விதையைப் பார்த்தால் அதற்குள் மரம் இருப்பது தெரியாது. மனிதர்களையும் உருவத்தைப் பார்த்து எடை போடாதீர்கள்.

மந்திரச்சொல்

சிறுவயதில் பள்ளிக்குச் சென்றதோடு செய்தித்தாள் விநியோகிக்கும் வேலை செய்துவந்த அப்துல் கலாம், ஒருநாள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும், உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும் வருவார் என்று யாரேனும் எதிர்பார்த்தார்களா..?

மகாத்மா காந்தியின் இந்திய சுதந்திரப் போராட்டம், உடல் வலிமையால் மனிதரின் வலிமையை எடை போட முடியாது என்பதை உலகத்துக்கே கற்றுக்கொடுத்தது.

ஸ்டீபன் ஹாக்கிங் என்ற உடல் இயக்கம் இல்லாத ஒரு மனிதர் கருந்துளைகள், பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் போன்ற சிக்கலான விஷயங்களைப் பேசி, உலகின் மிக முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவராக உயர்ந்தார்.

சார்லி சாப்ளின் ஒருகாலத்தில் சாதாரணமான பின்னணியில் இருந்து வந்தவர். அவருடைய வெளிப்புற தோற்றமே பின்னாளில் உலகம் முழுவதும் அடையாளமாக மாறியது. வரலாறு இப்படிப்பட்ட மனிதர்களால் நிறைந்திருக்கிறது, எனவே, ஒருவரின் உருவம், உடை, பணம், கல்வி, பதவி, தோல்வி ஆகியவற்றைப் பார்த்து, இவரிடம் திறமை இல்லை என்று முடிவுக்கு வராதீர்கள்.

சிறிய விதையை உள்ளங்கையில் வைத்துப் பாருங்கள். அதில் கிளைகள் தெரியாது. இலைகள் தெரியாது. பூக்கள் தெரியாது. நிழல் தரும் மரம் தெரியாது. ஆனால் அந்தச் சிறிய விதைக்குள் ஒரு பெரிய மரத்தின் சாத்தியம் மறைந்திருக்கிறது.

அதேபோல் மனிதர்களை அவர்களின் இன்றைய தோற்றத்தைக் கொண்டு மட்டும் மதிப்பிடக்கூடாது. அவர்களுக்குள் இருக்கும் திறமை, முயற்சி, அனுபவம், கனவு, மனவலிமை ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்.

தோற்றத்திற்கே அதிக முக்கியம் கொடுக்கிறோம். நன்றாக உடை அணியாத ஒருவரை ஏழை என்று முடிவு செய்கிறோம். அமைதியாக இருப்பவரை பயந்தவர் என்று நினைக்கிறோம். அதிகம் பேசுபவரை அறிவாளி என்று நினைக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் நமது மூளை உருவாக்கும் விரைவான முடிவுகள். குறைந்த தகவலை வைத்துக்கொண்டு மற்றவர்களைப் பற்றி விரைவாக முடிவு செய்யும் குணம் மனிதர்களுக்கு உள்ளது. இந்த பார்வை சில நேரங்களில் தவறான மதிப்பீட்டுக்கு வழிவகுக்கும். அதனால், ஒருவரை முதல் சந்திப்பிலேயே முழுமையாகப் புரிந்துகொண்டதாக நினைக்காதீர்கள்.

ஒருவருடைய ஒரு தவறைப் பார்த்து அவர் முழுவதும் தவறானவர் என்று முடிவு செய்யாதீர்கள். ஒருவருடைய ஒரு தோல்வியைப் பார்த்து அவர் வாழ்நாள் முழுவதும் ஜெயிக்கமாட்டார் என்று சொல்லாதீர்கள். ஒருவருடைய இன்றைய வாழ்க்கையைப் பார்த்து அவருடைய நாளைய வாழ்க்கையைத் தீர்மானிக்காதீர்கள்.

ஏனென்றால், இன்று மண்ணுக்குள் புதைந்திருக்கும் விதை நாளை வானத்தைத் தொடும் மரமாகலாம். மனிதன் விழுந்த பிறகு எப்படி எழுகிறான் என்று பாருங்கள். வாய்ப்பு கிடைக்கும்போது என்ன செய்கிறான், அதிகாரம் இல்லாதபோது மற்றவர்களை எப்படி நடத்துகிறான், யாரும் பார்க்காத நேரத்தில் அவன் எப்படி வாழ்கிறான் என்று பாருங்கள். அங்கேதான் உண்மையான மனிதன் தெரிகிறான்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment