ஆசிரியர் சிந்தனை
மின்விசிறியில் சத்தம் வந்தால் உடனே எலக்ட்ரீசியனைத் தேடுகிறோம். டூவீலரில் அதிர்வு வந்தால் மெக்கானிக்கிடம் ஓடுகிறோம். அதேபோன்று உடல் பேசுவதைக் கேட்கிறோமா என்பதுதான் கேள்வி.
நல்லாத்தான் இருந்தார் திடீர்னு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார் என்று சொல்வதைக் கேட்டிருப்போம். ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறார், ஆனாலும் வயிற்றில் கட்டி என்று சொல்வார்கள்.
எந்த நோயும் திடீரென வருவதில்லை என்பதே உண்மை. மாரடைப்பு ஒரு நாளில் வருவதில்லை. சர்க்கரை நோய் ஒரு இரவில் உருவாவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒரு வாரத்தில் ஏற்படுவதில்லை.
நோய் உருவாகுவதற்கு முன்பு பல அறிகுறிகளை உடல் காட்டுகிறது. அந்த சிறிய எச்சரிக்கைகளை புறக்கணித்த விளைவுதான், நோய் பெரிதாக வெளியே தெரிகிறது.
எந்த இயந்திரமும் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருந்தால் பழுதடையும் வாய்ப்பு உண்டு. எனவே, உடலுக்கும் ஓய்வு தேவை. தூக்கம், பசி, எரிச்சல், சோர்வு தலைவலி, காய்ச்சல், மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் வந்தால், மூல காரணங்களைத் தேட வேண்டும்.
வருடம் ஒரு முறை உல்லாசப்பயணத்துக்குத் திட்டமிடும் மனிதர்கள், வருடம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்வதற்குத் தயங்குகிறார்கள்.. மருத்துவ பரிசோதனை நோயைக் கண்டுபிடிப்பதற்கு அல்ல; ஆரோக்கியப் பாதுகாப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நோய் வந்த பிறகு சிகிச்சை தேடுவதை விட, நோய் வராமல் இருப்பதற்கான வழிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனவே ஆரோக்கியம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல, அதுவே வாழ்க்கையின் அடித்தளம். உடலை கவனிக்கவில்லை என்றால், நோய் அதை கவனிக்கத் தொடங்கிவிடும்.
எனவே, உடல் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். உடல் பேசுவதைக் கேளுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
