இவை எல்லாமே வேஸ்ட் ஃபுட்..?

Image

ஃபாஸ்ட் புட் பட்டியல் இதோ

அவசர யுகம் இது. அதனாலோ என்னவோ, இப்போது  ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவது பிரபலமாக உள்ளது. பள்ளி மாணவர்கள் கூட வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வதை கவுரவ குறைவாக நினைத்து வெளியில் விற்கும் தின்பண்டங்களையும், குளிர்பானங்களையும் வாங்கி சாப்பிடுகின்றனர். அலுவலகம் செல்பவர்களும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் நலன் பெரும் அளவில் பாதிக்கப்படுவது அவர்களுக்கே தெரிவதில்லை.  எல்லோரும் சாப்பிடுகின்றனர் என்பதற்காகவும், ஒரு பொழுது போக்காகவும் இப்படி துரித உணவு வகைகளை நாடுகின்றனர். இப்படி சாப்பிடும் துரித உணவு வகைளிலும் குளிர்பானங்களிலும் எந்தவித சத்துக்களும் இல்லை என்பதுடன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க இவை காரணமாகின்றன.

ஃபிரஞ்ச் ஃபிரை :  இந்த நீள உருளைக்கிழங்கு வறுவலில் மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும், மலச்சிக்கல் ஏற்படும்.

பர்கர் : இதுவும் தவிடு நீக்கி சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்படுவதுதான்.  இதில் எந்த சத்தும் இல்லை.

பிட்ஸா : இதில் சுத்திகரிக்கப்பட்ட, தவிடு நீக்கப்பட்ட மாவுதான் பயன்படுத்தப்படுகிறது. தவிடு நீக்கப்பட்ட தானிய மாவில் மாவு சத்து மட்டுமே உள்ளது. இதில், பயன்படுத்தப்படும் காய்கறிகள், பாலாடைக்கட்டி போன்றவை புதியவைதானா? உயிர்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளனவா என்பது சந்தேகத்திற்குரியது! வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது இதய நோயாளிகளுக்கு ஏற்றதல்ல

நூடுல்ஸ் : இதுவும் மாவுச்சத்து மட்டுமே மிகுந்த உணவுதான். இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

சோளா-பூரி : இது மிக பெரிய பூரியாகும், தொட்டுக் கொள்ள மசாலா கொண்டை கடலை தருவார்கள். சோளா பட்டூரா திரும்பத்திரும்ப பொரித்த எண்ணையிலே பொரித்ததை சாப்பிடும்போதும் காரமான மசாலாவை சாப்பிடும்போதும் வயிற்றுக்கோளாறு ஏற்படும்.

வறுவல் : இதில் கொழுப்பு சத்து அதிகம். பல ரசாயனங்களை சேர்த்து வறுவல் மொறு மொறுப்பாக வைக்கப்படுகிறது. உடல் குண்டாகும். மந்த புத்தி ஏற்படும்.

குளிர்பானங்கள் : ரசாயன குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு எந்த விதத்திலும் உதவாது. குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு பந்தாவாக டி.வி. விளம்பரங்களில் இந்த குளிர்பானங்களுக்காக போஸ் கொடுப்பார்கள் பல பிரபலங்கள். ஆனால் இந்த குளிர் பானங்களை நீண்ட நாட்களாக சாப்பிட்டால் உடல் நலம் கெடும் என்பதில சிறிதும் சந்தேகம் இல்லை.

நவநாகரீக உலகில் எல்லாமே வேகமாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. சாப்பிடும் விஷயத்திலும் அப்படித்தான். உணவு விடுதிகளுக்குச் சென்று ஆர்டர் செய்துவிட்டு அரைமணி நேரம் காத்திருக்க அவகாசமில்லை. உணவாக சாப்பிடுவதற்குப் பதிலாக தண்ணீர் ஆகாரமாக சாப்பிட்டால் என்ன என்று யோசிக்கும் காலமிது. அதனால்தான் ஃபாஸ்ட் ஃபுட் மீது எல்லோருக்கும் ஆர்வமாக இருக்கிறது.

ஒருவர் தொடர்ந்து துரித உணவகத்தில் சாப்பிடுவது என்பது, வயிற்றுக்கு ஆபத்தை தேடி வரவழைப்பதாகும். .எங்கு சாப்பிட்டாலும் தரமான உணவுப்பொருட்கள் முறையாக  தயாரிக்கப்பட்டு, சரியான நேரத்தில் பரிமாறப்படுகிறதா என்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இந்த இடங்களுக்கு யார்தான் அதிகம் போகிறார்கள்? முதல் இடம் டீன் ஏஜ்காரர்களுக்குத்தான். வாரம் ஒரு முறை குடும்பத்தோடு போவதும் பெருத்துவிட்டது..

இந்த உணவகத்தின் அடிப்படை தத்துவமே குறைவான நேரத்தில் சமைப்பது, அதிகமான தீயை உபயோகிப்பது நிறைய அயிட்டங்கள் விற்பனைக்கு இருந்தாலும் அவரவர் தேவைக்கு ஏற்ப சரியான, பொருத்தமான உணவை திட்டமிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். சமையலறை எளிதில் கண்ணில் படக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதை பாருங்கள். பரிமாறக்கூடியவர்கள் கனிவாக பேசினாலும் சுத்தபத்தமாக இருக்கிறார்களா என்று நோட்டமிடுங்கள்.

பாத்திரங்களை கழுவ நல்ல தண்ணீரை உபயோகிக்கிறார்களா? அல்லது ஒரே தண்ணீரை நாள் முழுவதும் உபயோகிக்கிறார்களா என்பதையும் பார்க்கலாம். வாழை இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள் என்றால் தட்டிக் கேளுங்கள். குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குளிர்பான மோகத்தால் குடிதண்ணீர் கூட இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுகிறது. அதில் சிட்ரிக் ஆசிட்டும், ஃபாஸ்பாரிக் ஆசிட்டும் அதிகம். குளிர்பானங்களுக்குப் பதிலாக பழச்சாறு குடிக்கலாம் அல்லது மில்க் ஷேக் அருந்தலாம்.

எப்போதாவது ஒரு முறை ஆசைக்காக இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை, தொடர்ந்து அல்லது வாரந்தோறும் என்று இப்படிபட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது, சிக்கலை தேடிப் போவதாகும்.

Leave a Comment