ராகுல் துவண்டு போனாரா?
கடந்த மக்களவைத் தேர்தலில் மகராஷ்டிராவில் மல்லுக்கட்டி வெற்றி பெற்ற இண்டியா கூட்டணி வரலாறு காணாத தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்த தோல்வியால் ராகுல் காந்தி துவண்டுவிட்டதாகக் கூறியவர்களுக்கு இன்று உற்சாகமாக அறிக்கை விடுத்திருக்கிறார்.
மகராஷ்டிராவில் திட்டம் போட்டு தெளிவாக பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த வெற்றி நியாயமானது இல்லை. சிவசேனா சின்னத்தைப் பறித்து ஏக் நாத் ஷிண்டேவிடும் கொடுத்து சரத்பவார் சின்னத்தைப் பறித்து அஜீத் பவாரிடம் கொடுத்து ஹரியானா உடன் நடத்த வேண்டிய மகராஷ்டிரா தேர்தலை தள்ளி வைத்து ( அந்த சில மாத இடைவெளியில் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் தரும் திட்டத்தை தொடங்கி ) வாக்குப்பதிவில் பெரும் தில்லு முல்லு செய்து பாஜக வாங்கியிருப்பதற்கு வெற்றி எனப் பெயரிடப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் ஆலோசகர்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் மாதம் 1,500 ரூபாய் கையில் பார்த்துவிட்டார்கள். இந்த பணம் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே ஓட்டு விழுந்துள்ளது. இதை முறியடிக்கும் வகையில் இண்டியா கூட்டணியிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம்.
இந்த தேர்தல் தோல்விகளால் துவண்டுவிட்டதாகக் கருதப்பட்ட ராகுல் காந்தி, ‘’இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய தீர்ப்பை வழங்கிய ஜார்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் மற்றும் JMM தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மாநிலத்தில், கூட்டணியின் இந்த வெற்றி, அரசியல் சாசனத்துடன், நீர், காடு, நிலம் பாதுகாக்கப்பட்டதற்கு கிடைத்த வெற்றியாகும். மகாராஷ்டிராவின் முடிவுகள் எதிர்பாராதவை, அவற்றை விரிவாக ஆராய்வோம்’’ என்று மீண்டும் போராட்டக் குரல் கொடுத்திருக்கிறார்.