதுக்கீட்டுப் புரட்சி, ரேசன் கடைகள், தனியார் பொறியியல் கல்லூரிகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்வரை உதவித் தொகை என்று புரட்சித்தலைவரின் புதுமைத் திட்டங்களை எல்லாம் பட்டியலிட ஏடு போதாது.  போட்டித் தேர்வின் மூலம் VAO பதவியை கொண்டுவந்தார். புரட்சித்தலைவர் மலர்ப்பாதையில் நடந்தவர் இல்லை. முட்பாதையில் நடந்து சோதனைகள், சவால்கள், இடையூறுகளை முறியடித்தவர் என்பதற்கு சான்றாக நான்கு உதாரணங்களைச் சொல்கிறேன்.
  • திமுகவின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்ட எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 1967 தேர்தலில் எம்.ஜி.ஆரால் பிரச்சாரம் செய்ய முடியாது என்ற நிலை இருந்தபோது கழுத்தில் சுடப்பட்டு கட்டுப்போட்டிருந்த எம்.ஜி.ஆர். போஸ்டர்கள் தமிழ்நாடு முழுக்க ஒட்டப்பட்டன.
  • அந்த போஸ்டரால் கிடைத்த அனுதாப ஓட்டுகள் காரணமாகவே திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார். தமிழகத்தின் தலையெழுத்தை ஒரே ஒரு போஸ்டரில் மாற்றிக் காட்டியவர் எம்.ஜி.ஆர். இந்த உண்மையை சொன்னவர் அண்ணா.
  • அதேபோன்று புரட்சித்தலைவரின், ‘உலகம் சுற்றும் வாலிபன்’படத்துக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. படம் வெளிவந்தால் நான் புடவை கட்டிக்கொள்கிறேன் என்று சவால் விட்டார் மதுரை மேயர் முத்து. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்ற டைட்டில் பாடல் மூலம் பதில் சொன்னார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் சென்னையில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதும், உடனடியாக மும்பைக்குச் சென்று படத்தை முடித்தார் புரட்சித்தலைவர்.
  • படப்பெட்டியை எரிப்பதற்கு திட்டமிடப்படுவதை அறிந்ததும், முதலில் போலி படப் பெட்டிகள் அனுப்பப்பட்டன. அதன் பின்னர் நிஜமான படப் பெட்டிகள் அனுப்பி படத்தை திரையிட்டு மெகா வெற்றி பெற்றார்.
  • 1980 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. ‘என்ன தவறு செய்தேன். என் ஆட்சியைக் கலைத்தார்கள்? என்று நீதி கேட்ட எம்.ஜி.ஆருக்கு 162 தொகுதிகளில் மக்கள் வெற்றியை பரிசாகக் கொடுத்தார்கள்.
  • அதேபோல், 1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அச்சமயம் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார், உயிரோடு இருந்தாலும் செயல்பட முடியாது என்றெல்லாம் புரளி கிளப்பினார்கள். ஆனால், மருத்துவமனையில் படுத்தபடியே 1984 தேர்தலில் 195 தொகுதிகளில் வென்று சரித்திர சாதனை படைத்தார். 
  • மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் எம்.ஜி.ஆர். இரட்டைஇலை மட்டும்தான். அதேபோல் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்ததெல்லாம் மக்கள் நலன் மட்டும்தான். அதனாலே மரணம் வரையிலும் ஒவ்வொரு தேர்தலிலும் புரட்சித்தலைவரின் செல்வாக்கும் வாக்குவங்கியும் உயர்ந்துகொண்டே போனது.
  • சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது, ஓட்டுக்குப் பணம் கொடுப்பது எம்.ஜி.ஆர் காலத்து அரசியலில் இல்லை. எம்.ஜி.ஆர் கட்சி என்றுதான் திமுகவுக்கு ஓட்டுப் போட்டார்கள். அதேபோன்று எம்.ஜி.ஆர். கட்சி இரட்டைஇலை என்றே இன்றுவரை அதிமுகவுக்கு ஓட்டு போட்டு வருகிறார்கள்.
  • அண்ணா திமுக தொடங்கிய நாள் முதல் இன்றுவரை இலட்சக்கணக்கான சாமானியர்கள் பச்சை மையில் கையெழுத்திடுகின்ற பெரும்பாக்கியத்தை பெற காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். இப்படி வரலாற்றில் சாதனை சரித்திரம் படைத்தவரின் பிறந்தநாளை மனிதநேய நாளாக அண்ணா திமுகவும், எம்.ஜி.ஆர் பக்தர்களும் தொடர்ந்து கொண்டாடுவோம்.

Leave a Comment