கவித்துவம்
ஆயிரம் பக்கம் புத்தகம் சொல்லித்தரும் வாழ்க்கைக் கதையை மூன்று வரிக் கவிதை முழுமையாகப் புரிய வைத்துவிடும். அந்த வகையில் படித்ததும் உசுரை உருக்கும் சில குட்டிக் கவிதைகள்.
இது என்னுடையது இல்லை
யாரையோ திருப்திப்படுத்த,
யாரையோ பழிவாங்க,
யாரையோ குதூகலப்படுத்த,
யாரையோ திருத்த,
யாரையோ வளர்த்தெடுக்க,
யாரையோ மகிழ்விக்க,
யாரையோ வெறுக்க
நம் வாழ்வினை அடகு வைக்கிறோம்.
அதற்கு வட்டி கட்டியே
வாழ்வினை கழித்துவிடுகிறோம்…
- ஸ்ரீநி
பூரணம்
யார் கையால்
யார் கையால்
நீரூற்றினாலும்
உறிஞ்சிக் கொள்கிறது வேர்.
எந்த மண்ணில் நட்டாலும்
இனிக்கவே செய்கிறது
கரும்பு.
- யுகபாரதி
புதிர்கள்
இருக்கலாம்
பாறையும் மணலும்
ஒரே ஒன்றின் வெவ்வேறாக.
பாறையால்
சொல்லவே முடியாது
மணலின் கதையை….!!!
- வண்ணதாசன்