பாம்புக்கும் ஏணிக்கும் இடையில் வாழ்க்கை..!

Image

பாரம்பரிய விளையாட்டு பரமபதம்!


ஏற்றம் இறக்கம் இரண்டும் வெற்றியாளர் வாழ்விலும் உண்டு என்பதுதான் நிஜம். ஏறுவதற்குத்தான் ஏணி வேணும்.  இறங்குவதற்கு பாம்புக் கடியே போதும் என்பார்கள்.
அதற்குக் காரணம், பாவம் செய்தால் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும் புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமால் உறையும் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் பரமபத விளையாட்டு உணர்த்துகிறது.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு, இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர். இந்த விளையாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் கடவுள்கள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பறவைகள், விலங்குகள் போன்ற அனைத்து ஜீவராசிகளும் உண்டு.  இது தவிர  தத்துவம் நிறைந்த ஆன்மிக கருத்துகளையும் கொண்டிருக்கிறது. தற்போது இவ்விளையாட்டின் வரைபடங்கள் நவீன காலத்திற்கேற்ப மாற்றமடைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.

  
பரமபத சோபானம் என்ற இவ்விளையாட்டு, இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு. பரமபதம் சமய தொடர்பான விளையாட்டு என்பதால், தோற்றம் பற்றி தெளிவான கருத்து இல்லை. ஆயினும், இந்த பரமபத விளையாட்டை, 13ம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள். ஆனால் 2ம் நூற்றாண்டிலிருந்து இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருவதற்கான குறிப்புகள் உள்ளன.

பரமன் என்றால் திருமால் என்று பொருள். பரமபதம் என்றால் திருமாலின் பாதம் என்ற பொருளும் உண்டு. இதன் அடிப்படையிலேயே பரமபதம் என்ற பெயர் வந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. தசாபதம், அஷ்டாபதம் போன்றவை பரமபத விளையாட்டு வகையைச் சார்ந்தது ஆகும். இந்துத்துவம் மற்றும் ஆன்மிகத்தின் மதிப்பை இளையவர்களுக்கு கற்றுத் தர உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, மோட்ச பதம், பரமபதம், மோட்ச பத் (ஹிந்தி), மோட்ச படமு (தெலுங்கு) என இந்தியாவில் பலவாறு அழைக்கப்படுகிறது.


ஆரம்பத்தில் தசபதம் என 10 x 10 கட்டங்களில் விளையாடப்பட்டு, பின் நூறு கட்டங்களாக வளர்ந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன. 1892ம் ஆண்டு பிரிட்டிஷார், இவ்விளையாட்டை இங்கிலாந்துக்குக் கொண்டுசென்று,  ஸ்நேக் & லேடர்ஸ்/சுட்ஸ் என்ற பெயரில் விக்டோரியன் முறைப்படி மாற்றினார்கள். 1943ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இவ்விளையாட்டு சென்றடைந்த நேரத்தில், நல்லொழுக்க நெறிகள் மாற்றத்திக்கு ஆளாகி இருந்தன. கனடாவில் டோபோகான் ரன்ஸ் என்றழைக்கப்படுகிறது.


ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் 12ம் இடம் உண்மையையும், 51ம் இடம் நம்பிக்கையையும், 57ம் இடம் பெருந்தன்மையையும், 76ம் இடம் ஞானத்தையும், 78ம் இடம் சன்னியாசத்தையும் குறிப்பதாக இருந்தது. இந்த இடங்களில் மட்டும்தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிர்ஷ்டம், முன்னேற்றம், ஜெயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.
41ம் கட்டம் கீழ்ப்படியாமை, 44ம் கட்டம் அகந்தை, 49ம் கட்டம் ஈனம், 52ம் இடம் களவு/திருட்டு, 58ம் இடம் பொய்/புரட்டு, 62ம் இடம் மதுபானம், 69ம் இடம் கடன், 73ம் இடம் கொலை, 84ம் இடம் கோபம்/வெஞ்சினம்/வஞ்சம், 92ம் இடம் கர்வம், 95ம் இடம் பெருமை, 99ம் இடம் காமம் ஆகியவற்றில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம்/அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கட்டங்களைக் கொடுக்கும்.


இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க ‘தாயம்’ அதாவது ‘ஒன்று’ விழ வேண்டும். இடைப்பட்ட கட்டங்களில் ஏணிகளும், பாம்புகளும் வரையப்பட்டிருக்கும். ஏணியில் ஏறினால் புண்ணியம் செய்ததாகவும், பாம்பின் வாய் வழியாக கீழே இறங்கினால் பாவம் செய்ததாகவும் கருதப்படுகிறது. இந்த விளையாட்டில் முதலில் மோட்சம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார். நூறாம் கட்டம், நிர்வாணம் அல்லது மோட்சம் என்று அழைக்கப்பட்டது.
இந்த பரமபத விளையாட்டு இறையியல் தத்துவங்களை எடுத்துரைப்பதுடன், சகிப்புத் திறனை வளர்க்கக்கூடியதாக இருக்கிறது. மனிதன் பாவம், புண்ணியம், தர்மம், நேர்மை, நீதி, அன்பு, உண்மை போன்ற நெறிகளைப் பின்பற்றி வாழ்வதற்கு உதவுகிறது. மேலும் இந்த விளையாட்டால், கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும். 

இவை எல்லாவற்றையும்விட, வாழ்க்கையில் எதிர்பாராத நேரங்களில் வெற்றியும் வரும், தோல்வியும் கிடைக்கும். தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றியை அடையமுடியும் என்பதையும் சொல்லிக்கொடுக்கும்.

தன்னம்பிக்கை தரும் விளையாட்டு இது.

Leave a Comment