மூன்றாம் பாலினம் காதலிக்கட்டும்.

Image

நிஜம் ஏற்பதே அன்பு

அலைபாயும் கண்களுடன் ஒரு நடுத்தரவயது ஆணை அழைத்துவந்தார் மகேந்திரன். மரங்களைத் தொடுவதில் கிடைக்கும் பரவசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஞானகுரு, அந்த மனிதரின் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தார். அவரை கொஞ்சநேரம் ஆறுதல் படுத்தி பின்னர் பேசத் தூண்டினார்.

‘’எனக்கு ஒரே ஒரு மகன்… அவன் திடீர்னு பொம்பளை மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சான். அடிச்சித் திருத்தமுடியலை. டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போனோம். அப்புறமும் சரிப்படலை. வீட்டிலே எப்படியாவது இருந்துக்கோ… வெளியே போகும்போது மட்டும் ஆம்பிளை மாதிரி நடந்துக்கோன்னு சொன்னோம். அதை ஏத்துக்கிட்டு, அப்படியே நல்லபடியா இருந்தான்.

காலேஜ் படிச்சு முடிச்சுட்டு இப்பதான் ஒரு கம்பெனியில் வேலைக்குப் போனான். அதுக்குள்ள, அங்கே இருக்கிற ஒருத்தரை விரும்புறேன். அவரும் என்னை விரும்புறார். நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவரோட சேர்ந்து தனியே வாழப்போறேன்னு சொல்றான். ஆம்பிளையும் ஆம்பிளையும் கல்யாணம் முடிக்கிறதை ஏத்துக்க முடியலை சாமி. எங்க குடும்பத்து ஆளுங்களுக்கு இன்னமும் இவனைப்பத்தி எதுவும் தெரியாது. அவனை தடுத்து நிறுத்த ஏதாச்சும் வழி இருக்குதா சாமி…’’ கடகடவென பேசி முடித்தவர், அவமானத்தில் இருப்பது போல் கூனிக்குறுகி இருந்தார்.

‘’வீட்டில் ஏதேனும் மிருகங்கள் அல்லது பறவையை வளர்க்கிறாயா..?’’

‘’ஒரு நாய் வளர்க்கிறேன்.. .அதுதான் என்னுடைய ஆறுதல்…’’

‘நாயின் மீது நீ அன்பு செலுத்துகிறாயா..?’’

‘’என்ன இப்படி கேட்கிறீங்க… தினமும் சாயங்காலம் வாக்கிங் கூட்டிட்டுப் போகலைன்னா கத்தி கூப்பாடு போடுவான். அவனுக்கு என் கூட வெளியே போறதுன்னா அவ்வளவு குஷி… எனக்கும் அவன் இல்லைன்னா பொழுதே போகாது…’’

‘’அந்த நாயின் விருப்பதை ஏற்றுக்கொள்கிறாய், ஆனால் உன் மகனின் விருப்பத்தை ஏற்க மறுக்கிறாய்…”

‘’புரியலையே சாமி…”

‘’ஒரு நாயின் ஆசைக்காக அதனை வெளியே கூட்டிச் செல்கிறாய், அது விருப்பப்பட்ட உணவு கொடுக்கிறாய். அது எப்படியிருந்தாலும், என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்கிறாய்… ஆனால் உன் மகன் விருப்பத்தைக் கேட்க மறுக்கிறாய்..? உன்னுடைய மகன் இப்போது ஆண் அல்ல… பெண்ணும் அல்ல… மூன்றாம் பாலினம். அவனுடைய ஆசையும், விருப்பமும் வேறாகத்தான் இருக்கும். அதனை நீ ஏற்கத்தான் வேண்டும்…’’

‘’அவனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன், அதற்காக அவனுடைய காதலையுமா..?’’

‘’காதல் என்றாலே அது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் மட்டும்தான் மலரும் என்ற வழக்கமான மனப்பான்மையில் இருந்து நீ வெளியே வர வேண்டும். உனக்கும் நாய்க்கும் இடையில் இருப்பதும் ஒரு வகையான காதல்தான்.  காதல் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை, காதலுக்கு எந்த எல்லையும் இல்லை….

ஜாதி, மதம், மொழி, நிறம், மட்டுமல்ல… ஆண், பெண் என்ற பால் கடந்ததும்தான் காதல். ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும், ஒரு திருநங்கைக்கும் ஒரு ஆணுக்கும்,ஒரு திருநங்கைக்கும் ஒரு திருநம்பிக்கும், ஒரு திருநங்கைக்கும் இன்னொரு திருநங்கைகக்கும் அல்லது ஒரு திருநங்கைக்கும் ஒரு பெண்ணுக்கும் என இந்த காதல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதுவும் காதல்தான். உண்மையைச் சொல்வது என்றால் ஆண், பெண் காதலைவிட, மூன்றாம் பாலினத்தவர்களின் காதல் துயரம் நிறைந்தது. ஏனென்றால், அவர்கள் முதலில் அவர்களை காதலிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் முன்வர வேண்டும். அதன் பிறகுதான் அதே நிலையில் இருக்கும் வேறு ஒருவரை காதல் செய்ய முடியும். அவர்களுக்கும் காத்திருப்பு, அழுகை,  ஊடல், காமம், பிரிவு, வலி போன்ற எல்லாமே உண்டு.

எனவே உன் மகனின்  காதலை கொண்டாட முடியவில்லை என்றாலும், எந்த கேள்வியும் இன்றி அதை ஏற்றுக்கொள். அந்த காதலுக்குத் துணையாக நிற்க கற்றுக்கொள்…’’

‘’ஆனால், என் உறவுகள்… நட்புகள்…?”

‘’நீ என்ன செய்யவேண்டும் என்பதுதான் உன் கவலையாக இருக்கவேண்டுமே தவிர, பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது அல்ல. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஒரு மகனையும் அவனது காதலையும் இழக்கத் தயாராக இரு…’’ என்று எழுந்துகொண்டார் ஞானகுரு.

இருளில் இருந்தவர் வெளிச்சத்துக்குச் செல்வதா வேண்டாமா என்று இன்னமும் யோசித்துக்கொண்டே இருந்தார்.

Leave a Comment