மனிதன் படைக்கப்பட்டது எதற்காக?

Image

இத்தனை கடவுள்கள் தேவையா?

ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன் படபடவென இரண்டு கேள்விகளை எழுப்பினார். மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? காரணமில்லாம யாராவது படைப்பாங்களா… கடவுள் படைச்சாருன்னா, இந்து மதத்தில் மட்டும் நிறைய கடவுள் எப்படி?

அவ்வளவுதானா என்பது போல் மகேந்திரனைப் பார்த்த ஞானகுரு பேசத் தொடங்கினார்.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவருக்கு மனிதனைப் போன்ற அற்பங்களைப் படைப்பதற்கு பிரத்யேகமாக எந்த நோக்கமும் இருந்திருக்காது.  புல், புடலங்காய், பன்றி, பச்சைக்கிளி, பகலவன், பிரபஞ்சம் போன்றவை எல்லாம் என்ன காரணத்திற்காக படைக்கப்பட்டதோ, அதே  நோக்கத்திற்காகவே மனிதனும் உருவாக்கப்பட்டிருப்பான்.  நீ மனிதகுலத்தை பெரிதாக நினைக்கிறாய், ஆனால், அது நிஜமே இல்லை.

இந்து மதத்தில் மட்டும் ஏராளமான  கடவுள்கள் என்று கேட்கிறாய். ஒரு  நிறுவனத்தை திறம்பட நிர்வகிப்பதற்கு அதிகாரிகள், பணியாட்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என எத்தனையோ பேர் தேவைப்படுகிறார்கள். இவற்றைக் கணக்கிட்டுத்தான், இந்த உலகை நிர்வகிக்க நிறைய கடவுள்களை மனிதன் உருவாக்கியுள்ளான்.

ஆயிரம் கடவுள்கள், லட்சக்கணக்கான கோயில்கள் இருந்தாலும் திருப்தியடையாமல் இன்னும் சக்திவாய்ந்த கடவுளைத் தேடி காசி, இமயமலை, ஜெருசலேம், மெக்கா என்று மனிதர்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

ஒவ்வொரு மனிதனும் அவனுக்கென்று ஒரு தனி கடவுளை தேடுகிறான் .  எனவே, எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை கடவுள்கள் தேவைப்படுகிறார்கள்’’ என்று சிரித்தார் ஞானகுரு.

திகைப்பில் ஆழ்ந்தார் மகேந்திரன்.

Leave a Comment