• Home
  • அரசியல்
  • எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் சாராய வரலாறு

எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் சாராய வரலாறு

Image

பேசுவாங்க, செய்ய மாட்டாங்க.

கள்ளச்சாராயத்தின் சாவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், குடிகாரர்களை உருவாக்கியது கருணாநிதி என்றும் எம்.ஜி.ஆர். என்றும் திராவிடக் கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதில் எது உண்மை..?

கள்ளச்சாராயம் காலம் காலமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்கவே இருக்கத்தான் செய்கிறது. சுதந்திரத்திற்கு முன்பே இந்த சாவுகள் தொடங்கிவிட்டன. 1937-ல் ராஜாஜியால் முதல்முதலில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஓமந்தூர் ராமசாமியால் 1948-ல் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அதற்கு பின்பு 1967-ல் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணா மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தார்.

அண்ணா மறைவிற்கு பின் முதல்வரான கருணாநிதி நிதிநெருக்கடியால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி போதிய நிதி கொடுக்காததால் “தற்காலிகமாக” மதுவிலக்கு சட்டத்தை தளர்த்தினார்.

1971-ல் மீண்டும் சாராய கடைகளை திறந்துவிட்டார். கடும் எதிர்ப்பை சம்பாதித்த கருணாநிதி 1974-ல் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தினார்.

அடுத்து எம்ஜியார் வந்தார். மீண்டும் அதே நிதிநெருக்கடி, கள்ளச்சாராய சாவுக் கணக்கைக் காட்டி 1981 மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை தளர்த்தினார். சாராயக் கடைகளை திறந்துவிட்டார். அவரே 1983-ல் டாஸ்மாக்கை திறந்தார். எம்ஜியார் மறைவுக்கு பின் 1989-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி மலிவு விலை மது கொண்டுவந்தார்.

அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை தடை செய்தாலும் கள்ளச்சாராய மரணத்தை காரணம் காட்டி மீண்டும் சாராய கடைகளை திறந்தார். மேலும் 2003-ல் ஜெயலலிதா அரசே டாஸ்மாக் மூலம் நேரடியாக மதுவை விற்பனை செய்ய தொடங்கியது.

இந்த டாஸ்மாக்கிற்குச் சரக்கு சப்ளை செய்வதில் சசிகலா தொடங்கி டி.ஆர். பாலு வரையிலும் என்று சகல கட்சியினரும் மது தொழிற்சாலை நடத்திவருகிறார்கள். இன்றைய நிலையில் எதிர்கட்சியாக இருக்கும் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று குரல் கொடுக்கும் திராவிடக் கட்சி ஆளும் கட்சியாக மாறியதும் அந்த உரிமைக்குரலை மறந்துவிடும்.

கேட்டால் நிதி தட்டுப்பாடு என்பார்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என்று எல்லோருமே எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் அட்டும் மதுக்கடைகளை ஒழிப்போம் என்று சொல்வார்கள். ஆளும் கட்சியாக வந்ததும் அதை மறந்தே விடுவார்கள்.

இப்படிப்பட்ட தலைவர்களைப் பெற என்ன தவம் செய்துவிட்டோம்.

Leave a Comment