எம்ஜிஆர் என் ஆரோக்கிய வழிகாட்டி

Image

ஆரோக்கியம் பேசுகிறார் பேராசிரியர் மு. ராமசாமி

நாடக ஆசிரியர், நாடக செயற்பாட்டாளர், நாடக – திரைப்பட குணச்சித்திர நடிகர் என்று அறியப்படுபவர் பேராசிரியர் மு. ராமசாமி. 35 நாடகங்களும் 45 நூல்களும் எழுதி இருக்கிறார். 75 வயதிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மு.ராமசாமி, தனது ஆரோக்கிய ரகசியங்களை பேசுகிறார்.

“நான் 45 ஆண்டுகளாக நாடகங்கள், இயக்கங்கள் என்று இயங்கி வருகிறேன் திரைப்படத்தில் அறிமுகமாகி இதுவரை 30 படங்கள் போல் நடித்திருக்கிறேன். நாடக உலகில் பெரிய உழைப்பைச் செலவிட்டிருந்தாலும் திரைப்படத்தில் நடித்த பிறகுதான் என் முகம் பரவலாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. வெளியில் பார்க்கிற போதெல்லாம் அந்தப் படத்தில் நடித்தவர் தானே என்று திரைப்படங்களின் பெயர்களைத் தான் அடையாளம் சொல்கிறார்கள். திரைப்பட ஊடகத்தின் வீச்சை அதனால் அறிய முடிகிறது.

நான் நாடக நடிப்பு, திரைப்பட நடிப்பு மட்டுமல்லாமல் நாடகச் செயல்பாடுகளிலும் இருப்பவன். நான் தொடர்ச்சியாக வெளியூர் பயணங்கள் செயல்பாடுகள் என்று இருப்பவன். சிறு வயது முதல் எனது உணவு பழக்கம் இப்படித்தான். அதாவது,என் உடலுக்கு எது ஏற்றுக் கொள்கிறதோ அப்படிப்பட்ட உணவையே சாப்பிடுவேன். இந்த உணவு பிடிக்கும், இது பிடிக்காது என்ற எந்த வகைப்பாடும் எனக்குக் கிடையாது.

அப்பாவின் மரபு வழியாக எனக்கும் சர்க்கரை நோய் இருக்கிறது இருந்தாலும் அதனை உடலில் ஓர் இயல்பாக எடுத்துக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறேன். காலையில் தினமும் நடைப்பயிற்சி செல்கிறேன். வெளியில் இருந்தால் கூட ஏதாவது வகையில் நடந்து விடுவேன். காலையில் எழுவது, இரவு உறங்குவது போன்றவற்றில் ஒரு முறையைக் கடைப்பிடிக்க விரும்புகிறேன்.

எனக்கு இப்போது 75 வயதாகிறது. நினைத்ததை எல்லாம் சாப்பிட முடியாது. என் வயதுக்கு உடலுக்கும் என சில ஏற்பு சக்தி இருக்கிறது. அதற்கு ஏற்றபடி தான் சாப்பிட வேண்டும்.

மற்றபடி பத்தியம் போல் எனக்குப் பிடிக்காதது என்று எதுவும் இல்லை. என்னிடம் எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. டீ, காபி, பீடி, சிகரெட், பொடி, மது என்று எந்தப் பழக்கமும் என்னிடம் கிடையாது. இப்போது சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால், இதற்கெல்லாம் காரணம் எம்ஜிஆர் தான் என்பேன். நான் சின்ன வயதிலேயே எம்ஜிஆர் ரசிகன்.நான் இரண்டாவது படித்த போதே எனக்குள் எம்ஜிஆர் வந்துவிட்டார்.

தெய்வத்தாய் படத்தில் ஒரு பாடல் வரும். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று வரும் அந்தப் பாடலில், ‘வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும், கோழை குணம் மாற்று தோழா,  என்றும் ‘நாளை உயிர் போகும் – இன்று போனாலும், கொள்கை நிறைவேற்று தோழா’ என்ற வரிகள் எனக்குள் பதிந்து விட்டன.

அதற்குப் பிறகுதான் அண்ணா, பெரியார், கலைஞர்  எல்லாம் வந்தார்கள். கருத்து ரீதியாக எனக்குள் முதலில் நுழைந்தவர் எம்ஜிஆர் தான். நான் இதுவரை கருத்து  சார்ந்த நாடகங்கள் என்று எழுதி இயக்கி வந்தாலும் எனக்குள் முதலில் கருத்தை விதைத்தவர் எம்ஜிஆர் தான்.

அவர், ‘உடம்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும் உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்திச் சொன்னதும் எனக்குள் பதிந்து விட்டது. அதுமட்டுமல்ல அவர் காபி, டீ குடிக்காமல் இருப்பதும் மது அருந்தாமல் இருப்பதும் என்னை மிகவும் கவர்ந்தது. அது எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே குடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இதை நான் பிறரிடம் வலியுறுத்த முடியாது. எங்களது குழுக்களில் ஒத்திகையில் கூட இடைவெளிகளில் போய் மது, புகை என்று கிடைக்கிற இடைவெளியில் சென்று வருவார்கள். அவர்களுடன் நான் ஒட்ட முடியாது, அவர்களும் நம்மிடம் ஒட்ட மாட்டார்கள். சற்றே ஒதுங்கி விடுவார்கள். அப்படி அவ்வப்போது வெளியில் சென்று வருவார்கள். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நான் இதுவரை அப்படி இல்லாமல் தான் இருக்கிறேன் .

என் மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இந்தப் பழக்கங்கள் எல்லாம் இல்லாமல் இருப்பதுதான்.

என்னைப் பார்க்கிற பலரும் சொல்வார்கள் ‘பரவாயில்லை,உங்கள் உடம்பு இப்படி இருப்பதற்கு நாடக ஈடுபாடு தான் காரணம். நீங்கள் நாடகக்காரர் உங்கள் உடம்பு தாங்கும்’ என்பார்கள். நாடகம் என்கிற போது சில கட்டுப்பாடுகளை எனக்குள் வைத்துக் கொள்வேன். அந்தப் பழக்கம் அப்படியே தொடர்ந்து வந்துவிட்டது.

இதையே நான், “மனதுக்கு பிடித்து ஒரு காரியத்தைச் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நன்றாக உணர்வீர்கள். நன்றாகவும் இருப்பீர்கள்” என்று சொல்வேன்.

மனம் விரும்பி மகிழ்ச்சியாக காரியமாற்றுவது தான் எனது ஆரோக்கியத்தின் ரகசியம் என்று சொல்வேன். இது உண்மை இதை மறைக்க வேண்டியது கிடையாது.

தினசரி உணவு என்பதைப் பற்றி கூறுங்கள் என்றால் நான் சாதாரணமாக வீட்டில் கிடைப்பதைச் சாப்பிடும் சாதாரண மனிதன்தான். மிகப் பிடித்தது பிடிக்காது என்றெல்லாம் எனக்குக் கிடையாது. .கிடைப்பதை மகிழ்ச்சியாக உண்பதுதான் என் பழக்கம்.

நம் உடல் பழையதாகிக் கொண்டிருக்கிறது. மனதை மலர்ச்சியாக வைத்துக் கொண்டு அதை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் இயலாமை வரும். புதிது புதிதாக நோய்கள் வந்து கொண்டே இருக்கும். அதை உடலின் இயல்பாக எடுத்துக் கொண்டு எதிர்கொண்டு நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல இன்னும் வரும் அதையும் எப்படி எதிர்கொள்வது என்று தான் நான் சிந்திக்க வேண்டும்.

இந்த உலகத்தில் ஒரு கால் இல்லாதவனும் வாழ்கிறான். ஒரு கை இல்லாதவனும் வாழுகிறான் இரண்டு கை, இரண்டு கால் இல்லாதவனும் வாழ்கிறான். அவன் எப்படி அதற்கேற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்கிறான், அத்துடன் வாழ்வதற்கு எதைக் கண்டுபிடிக்கிறான் என்று பார்க்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை பிடித்த செயலில் ஈடுபட்டால் மனம் மகிழ்ச்சியாகும். மனம் மகிழ்ச்சியாக இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது ஓர் அடிப்படை விதி. இதை நான் பின்பற்றி வருகிறேன்.” என்றார்.

  • அருள்செல்வன்

Leave a Comment