மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்கள்

Image

ஒரு சுருக்கமான வரலாறு

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர்புரிந்த  மருதுபாண்டியர்களின் 223ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மண்டியிடாத மானத்திற்கும், வீழ்ந்து விடாத வீரத்திற்கும் சொந்தக்காரர்களான  மருதுபாண்டியர்களின் வாழ்க்கையை சுருக்கமாகப் பார்க்கலாம்.

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார்.

பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர். இருவரும் சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக தனது திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார்.

சிவகங்கைச் சீமை மீட்பு ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772ல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றியபின் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதுசகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர்.

மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார். ஒற்றுமை மருது சகோதரர்கள் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கவாக அமைந்தது. இசுலாம் மற்றும் கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார். தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி முடிய மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போராட்டதிற்கு வித்திட்டனர்.

1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது வெளியிட்ட அறிக்கை, ‘ஜம்பு தீவ பிரகடனம்’ என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் 1785 முதல் 1801 வரை நம் மண்ணை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கி வீறுகொண்டு போராடினார்கள். பீரங்கி போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் போரிட வந்த வெள்ளையர்களை வேல்கம்பும், வீச்சரிவாளும் வைத்து ஓடஓட விரட்டிய பெருமை கொண்டவர்கள் மருது சகோதரர்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 ம் ஆண்டு சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். சதித்திட்டங்கள் மூலம் சிவகங்கையை சுற்றி வளைத்த ஆங்கிலேயர்களிடம் இருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் காளையார் கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என்று ஆங்கிலேய படைகள் அறிவித்தன.

ஆசை, ஆசையாக கட்டிய கோபுரம் இடிக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால் இறுதியாக ஆங்கிலேய படைகளிடம் மருது சகோதரர்கள் சரணடைந்தனர். அதன்பின்னர் அவர்களை திருப்பத்தூரில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். 1801-ஆம் ஆண்டில் மருது பாண்டியர்கள் நடத்தியது தான் வெள்ளையர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போர்.

1801 மே 28 முதல் அக்டோபர் 24 வரை 150 நாட்கள் தொடர்ந்த போரிற்கு பிறகு வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு 24-10-1801 ல் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அவர்களோடு மன்னர் குடும்பத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் அன்றே தூக்கிலிடப்பட்டனர்.

மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும் மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment