ஆசிரியர் பக்கம்
எத்தனை கொடுத்தாலும் அன்பு தீரப்போவதில்லை. அதனால் சிலர் அன்பை அள்ளியள்ளிக் கொடுக்கிறார்கள். இது தவறு இல்லை. கொடுத்த அன்புக்குப் பதிலாக அன்பு கிடைக்காவிட்டாலும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுவும் தவறு இல்லை.
ஆனால், அன்புக்குப் பரிசாக காயம் கிடைக்கிறது என்றால்..? வலி கிடைக்கிறது என்றால்..? அந்த அன்புக்கு எல்லைக்கோடு நிச்சயம் வேண்டும்.
உண்மையான அன்பு கெஞ்சாது, கெஞ்ச வைக்காது. ஏங்காது, ஏங்கவும் வைக்காது. அன்பு யாரையும் பழி வாங்காது. எனவே, அன்பு எளிமையாக இருக்க வேண்டும். ஆனந்தமாக இருக்க வேண்டும். கம்பீரமாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான அன்பு.
அப்படிப்பட்ட அன்பை சிலர் ஆதாயத்துக்குப் பயன்படுத்தலாம். சிலர் ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தலாம். அன்பை சிலர் பலவீனமாக நினைக்கலாம்.
பெற்ற தாயை வேலைக்காரியாகப் பயன்படுத்தும் பிள்ளைகள் இருக்கிறார்கள். தந்தையை பணம் கொட்டும் ஏடிஎம்மாக பார்க்கிறார்கள். உறவுகள், நட்புகள் என்றால் தேவையான நேரத்தில் ஓடிவந்து உதவவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அன்பை சந்தேகிப்பார்கள், நிந்தனை செய்வார்கள். இப்படிப்பட்ட நபர்களுக்கு நிபந்தனையற்ற அன்பு செலுத்த அவசியமே இல்லை.
சுயமரியாதையை விட்டுத்தர மாட்டேன் என்ற கம்பீரம் அன்புக்கு இருக்க வேண்டும். பொறுமையாக இருப்பேன். கனிவாகப் பேசுவேன். அதற்காக டாக்சிக் பேச்சுக்களை சகித்துக்கொள்ள மாட்டேன். அவமரியாதையை ஏற்க மாட்டேன். காயப்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன். என் கருணையை யாரும் சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கம்பீரம் காட்டும் அன்புக்கு தனி அழகு உண்டு. அப்படிப்பட்ட நபரின் அன்பை பெறுவதற்கே அனைவரும் ஆசைப்படுவார்கள். ஏமாளியின் அன்பு யாருக்கும் தேவையில்லை.
எனவே, பாத்திரமறிந்து அன்பு செலுத்துங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
