எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கொடியில் தாமரைப் பூ

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 50

1972ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாம்பரம் பாலு வீட்டில் கூடிய எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற நிர்வாகிகள் இரண்டு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதன்பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கொடியில் பயன்படுத்த வேண்டிய சின்னம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அப்போது சைதை துரைசாமி எழுந்து, ’ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தின் (இன்றைய அதிமுக தலைமைக் கழகம்) நுழைவுவாயிலில் எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான தாமரை பூ பொறிக்கப்பட்டுள்ளது.  அவர் மிகவும் ரசித்து தேர்வு செய்தது என்று தலைமைக்கழக நிர்வாகி என்னிடம் கூறியிருக்கிறார். ஆகவே, இதனை நாம் பயன்படுத்தினால் புரட்சித்தலைவர் மகிழ்ச்சி அடைவார்’ என்று தெரிவிக்கிறார். அடுத்த நொடியே அத்தனை பேரும் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்கள்.

அதன் பிறகு இந்த இரண்டு தீர்மானங்களையும் எடுத்துக் கொண்டு போய்  அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் காப்பாளர் ஆர்.எம். வீரப்பனை சத்தியா மூவீஸ் அலுவலகத்தில் சந்தித்தார்கள். இந்த தீர்மானங்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

நிர்வாகிகளின் ஆதங்கத்தையும் நியாயத்தையும் புரிந்துகொண்ட ஆர்.எம்.வீரப்பன் உடனடியாக எம்.ஜி.ஆரிடம் பேசி, தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்குகின்ற கூட்டத்திற்கான தேதியை அறிவித்தார். அதுவே 1972, அக்டோபர் 1. அன்றைய தினம் அண்ணா தி.மு.க. எனும் பேரியக்கத்திற்கு சைதை துரைசாமி விதை ஊன்ற இருக்கிறார் என்பது தெரியாமலே அத்தனை நிர்வாகிகளும் வந்து குவிந்தனர்.  

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment