அளவுக்கு மீறாதீர்கள்.
உணவு, உறக்கம், காமம் மூன்றும் மனிதனின் வாழ்வோடு ஒட்டிப்பிறந்தவை. இவை இல்லாமல் மனிதன் வாழவேமுடியாது என்பது உண்மை. அதேநேரம் அளவுக்கு மீறினால் ஆபத்து என்பதும் உண்மை. அதனால் இந்த மூன்று ஆசைகளுக்கும் ஒரு கட்டம் அல்லது வட்டம் போட்டு அதற்குள் நின்றுகொள்வது மிகவும் முக்கியம்.
ஒரு மனிதர் எவ்வளவு சாப்பிடவேண்டும், எத்தனை நேரம் தூங்கவேண்டும், எத்தனை நேரம் காமத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானம் செய்துகொள்வது நல்லது. பொதுவாகவே வயிறு பசித்திருக்கும்போதும், கண்கள் விழித்திருக்கும்போதும்தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். காமம் பற்றிய சிந்தனை இல்லாத நேரத்தில்தான் உன் புத்தி நேர் வழிகளில் செல்லத்தொடங்கும். அதனால் இந்த மூன்றையும் அளவோடு நிறுத்தினால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம்.
? சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் சரியான அளவு இருக்கிறதா?
நிச்சயம் இருக்கிறது. அரை வயிறு உணவு கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காற்று என்பதுதான் சரியான அளவு. அரை வயிறு உணவும் ஜீரணமானபிறகே மீண்டும் சாப்பிட வேண்டும். மூன்று அல்லது நான்கு முறை அரை வயிறு உணவு சாப்பிடலாம். தேவைக்கும் அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். ஏப்பம் வரும் அளவுக்கு உண்ணக்கூடாது.
உறங்குவதற்கும் அளவு இருக்கிறது. ஒரு நாளில் கால் பகுதி நேரத்தை தூக்கத்தில் கழிக்கலாம். அதாவது ஆறு மணி நேரம் போதுமானது. இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பொருந்தாது. அதாவது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வ்யதைத் தாண்டியவர்களுக்கும் உறக்கமே மருந்து. அதனால் அவர்கள் 9 மணி நேரம் தூங்குவது நல்லது. மற்றவர்களுக்கு ஆறு மணி நேரம் போதுமானது.
? மதியம் தூக்கம் வருகிறதே?
மதியத் தூக்கம் மிகவும் நல்லது. ஆனால் அந்தத் தூக்கம் அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கவேண்டும். அதனால் படுத்ததும் எழுந்தரிக்கக்கூடிய திறன் இருப்பவன் மட்டும் மதியம் தூங்கலாம்.
? மனைவியிடமும் அதிக காமம் அனுபவிக்கக்கூடாதா?
உன் வீட்டு நெருப்பு என்பதற்காக அதை உடலில் பற்றவைத்துக் கொள்ளலாமா? முறைப்படுத்தி நெருப்பை பயன்படுத்தினால், அது உனக்கு பயன் தருவதாக இருக்கும் இல்லையென்றால் அதுவே சிதை நெருப்பாக மாறும்.
? சாப்பாடு, உறக்கம், காமம் ஆகிய மூன்றும்தான் ஏழைகளுக்கு இன்பம் தருகிறது, இவற்றையும் தவிர்த்துவிட்டு அவன் என்னதான் செய்யவேண்டும்?
அவன் ஏழையாக இருக்கும் காரணமே இந்த மூன்றும்தான். என்றைக்கு இந்த மூன்றும் அத்தனை முக்கியமில்லை என்பதை உணர்கிறானோ அன்றே அவன் சிந்திக்கத் தொடங்குவான். சிந்தனை செய்யும் மனிதன் சிறப்பாக செயல்படத்தொடங்குவான். சிறப்பாக செயல்படுபவன் நிம்மதியாகவும் நீண்டநாள் சந்தோஷமாகவும் இருப்பான். அதனால் அற்ப சந்தோஷத்திற்கு ஆசைப்படாதே.