- சுலப தீர்வுகள் இங்கே…
ஜலதோஷம் வந்ததுமே டாக்டரிடம் போவது, மெடிக்கல் ஷாப்பில் போய் மாத்திரைகள் வாங்கி விழுங்குவது, கண்ட கண்ட தைலங்களை தடவுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கெல்லாம் அவசியமே இல்லைங்க..
மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் எடுக்காவிட்டாலும் ஜலதோஷம் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்பது உண்மை. இந்த நேரத்தில் ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற அசெளகரியங்களுக்குப் பயந்தே பலரும் மருத்துவமனையை நாடுகிறார்கள்.
ஜலதோஷத்தை உடலின் ஒரு சுத்திகரிப்புப் பணியாகவே பார்க்கவேண்டும். எனவே ஜலதோஷத்தால் உருவாகும் சின்னச்சின்ன தொந்தரவுகளைத் தாங்கிக்கொள்வதும், பாட்டி வைத்தியத்தை கையாள்வதும் மட்டுமே போதுமானது. இங்கு கொடுத்துள்ள பல்வேறு வைத்திய நிவாரணங்களிலிருந்து, அவரவர் உடம்புக்கு ஏற்றவற்றை தேர்வு செய்து கடைப்பிடிக்கலாம்.
சுக்கு மல்லி காபி
பொதுவாக சுக்கு மல்லி காபி ஜலதோஷத்துக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. எனவே, ஜலதோஷம் ஏற்பட்டதும் இரண்டு அல்லது மூன்று வேளை இதனை குடிக்கலாம். பொடி வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே தயார் செய்யலாம்.
இதற்கு வர கொத்தமல்லி – 15 ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சுக்கு – 5 துண்டு, ஏலக்காய் – 15 மற்றும் நாட்டுச்சர்க்கரை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் சுக்கு துண்டை இடித்து நன்றாக பொடித்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் கொத்தமல்லி, ஏலக்காய், மிளகு போன்றவற்றையும் சேர்த்து லேசாக அரைத்துக்கொண்டாலே போதும்.
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் சுக்கு மல்லி பொடி போட்டு அத்துடன் தேவையான அளவுக்கு ,நாட்டு சக்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். சளி ,இருமல் தொண்டை வலிக்கு இதமாக இருக்கும்.
இஞ்சி கசாயம்
இஞ்சி சாறு, ஆடாதொடை இல்லை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலந்து தினமும் காலை, மாலை குடிப்பதும் ஜலதோஷத்துக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுகிறது.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை பழம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து சிறு துளி தேன் சேர்த்து கலக்கி தினமும் இருவேளை சாப்பிடவும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கற்பூர தைலம்
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அதில் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து இறக்கி வைக்கவும். வெதுவெதுப்பாக இருக்கும்போதே எண்ணெய்யை எடுத்து நெற்றி, மூக்கு, தொண்டை, மார்பு ஆகிய பகுதிகளில் தேய்ப்பது இதமாக இருக்கும். மூக்கடைப்பையும் சரி செய்யும். இதனை ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பூசிக்கொள்ளலாம்.
துளசி
துளசி இலைகள் சளியை அகற்ற உதவி சுவாச பாதைகளை சுத்தமாக வைக்க உதவுகிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம். துளசி டீ உடலுக்கு நன்மை அளிக்கும். அதேபோல் வெற்றிலையில் சில மிளகுகள் கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக மென்று சாறு மட்டும் நிதானமாக முழுங்கலாம். இது, தொண்டைக்கு இதமாக இருக்கும்.
ஆவி பிடித்தல்
யூகலிப்டஸ் ஆயில், வேம்பு, நொச்சி, துளசி, ஓமவல்லி என வீட்டுக்கு அருகில் கிடைக்கும் மூலிகைகளை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடியுங்கள். நீர்க்கோவை மாத்திரையை நசுக்கு வெந்நீரில் கலந்து முகத்தில் பத்து போடுவதும் இதமாக இருக்கும்.
கசாயம்
சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, துளசி, ஓமவல்லி, தூதுவளை, தாளிசபத்திரி, கருஞ்சீரகம், அதிமதுரம் இவற்றில் கிடைப்பதைக் கொண்டு கசாயம் வைத்து , காலை, மாலை இருவேளை குடிக்கலாம்.
உப்பு நீர்
தொண்டையில் இருக்கும் நமைச்சலை சரிசெய்வதற்கு அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நல்லது. இதன் மூலம் தொண்டையில் இருக்கும் கிருமித் தொற்றுகள் அழிந்துவிடும்.
சூப்
சாப்பாட்டுக்கு மிளகு ரசம் வைத்துச் சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்க்ம். அதோடு மிளகுசாதம் செய்து சாப்பிடலாம். தூதுவளைத் துவையல் செய்து சாப்பிடலாம். நான் வெஜ் சாப்பிடுபவர்கள் என்றால் பூண்டு மிளகு சேர்த்து சூடான மட்டன் சூப் அருந்தினால் நெஞ்சுக்கு இதமாக இருக்கும்.
ஜலதோஷம் இருக்கும் நேரத்தில் புளிப்பு, இனிப்பு, காரம் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதேபோல் இந்த காலகட்டத்தில் எந்த வாழைப்பழமும் சாப்பிட வேண்டாம். இந்த உணவுகள் வயிற்றுக்குள் சென்று புளிப்புத்தன்மை ஏற்படுத்தி ஜலதோஷத்தை அதிகப்படுத்திவிடும். ஆகவே, கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுள்ள உணவை கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் உடலுக்கு ஓய்வு மிகவும் அவசியம். எனவே வழக்கத்தை விட அதிக நேரம் தூங்கலாம். குழந்தைகளை அதிக நேரம் தூங்கச் செய்வதன் காரணமாக ஜலதோஷத்திலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.
இருமல் அல்லது சளி தீவிரமடைந்து ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிப்பது, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், காதுவலி போன்ற வேறு பிரச்னைகள் தோன்றுவதாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம்.