அக்டோபர் 8ம் தேதி புரட்சி

தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான ஆட்சி நடக்க வேண்டும், மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டு உரிமைக் குரல் எழுப்பிய தினம் 1972 அக்டோபர் 8-ஆம் தேதி. அன்றைய நாளில் நடந்த வரலாற்று சம்பவங்களுக்கு நேரடி சாட்சி எனும் வகையில் இதனை பகிர்ந்துகொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை முதல்வராக அமரவைத்ததும், 1971 சட்டமன்றத் தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் வாக்குறுதி கொடுத்து 184 இடங்களில் வெற்றி பெற வைத்ததும் புரட்சித்தலைவரே.
இந்த காலகட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், ‘திமுக ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் பெருகியோடுகிறது’என்று கடுமையாக விமர்சனம் செய்தார். மக்களிடம் வாக்குறுதி கொடுத்து பெற்ற வெற்றியில் அமைந்த ஆட்சியில் இலஞ்சம், ஊழல் முறைகேடு என்ற குற்றச்சாட்டுகளுக்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிக்கு எம்.ஜி.ஆர். ஆளானார்.
இந்நிலையில், 1972 அக்டோபர் 1-ஆம் தேதி புரட்சித்தலைவரின் காரை மறித்து கட்சிக்குள் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னேன். அவற்றை விசாரித்த புரட்சித்தலைவர், முழு உண்மை என்பதை அறிந்தவுடன் 8-ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் அண்ணா சிலை திறக்கவும், லாயிட்ஸ் காலனியில் இரவு பொதுகூட்டத்தில் பேசவும் தேதி கொடுத்தார்.
புரட்சித்தலைவர் என்ன பேசப்போகிறார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருந்தது. திருக்கழுக்குன்றம் மற்றும் சென்னை லாயிட்ஸ் காலனியில் ஒரே கருத்தை வலியுறுத்திப் பேசினார். அவற்றிலிருந்து முக்கியமான சில பகுதிகளை மட்டும் கொடுக்கிறேன்.
“திருக்கழுக்குன்றத்தில் அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன். ‘எம்ஜிஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம்ஜிஆர்’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் திமுக இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே உனக்கு துணிவிருந்தால் நான்தான் திமுக என்று சொல், நான் மறுக்கவில்லை. நான் மட்டும் திமுக என்றால்தான் கேள்வி.
தேர்தல் நேரத்தில் திமுகழகத்திற்கு வாக்குத் தாருங்கள். இன்னின்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமையில்லையா?
கழகத்திற்கு வாக்கு தாருங்கள். இன்னின்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னவனே அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்கவேண்டுமென்று விரும்புவதற்கு, சொல்வதற்கு உரிமை இல்லையா?
யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. யாருக்கோ என்னுடைய கேள்வி குழப்பத்தை உண்டாக்குகிறது. மந்திரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற, ஒன்றிய, நகர, கிளைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கணக்கு காட்ட வேண்டும் என்று சொல்கிறோம்;
ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா என்று கேட்கக்கூடாதா? என் மனைவி, உறவினர்களுக்கு பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது? மாவட்ட, வட்ட கிளைக்கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது?
ராமச்சந்திரன் சினிமாவில் சம்பாதிக்கிறான்; நீ சம்பதித்தால் அதற்கு கணக்கைக் காட்டு. இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை, நாமே கேட்டுக்கொள்வோம்.
இந்த தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்த கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன், மக்களை சந்திப்பேன்.…’’ என்று புரட்சி குரல் எழுப்பினார்
அக்டோபர் 8ம் தேதி புரட்சித்தலைவர் கணக்கு கேட்டதை அடுத்தே கட்சியிலிருந்து நீக்கம், அதிமுக உதயம் போன்ற அரசியல் மாற்றங்கள் நடந்தேறின. இந்த அரசியல் மாற்றங்களுக்கு நானும் ஒரு முக்கியமான காரணம் என்பதை எண்ணி இன்றும் பெருமிதப்படுகிறேன்.
- சைதை துரைசாமி, முன்னாள் மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி.