என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 116
பெருநகர சென்னையின் மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்தவுடன் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக தினமும் ஏதேனும் ஓர் இடத்திலாவது மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் எனும் அளவுக்கு சுகாதாரத்துறையை சைதை துரைசாமி முடுக்கிவிட்டார்.
மருத்துவ முகாம் மூலம் நோயைக் கண்டறிதல் மட்டுமின்றி ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குக் கோண்டுவருவதை முக்கியப் பணியாக மேற்கொண்டார். ஏனென்றால், மருந்து, மாத்திரைகளில் ஆரோக்கியம் கிடைத்துவிடும் என்ற அறியாமையில் இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்கு ஆசைப்பட்டார்.
எனவே, சைதை துரைசாமியை சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் உடல் ஆரோக்கியம் குறித்து வலியுறுத்துவார். உணவு, அவற்றை உண்ணும் முறை, நீர் பருகல் ஆகியவற்றில் தான் உடல் ஆரோக்கியம் மறைந்திருக்கிறது என்று வலியுறுத்துவார். அவரது ஆரோக்கிய ஆலோசனை அனைவரும் பின்பற்றும் வகையில் இருக்கும்.
‘’பொதுவாக தரையில் சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் ஆகும். கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்து, எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் கை அல்லது கால் ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தம். ஒரு கை ஊன்றி எழுந்தால் அல்லது இரண்டு கையையும் ஊன்றி எழுவதாக இருந்தால் ஆரோக்கியம் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே, உடனடியாக இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்’’ என்று சொல்வது மட்டுமின்றி, அப்படி உட்கார்ந்து எழுந்தும் வழி காட்டுவார்.
அதே போன்று தரையில் பாய் விரித்துப் படுத்து எழுவது தான் சைதை துரைசாமியின் பழக்கம். அப்படி கீழே படுத்து, உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்றும் சொல்லிக் கொடுப்பார்.
சளைக்காமல் ஒரு மணி நேரம் செல்போனில் பொழுதைக் கழிப்பவர்கள், மென்று நிதானமாக சாப்பிடுவதற்கு மட்டும் போதிய நேரம் ஒதுக்குவதில்லை. அதோடு சாப்பிடும் நேரத்திலும் செல்போன் பார்த்துக்கொண்டு அல்லது பிறருடன் பேசிக்கொண்டு சாப்பிடுவதால் ஜீரணத்தில் குளறுபடி நிகழும் என்பதையும் அறிவியல்பூர்வமாக விளக்குவார் .
வாயில் உற்பத்தியாகும் உமிழ்நீருக்கு மட்டுமே உணவை ஜீரணிக்கும் திறன் உண்டு. அதனால் உணவை மென்று தின்பதற்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு கவளம் உணவை 32 முறை அல்லது அது திரவமாகும் வரை மென்று அதன்பிறகே உணவுக் குழாய்க்குள் அனுப்பவேண்டும். மாமிசம் போன்ற உணவுகள் என்றால் 60 அல்லது 70 முறை மெல்ல வேண்டும். திரவமாகாத எந்த ஒரு திடப்பொருளும் வயிற்றுக்குள் செல்லக்கூடாது. உணவு திரவநிலையில் வயிற்றுக்குள் செல்வதால், தண்ணீர் குடிக்கும் அவசியம் ஏற்படாது. உணவை உமிழ்நீர் கலந்த திரவமாக இரைப்பைக்குள் அனுப்பினால் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. சர்க்கரை, தைராய்டு, கொழுப்பு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் உருவாக மலச்சிக்கல் மட்டுமே ஆரம்ப காரணியாக இருக்கிறது என்றெல்லாம் ஒரு சித்த வைத்தியர் போன்று வழி காட்டுவார்.
- நாளை பார்க்கலாம்.