எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், மு.க.முத்து ரசிகர் மன்றம்..?

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 56

1972. அக்டோபர் 8 அன்று லாயிட்ஸ் ரோடு கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பேசிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ‘’ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்த பிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா? என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது? மாவட்ட, வட்ட, கிளைக்கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது..?

ராமச்சந்திரன் சினிமாவில் சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக் காட்டு. இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை, நாமே கேட்டுக்கொள்வோம்.

இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்த கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.

இந்தக் கேள்வி வருகிறது என்பதற்காக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களையும் மு.க.முத்து ரசிகர் மன்றங்களையும் முன்னால் நிறுத்தி பிரச்னையை உருவாக்குகிறார்கள். உண்மை இது கிடையாது.

மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவியில் இருப்பவர்கள் குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால் கணக்குக் காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தன என்று விளக்கமும் சொல்ல வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி அதற்காக ஒரு குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கவேண்டும். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு விளைவித்தவர்களையெல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம்…’’ என்று உரிமைக் குரல் கொடுத்தார்.

அடுத்து நடந்தது..?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment