அம்பானி ஜெயித்த ரகசியம்
பணம் எப்போது மனிதனை தேடி வரும் என்றால், ஏதாவது ஒரு துறையில் தனித்திறமையைக் காட்டி வெற்றி அடையும்போது பின்னாலே பணமும் வந்து சேரும். கூலி வேலை செய்பவர்கள், மாத சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் நிம்மதியான வாழ்வு போதும் என்று நினைப்பதால், பெரிய அளவுக்கு பணம் எதிர்பார்ப்பதில்லை, அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்றே நினைப்பதால், அவர்களைத் தேடி பெரிய அளவுக்கு பணம் வருவதில்லை.
ஒருவன் தன்னுடைய திறமையை காட்டவேண்டும், ஏதேனும் லட்சியத்தை அடையவேண்டும் என்று முடிவெடுத்தால்… அவன் வெற்றிக்கு போனஸாக பணமும் வந்துசேரும். முதல் முயற்சியில் யாருக்கும் வெற்றி கிட்டுவதில்லை. தோல்விகளை ஏற்றுக்கொண்டு முயற்சியை கைவிடாமல் மீண்டும் மீண்டும் லட்சியத்தை நோக்கி முன்னேறும்போது வெற்றி கிடைத்துவிடும். அந்த வெற்றியால் புகழ், பணம், செல்வாக்கு போன்றவையும் கிடைக்கும். ஓர் ஏழையால் கோடீஸ்வரனாக முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று உறுதியாக சொல்லலாம். அதற்கு உதாரணம்தான் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் அம்பானி. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக மட்டுமின்றி மிகப்பெரிய கோடீஸ்வரராக உருமாறியவர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சோர்வாட் என்ற கிராமத்தில் எளிமையான ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர் திரஜ்லால் ஹிராசந்த் அம்பானி எனப்படும் திருபாய் அம்பானி. பெரிய அளவுக்கு வசதி இல்லை என்பதால் படிக்கவில்லை. 17ம் வயதில் அரேபிய வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏடன் தீவுக்கு மாத வேலைக்காக சென்றார். சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும் அவருடைய கனவு பெரிதாக இருந்தது. அவர் வேலை செய்த பர்மா ஷெல் போன்று தானும் ஏன் ஒரு நிறுவனம் தொடங்கக்கூடாது என்று யோசித்தார். கையில் பணம் கிடையாது என்றாலும் தொழில் கற்ற துணிச்சலும் பெரிய கனவும் அவருக்கு உத்வேகம் கொடுத்தது.
அதனால் ஊருக்குத் திரும்பிய அம்பானி தெரிந்த நண்பர்களிடம் தன் கனவை சொன்னார். தொழில் ஆரம்பித்தால் கிடைக்கப்போகும் நன்மைகளையும், தொழில் வளர்ச்சியையும் பட்டியலிட்டார். அவரது திறமையான பேச்சும் திட்டமிடலும் கவர்ந்திழுக்கவே 15 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்தது. அந்த பணத்தைக் கொண்டு மஜின் என்ற நிறுவனத்தை தொடங்கினார். வேலை செய்த ஏடன் நாட்டுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யத் தொடங்கினார். ஏடன் நாட்டுக்கு என்ன தேவை என்பதும் இந்தியாவுக்கு என்ன தேவை என்பதும் தெரிந்திருந்தால் எளிதில் வெற்றியைத் தொட்டார்.
வணிகம் அமோகமாக வளர்ந்ததும் அம்பானி திருப்தி அடைந்துவிடவில்லை. உடனே அடுத்த கனவு கண்டார். துணி வியாபாரம் இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று கணித்து ரிலையன்ஸ் டெக்ஸ்டைல், விமல் நிறுவனங்களை தொடங்கினார். அவருடைய கணிப்பு பொய்க்கவில்லை. நாடெங்கும் அவரது பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்தது. அதிக விற்பனை, குறைந்த விலை என்ற தாரக மந்திரத்தை கையாண்டு ஏராளமான லாபம் சம்பாதித்தார்.
சாதாரண மனிதர்கள் இந்த லாபத்தோடு ஒதுங்கியிருப்பார்கள். ஆனால் திருபாய் அம்பானி மேலும் மேலும் தனது தொழிலை விரிவுபடுத்தினார். பெட்ரோல், தொலைதொடர்பு, எரிசக்தி, மின்சாரம், போக்குவரத்து என்று எந்த தொழிலையும் சின்னதாக செய்வதற்கு அம்பானிக்கு பிடிக்காது. மிகப்பெரிய கனவு, மிகப்பெரிய தொழில் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. அதனால் தனது நிறுவனத்திற்கு சிறு முதலீட்டாளர்களை இணைக்கும் வகையில், பங்குகளை வெளியிட்டார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்று, பங்குசந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தினார். அதனால் 20ம் நூற்றாண்டின் இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர் என்று ஆசியா வீக் பத்திரிகை பட்டியல் இட்டது. 50 ஆயிரம் பங்குதாரர்களின் கூட்டத்தை விளையாட்டு மைதானத்தில் நடத்தி புரட்சி செய்தார்.
வெற்றி அடைவதற்கு பின்புறக் கதவுகளை பயன்படுத்தினார் என்று அம்பானி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். நான் தோற்றுப்போயிருந்தால் என்னை விமர்சனம் செய்யமாட்டார்கள், தொழில் மூலம் கோடிகள் சேர்த்ததால் பொறாமையால் பேசுகிறார்கள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு முன்னேறினார் அம்பானி. அவரது கனவு முழுக்க முழுக்க வணிகமும் அதில் வெற்றியுமாக இருந்தது. அதனால் அந்த வெற்றியுடன் அவரிடம் பணமும் குவிந்தது.
உழைப்பு, திறமை, எதிர்கால கணிப்பு, அர்ப்பணிப்பு, லட்சியம் போன்றவையே அம்பானியை இந்தியாவின் முடிசூடா மன்னனாக மாற்றியது. அதனால் பணத்தை மட்டும் தேடினால் தொலைந்துபோவீர்கள். உங்கள் திறமையைக் கொண்டு முன்னேறுங்கள், உங்கள் பின்னே நாய்க்குட்டி போன்று பணம் வந்துசேரும்.
திருபாய் அம்பானியின் வெற்றிமொழிகள் இதோ…
- நீங்கள் கனவு காணவில்லை என்றால் யாராவது ஒருவர். அவரது கனவுக்கு உங்களை பயன்படுத்திக்கொள்வார்.
- பெரிதாக சிந்தியுங்கள், வேகமாக சிந்தியுங்கள், உடனடியாக காரியத்தில் இறங்குங்கள். ஏனென்றால் சிந்தனை உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை.
- முடியாது என்ற வார்த்தை ஒலிக்கும்போது நான் செவிடாக இருப்பேன்.
- வாய்ப்புகள் உங்களை சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கிறது.
- இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து ஊக்குவித்தால், ஒவ்வொருவரிடமும் இருக்கும் வரம்பற்ற ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
- எப்போதும் மனம் தளரக்கூடாது. துணிச்சல்தான் ஊக்கம் தரும்.
- காலக்கெடுவை நோக்கி செல்லக்கூடாது, காலக்கெடுவை வெல்ல வேண்டும்.
- துணிவுடனும் கச்சிதமாகவும் ஒரு செயலை செய்துமுடிக்கும்போது நிச்சயம் வெற்றிவந்து சேரும்.