விஜய் அரசுக்கு சைதை துரைசாமி பரிந்துரை
பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையில் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் தமிழக அரசு புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு அமைத்துள்ளது.
பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் மருத்துவக்கல்வி இடம் பெறவேண்டும் என்ற பரிந்துரை அறிக்கையை டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையிடம், பெருநகர சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி நேரில் வழங்கினார்.
அந்த பரிந்துரையில், ‘’தற்போது மாநில சமச்சீர் கல்வித் திட்டம், மெட்ரிகுலேசன் பாடத்திட்டம், சிபிஎஸ்சி பாடத்திட்டம் என்று மூன்று வகை பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இந்த பாடத்திட்டங்களில் எதில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும், நல்ல சம்பாத்தியம் கிடைக்கும் என்பதுதான் பெற்றோர்கள், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இது அவசியமானது, எதிர்கால வாழ்வுக்கு முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம், ஒருவர் பூரண உடல்நலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்வியல் கல்வி இல்லை என்பது பெருத்த ஏமாற்றம் தருகிறது.
ஆரோக்கிய அறியாமை
மனிதருக்குத் தேவையான முதலாவது முக்கியமான பண்பு என்றால், அது உடல் நலன் பேணுதல். இதனை பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தி, ஆரோக்கிய அறியாமையை போக்கும் வகையில் கல்வித்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
உதாரணமாக உணவு, நீர், தூக்கம் போன்றவை ஆரோக்கியத்திற்கு அடிப்படை தினமும் காலை தூங்கி எழுந்ததில் இருந்து, இரவு படுக்கும் வரை எந்தெந்த நேரங்களில் நீர் பருக வேண்டும். எந்த அளவு குடிக்க வேண்டும், எப்படி குடிக்க வேண்டும், எப்படி குடிக்கக்கூடாது போன்ற அனைத்தும் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவத்தில் மிகத் தெளிவாக உள்ளன.
உணவு, உணவுண்ணும் முறை, நீர் பருகுதலில் இருக்கும் அறியாமையே மனிதர்களின் நோய்க்கு அடிப்படை. இந்த உண்மையை ஒவ்வொரு மாணவரும் அறிந்திருக்க வேண்டும்.
இப்போது, உடல் நலன் பற்றி அறிய வேண்டுமென்றால், டாக்டருக்குப் படிக்க வேண்டும் அல்லது மருத்துவப் படிப்பு படித்தவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை மட்டுமே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
பாரம்பரிய ஆயுஷ்
நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுஷ்க்கு (ஆயுர்வேதம், யோகா-நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி) மத்திய, மாநில அரசுகள் இன்றைக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. எனவே, மருத்துவ வல்லுநர் குழு அமைத்து, ஆறாம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை ஆயுஷ் பாடத் திட்டத்தில் எவற்றையெல்லாம் படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்ற செயல் திட்டம் வகுத்து, பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆயுஷ் பாடங்களுடன், அலோபதி மருத்துவத்தின் ஆரம்பப் பாடங்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். பட்டப்படிப்பிலும் உடல் நலன் பற்றிய பாடங்கள் தொடர வேண்டும்.
இதன் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி குடும்பப் பெண்கள், உழைப்பாளிகள், வணிகர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள் என அனைத்துப் பிரிவு மக்களுக்கும் இந்த வாழ்வியல் கல்வி சென்றடையும். உடல் நலனை பேணி பாதுகாப்பது என்ற அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். இத்தகைய மாற்றம் உருவானால், ஒரு நல்ல ஆரோக்கியமான சமூக மாற்றம் உருவாகும்.
உணவே மருந்து
இந்த ஆரோக்கிய பாடத்திட்டத்தில் உடம்புக்குப் பொருந்தும் உணவு, பொருந்தா உணவு குறித்தும் இடம்பெற வேண்டும். பாக்கெட் உணவுகள், குளிர் பானங்களில் ஒளிந்திருக்கும் தீமைகள், நம் பாரம்பரிய நொறுக்குத்தீனிகளான கடலை மிட்டாய், எள்ளுருண்டை, மோர், நுங்கு, இளநீரின் சத்துக்கள், மகத்துவத்தை மாணவர்கள் அறிய வேண்டும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை வலியுறுத்தும் மருத்துவக் கல்வி எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய வரமாக அமையும். உடல்நலன் பாதுகாப்புக்கு உரிய நடைமுறைகளை அறிந்து, ஆரோக்கியத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் மாணவர்களுக்கு பள்ளி காலத்தில் கிடைப்பது, அவர்களுடைய முதுமை வரையிலும் கை கொடுக்கும்.
இப்போது புகை, மது தவிரவும் பல்வேறு போதைக் கலாச்சாரம் பெருகிவருகிறது. இவற்றின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கவும், புதிதாக யாரும் தவறான பாதைக்குப் போகாமல் தடுக்கவும் இந்த மருத்துவக் கல்வி பயன்படும்.
உழைத்து சம்பாதிக்கும் பணத்தை மருந்து கடைக்கும் மருத்துவமனைக்கும் செலவழிக்கும் அவலத்தைப் போக்குவதற்கு ஆரோக்கியக் கல்வியை புதிய பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே, சான்றோர் பெருமக்கள், மருத்துவர்கள், கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழு அமைத்து பாடத்திட்டம் உருவாக்குவது மிகவும் அவசியம்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். – என்ற திருவள்ளுவரின் வழியில் மாணவர்கள் உடல்நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய மாற்றத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
