காதல்தானே ஜெயிக்கிறது..!

Image

மகிழ்ச்சி தரும் மந்திரம்

சாதனை என்பது விளையாட்டில் மட்டுமல்ல…. தம் படைப்புகளின் மூலம் சாதனை புரிந்து உலகம் வியக்குமளவுக்கு அறிமுகமானவர்கள் பலர் உண்டு. காதலுக்காக உயர்துறந்த  காதலர்களைப் பற்றி வரலாற்றிலும், காவியங்களிலும் நாம் படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே மன்னர் ஒருவர், மாபெரும் சாம்ராஜ்ஜியத்தையே காதலுக்காக தியாகம் செய்திருக்கிறார். இந்த அதிசயம் நடந்தது இங்கிலாந்து நாட்டில். 20ம் நூற்றாண்டில் சாம்ராஜ்ஜியத்தை இழந்த மன்னர் பெயர் எட்வர்டு.
இவர், இங்கிலாந்து ராணியான 64 வருடம் பதவி வகித்து சாதனை படைத்த விக்டோரியா மகாராணியின் கொள்ளுப்பேரன் தான் இந்த எட்வர்டு. இவர் வாலிஸ் சிம்சன் என்ற அமெரிக்கப் பெண்ணை காதலித்து வந்தார். இந்தப் பெண்மணி, ஸ்பென்சர் என்ற கடற்படை அதிகாரியை மணந்து விவாகரத்து செய்தவர். வாலிசின் அழகும், புத்திசாலித்தனமும் எட்வர்ட்டைக் கவர்ந்ததால், வாலிஸை திருமணம் செய்துகொள்வதாக அறிவித்தார்.
அரசன் என்ற முறையில் இங்கிலாந்து கிறிஸ்தவ சபையின் தலைவராகவும் எட்வர்டு இருந்திருக்கிறார். இருப்பினும், இந்த திருமணத்தை கிறிஸ்தவ சபை சம்மதிக்கவில்லை. ஆனால், தன் முடிவில் எட்வர்டு உறுதியாக இருந்தார். காதலியா, மணிமகுடமா என்ற நிலையில் இரண்டில் ஒன்றை தீர்மானியுங்கள் என்று பிரதமரும், அரச குடும்பத்தினரும் கண்டிப்புடன் கூறியதன் பேரில், முடிவில் எட்வர்டு, ‘எனக்கு காதல்தான் பெரிது; மகுடம் தேவையில்லை’ என்று அறிவித்தார். அவருடைய அறிவிப்பு என்பது இங்கிலாந்து தேசம் மட்டுமல்ல, அகில உலகத்தையே அதிசயப்பட வைத்தது.
எனவே, காதல் எனும் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எட்வர்டு எடுத்த முடிவு என்பது உலக சாதனை நிகழ்வாகவே நாம் காண முடிகிறது. நினைத்தால் அது நடக்கும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டால் வென்றிடலாம். சாதனை படைத்திடலாம். செயல்பாடு என்பது எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வராமல் இருக்கலாம். ஆனால், செயல்பாடு இல்லாமல் மகிழ்ச்சி என்ற கோட்பாடு வாழ்ந்து காட்டியவர் எட்வர்டு.

காதல்தான் இந்த உலகில் உயிர் மூச்சு.

  • வே.நவநீதகிருஷ்ணன்

Leave a Comment