உணவே மருந்து
மனிதரின் நோய்க்கும் ஆரோக்கியத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உணவு மட்டுமே. சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும் என்பதை நிறைய பேர் மிகப்பெரும் லட்சியமாக வைத்து செயல்படுத்திவருகிறார்கள்.
அதாவது, சரியான நேரத்துக்கு சாப்பிட்டால் மட்டுமே ஜீரணமாகும் என்று நினைக்கிறார்கள். உடலுக்கு உணவு எப்போது தேவைப்படும் என்பது வயிற்றுக்குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால், கடிகாரத்தைப் பார்த்து சாப்பிடுகிறார்கள்.
சரியான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்தின் அடிப்படை” என்று பெரும்பாலோர் நம்புகிறோம். ஆனால் சிலருக்கு இந்த வழக்கம் கூட சில மருத்துவச் சூழலில் தீமையாக அமையக்கூடும் என்பதை நிறைய பேர் அறிவதில்லை.
பொதுவாக உணவு நேரம் ஒழுங்காக இருந்தால் செரிமானச் சாறு சீராக சுரந்து உணவு எளிதில் செரிகிறது. நேரம் தவறாமல் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்பதால் நீரிழிவு அபாயம் குறையும். இன்சுலின், கோர்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சரியான நேரத்தில் செயல்பட உதவுகிறது. நேரத்திற்கு சாப்பிடுபவருக்கு மெட்டபாலிசம் சீராக வைத்திருப்பதால் கொழுப்பு சேர்வது குறையும். சீக்கிரமாக சாப்பிடுபவருக்கு நல்ல உறக்கம் வருவதுடன் மனஅழுத்தம் குறைகிறது.
அதேநேரத்தில் நேரம் பார்த்து சாப்பிடுபவர்கள் எப்போதும் சிறு அளவில் மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
சிலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுபவர்கள் என்றாலும் அமிலம் சுரந்து வேதனை தரலாம். எனவே, இவர்கள் குறைந்த அளவு உணவை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். பசி இல்லாமல் சாப்பிடுவது அவர்களுக்குப் பிரச்சினை தரும். உடல் தேவைக்கு ஏற்ப நேரத்தைக் கொஞ்சமாக மாற்றலாம்.
மனித உடல் அனைவருக்கும் ஒரே விதமாக இயங்காது.எனவே, சரியான நேரத்தில் சரியாக சாப்பிட வேண்டும் என்ற பொது விதி அனைவருக்கும் பொருந்தாது ஒருவரது உடல்நிலை, வேலை நேரம், வயது போன்ற பல்வேறு காரணிகளுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும்.
எனவே, மருத்துவ ஆலோசனையுடன் சமநிலை பெற்ற உணவு நேரமே உண்மையான சரியான நேரம். கடிகாரத்தைவிட வயிறுக்கே அது மிகவும் சரியாகத் தெரியும். வயிறு பேசுவதைக் கேளுங்கள்.
