ஹெல்த் டெக்னிக்
இந்த அவசர யுகத்திற்கு யோகாசனம், தியானம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் இன்றியமையாதவை. குறிப்பாக, மனநலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு யோகாசனப் பயிற்சிகளும், தியானமும் மருத்துவர்களாலேயே சிபாரிசு செய்யப்படுகிறது. இதில் தியானம் மனதை அமைதியடையச் செய்கிறது. மனதில் ஏற்படும் எண்ண அதிர்வுகளை சீராக்குகிறது. மன அழுத்தத்தைப் போக்குகின்றது.
மொத்தத்தில், தியானம் என்பது நம்முடைய வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலை ஆகும். தியானம் என்பதற்கும் மனம் ஒருநிலைப்படுவதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. மனம் ஒருநிலைப்படுவது என்பது மனதை ஒரு விஷயத்தில் செலுத்தி அதனையே பற்றி ஆழ்ந்து சிந்திப்பதாகும். ஆனால், தியானம் என்பது மனதை கடவுளிடம் செலுத்தி கடவுள் சம்பந்தமான சிந்தனைகளுடன் நமது ஆத்மாவைப் பற்றிச் சிந்திப்பதுமேயாகும்.
மனதை ஒருநிலைப்படுத்துவதில் மனதைத் தவிர உடலில் பிற உறுப்புகளும் செயல்படுகின்றன. வெளியுலகத்தில் நடப்பதை உணரும் வகையில் அமையும் உறுப்புகள் கண்கள், மூக்கு போன்றவை. ஆனால், தியானத்தில் மூளை மட்டுமே செயல்படும் பிற உறுப்புகள் அனைத்தும் வெளியுலகத்தில் நடப்பவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அதாவது, சிந்தைனைகள் அனைத்தும் ஆத்மாவைப் பற்றியே இருக்கும். இதனால் வெளியுலகத்தில் நடப்பவை நமக்குத் தெரியாது.
தியானத்தை முறையாகக் கற்க வேண்டுமெனில் குரு ஒருவர் அவசியம். இருப்பினும் சில வழிமுறைகள் மூலம் தியானம் மேற்கொள்ளலாம். தியானம் ஆரம்பிக்கும் முன் குளிப்பது அவசியம். தியானத்திற்கு முக்கியமாய் அமைதியான இடமும், நேரமும் அவசியம். தியானத்திற்கு அதிகாலை நேரம் மிகச் சிறப்பானது. விருப்பப்பட்டால் மாலை வேளையிலும் செய்யலாம். தியானம் ஆரம்ப நிலையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு மிகாமல் செய்யலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
சரியான முறையில் தியானம் செய்தால் அற்புதமான அளவில் உடலும் உள்ளமும் ஒருநிலைப்படும். தியானத்துக்கு முன், இயல்பான முறையில், உடலைத் தளர்த்திக்கொள்வது நல்லது. அதுபோல் மனதையும் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். தியானத்தைத் தினமும் செய்தால், உடலும், மனமும் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் மற்றும் சுறுசுறுப்புடனும் காணப்படும். நாம் தியான நிலையில் இருந்து சுவாசிக்கும்போது, தூய்மையான காற்று உள்ளே சென்று மார்பு பகுதியை விரிவடையச் செய்து, கோபம் வராமல் கட்டுப்படுத்துகிறது.
நாம் கற்றுக் கொள்ளும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. தீய எண்ணங்களை விரட்டி, நல்ல எண்ணங்களின் செயல்பாட்டை கொண்டுவந்து, மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு இளமையையும் தருகிறது.
மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடவைக்கிறது. கவலைகளைப் போக்கி சகிப்புத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது. நம் மனதை அமைதிபடுத்தி, படிப்பு மற்றும் வேலைகளில் கவனங்களை அதிகரிக்கச் செய்கிறது. தசைகளின் இறுக்கம் மற்றும் மனக்கவலைகளைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோயகள் வராமல் தடுக்கிறது.
ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, இதயம் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது.