மேரி கோம் எனும் சண்டைக்காரி..!

Image

இந்தியாவின் பெருமை


உலக குத்துச்சண்டை வீராங்கனை பட்டியலில், முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார், இந்திய வீராங்கனை மேரி கோம். இந்தியா சார்பில் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுவருகிறார். 2016 முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ள  மேரிகோம் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம்.


* இவர், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் சர்சண்ட்பூர் மாவட்டம் சகாங் கிராமத்தில்  1983-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தவர். இவருடைய முழுப்பெயர் மாங்க்டே சங்கினிசாங் மேரி கோம். மேரி கோமின் பெற்றோர் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.


* பள்ளிக்காலத்தின்போதே மேரி கோம் கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகளம் எனப் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றார். மேரி கோம் குத்துச்சண்டை வீராங்கனையாகும் முன்னே ஒரு சிறந்த தடகள வீராங்கனையாகவும் கோலோச்சினார்.  400 மீட்டர் ஓட்டமும் மேரி கோமுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று.

* டிங்கோ சிங் (DINGKO SINGH) என்ற புகழ்பெற்ற இந்திய குத்துச்சண்டை வீரர்  தங்கம் வென்று வந்ததைக் கண்டபிறகே மேரி கோம், குத்துச்சண்டை விளையாட்டைத் தேர்வுசெய்தார். 2000-ம் ஆண்டிலிருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். மாநில அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை வென்றார். இதுகுறித்து எதையும் அவர் வீட்டில் சொல்லவில்லை. காரணம், குத்துச்சண்டை மிகவும் ஆபத்தானது என்றும் காயங்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் என்றும் அவரது பெற்றோர் கருதினர். மிகவும் சிரமப்பட்டுத்தான் பெற்றோர்களை தன்னுடைய ஆசைக்கு சம்மதிக்க வைத்தார்.


* 2000-ம் ஆண்டில் மணிப்பூர் சாம்பியன் ஆன மேரி கோம்,  2001-ல் AIBA பெண்கள் உலக சாம்பியன்ஷிப் 48 கிலோ எடைப்பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். அதே சாம்பியன்ஷிப் 45 கிலோ எடைப்பிரிவில் 2002-ல் முதல் இடம் பெற்று சாதித்தார்.

* ரயில் பயணம் ஒன்றின்போது, முதல்முறையாகத் தன் கணவரை (ஒன்லர்) சந்தித்தார், மேரி கோம். இவருடைய கணவர் ஒன்லர், ஒரு கால்பந்தாட்ட வீரர். மனைவிக்கு துணையாக, தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மேரிகோமையும், குடும்பத்தையும் கவனித்துவருகிறார்.  ’நான் வாழ்க்கையில் உயர எல்லா விதத்திலும் என் கணவர் காரணமாக இருந்திருக்கிறார்’’ என்றார், மேரி கோம்.

* இவர், உலக தொழில்சாரா குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார். திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தபின், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்பிறகு 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். அப்போது,  ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீரர்’ என்ற பெருமையைப் பெற்றார். இதேபோல், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றபோதும்,  ‘காமன்வெல்த்தில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர்’ என்ற பெருமையைப் பெற்றார்.


* லண்டன் ஒலிம்பிக் போட்டியின் முதல் ஆட்டத்தில் மேரி கோம் 3 கிலோ ஏற்றியும் எதிரே போலந்து அணியின் வீராங்கனை 3 கிலோ குறைத்தும் 51 கிலோ எடைப்பிரிவில் மோதினர். கடைசி ரவுண்டில் தளர்ச்சி அடைந்தாலும் விவேகமான ஆட்டத்தால் வெற்றிபெற்றார் மேரி கோம்.

* மல்லேஸ்வரி, சாய்னாவுக்குப் பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை மேரி கோம் ஆவார். இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் ஆடும் குத்துச்சண்டை வீரர்களில் வீராங்கனை என்றால் மேரி கோம் ஒருவர் மட்டுமே.

* காமன்வெல்த் விளையாட்டுகளில் மேரி கோம் வெற்றிபெற்றபோது, அவரிடம் ஓடிச்சென்ற அவரது பயிற்சியாளர், மேரியை தன் தோள்களில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்.

* இவர் அர்ஜுனா (2004), பத்மஸ்ரீ (2006), ராஜீவ் காந்தி கேல் ரத்னா (2009), பத்ம பூஷண் (2013) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டும், இவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. AIBA International Boxing Association 2008-ல் ’MAGNIFICENT MARY’ என்று பட்டம் அளித்து பெருமை செய்தது.


* பிரபல கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், டோனி மற்றும் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா வரிசையில் இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி பெற்ற முதல் பெண்மணி மேரி கோம் ஆவார்.

*  ‘Unbreakable: an autobiography’ என்ற பெயரில் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சுயசரிதையாக எழுதினார். அவருடைய பெயரில் அவரின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக வெளிவந்தது. இதில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, மேரி கோமாக நடித்திருந்தார். இந்தப் படம் குறித்துப் பேசிய மேரி கோம், “என் வாழ்க்கையை அடிப்படையாகவைத்து படம் எடுப்பதில் பெருமகிழ்ச்சியாக உள்ளது. கனவு நனவானது போன்று உள்ளது. என் வாழ்க்கையும் படமாகும் என்று நான் நினைத்ததே இல்லை” என்றார். மேரி கோமை கவுரவிக்கும் விதமாக இந்தப் படத்திற்கு உத்தரப்பிரதேச  அரசு வரி விலக்கு அளித்திருந்தது.


*  “குத்துச்சண்டையில் எனக்கிருந்த ஆர்வம் வேறு எதிலும் ஏற்படவில்லை. நான் என்ன செய்வது? இது பெண்கள் விளையாட்டு அல்லதான். பெரும்பாலும் பெண்களின் உடலமைப்பு இதற்கு ஏற்றதல்ல. இருந்தாலும் ஆர்வம் என்னை வீராங்கனையாக்கியது” என்கிறார், மேரி கோம்.  

கலக்குங்க மேரி.

Leave a Comment