- டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம்,
முன்னாள் மருத்துவ அதிகாரி, சென்னை மாநகராட்சி.

தேவையை கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். அந்த தேவையுடன், தோல்வி என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆம், மருந்துகளின் தோல்வியை ஆய்வு செய்து உருவான மருத்துவமே ஹோமியோபதி.
நோயின் கொடிய தன்மையினால் இறப்பவர்களைப் போன்றே மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் ஏராளமான மனிதர்கள் மரணம் அடைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அலோபதி மருத்துவத்தில் எம்.டி. முடித்திருத்த டாக்டர் கிறிஸ்டியன் ஃரெட்ரிக் சாமுவேல் ஹானிமன். இந்த குறைகளை நீக்கி பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஹானிமனின் கண்டுபிடிப்பில் 1796ம் ஆண்டு உருவானது தான், ஹோமியோபதி மருத்துவம். ஹானிமனே ஹோமியோபதியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இன்று ஹோமியோபதி மருத்துவம் உலகம் முழுக்கவே பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக படித்தவர்கள் மத்தியில் இந்த மருத்துவம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதேநேரம், பாமர மக்களிடம் இன்னமும் இது பரவலாக போய்ச் சேரவில்லை. ஏனென்றால், இது வெளிநாட்டு மருத்துவம் என்றே நினைக்கிறார்கள்.
அதாவது, ஆங்கில மருத்துவத்தை அலோபதி என்று அழைப்பது போன்று அரபு நாட்டு மருத்துவத்தை யுனானி என்கிறார்கள். நமது நாட்டின் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தை இந்திய மருத்துவம் என்கிறார்கள். ஹோமியோபதி மருத்துவத்தை ஜெர்மன் மருத்துவம் என்று சொல்வதைக் கேட்டு, இது நம் நாட்டுக்கு சரியாக வராது என்று நினைக்கிறார்கள். எந்த நாட்டு மருத்துவம் என்றாலும், அது மனிதர்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடியது என்பதே உண்மை.
முன்பு தமிழகத்தில் ஒரே ஒரு ஹோமியோபதி கல்லூரி மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது 9 ஹோமியோபதி கல்லூரிகள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்தே ஹோமியோபதிக்கு சமீப காலத்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஒவ்வொரு கல்லூரியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் ஹோமியோபதி படிக்கிறார்கள். அலோபதி மருத்துவம் போலவே ஹோமியோபதி மருத்துவ முறையையும் ஐந்தரை ஆண்டுகள் படித்து, ஹவுஸ் சர்ஜன் முடித்து, முழுமையான ஹோமியோபதி மருத்துவராக வெளிவருகிறார்கள்.
அலோபதி மருத்துவர்களைப் போலவே ஹோமியோபதி மருத்துவர்களும் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு, மத்திய மாநில அரசுகள் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். ஹோமியோபதி மருந்துகளை 30க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உற்பத்தி செய்கின்றன. இதில், அலோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுகு போன்ற அளவில் வெண்மை நிறத்தில் சின்னச்சின்ன உருண்டையாக மருந்தைப் பார்க்கும் சிலர், ‘இது எப்படி நோயைக் குணப்படுத்தும்?’ என்று சந்தேகம் அடைகிறார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போன்றே ஹோமியோபதி மருந்துகளின் வீரியமும் செயலும் அதன் அளவில் கிடையாது, அதன் தன்மையிலே உள்ளது.
தாவரவியல் மேதையான ஹானிமனுக்கு சிங்கோனா மரப்பட்டையின் சாறு மலேரியா நோயை குணமாக்கும் என்பது தெரியவந்த்து. உடனே அந்த சாற்றை தானே குடித்துப் பார்த்து, தன் உடலில் மலேரியா நோய் அறிகுறிகள் ஏற்படுவதைக் கண்டார். அதாவது, ‘எது ஒன்றை உண்டாக்குகிறதோ, அதுவே அழிக்கவும் செய்யும்’ என்பதே ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம். முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, வைரத்தை வைரத்தால் அறுப்பது போன்று ஹோமியோபதி மருத்துவம் செயல்படுகிறது.
அலோபதி மருத்துவத்தை ஒப்பிடுகையில் இது குறைவான செலவில் பயன் தரக்கூடியது. அதனாலே அண்ணல் காந்தியடிகள் ஹோமியோபதி மருத்துவத்தை இந்தியா முழுக்க பரவலாக கொண்டுபோக வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையோடு இருந்தார்.
நம் இந்தியாவில் 80 சதவிகித மக்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள். அறியாமை காரணமாக இன்று நம் விவசாயிகள் ரசாயன மருந்துகள் பயன்படுத்தியே பயிர்களை வளர்க்கிறார்கள். செயற்கையாக உருவாக்கப்படும் புதுப்புது பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதாலும், நோய்க்கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும் இன்று மனிதர்கள் சாப்பிடும் பெரும்பாலான உணவு ரசாயனம் கலந்ததாகவே இருக்கிறது. அதனாலே நோய் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நம் நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் நல்ல பயன் தரக்கூடியது ஹோமியோபதி மருத்துவம் என்ற புரிதலை அத்தனை நபருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது அவசியமாகும். பக்கவிளைவுகள் இல்லாத, எளிதில் பாதுகாத்து வைக்கக்கூடிய இந்த ஹோமியோபதி மருந்துகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும்படி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் அத்தனை மக்களும் விழிப்புணர்வு பெற்று ஹோமியோபதி மருந்துகளை சாப்பிட்டு பயன்பெற இயலும்.
ஹோமியோபதி மருத்துவத்திற்கு உலகம் முழுக்க நல்ல பெயரும் புகழும் இருக்கிறது. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ஹோமியோபதி மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பவர். அதனாலே, பிரிட்டிஷ் மகாராணியின் குடும்ப வைத்தியத்தில் ஹோமியோபதிக்கும் முக்கிய இடம் இருக்கிறது. பிரிட்டன் நாட்டின் தேசிய சுகாதாரத் திட்டத்தில் அலோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்று ஹோமியோபதி மருத்துவர்களும் இடம் பெற வேண்டும் என்று இளவரசர் சார்லஸ் பரிந்துரை செய்திருக்கிறார். ’ஆங்கில மருத்துவத்தை விட ஹோமியோபதிக்கு செலவு குறைவு என்பதால் பிரிட்டனின் மருத்துவச் செலவில் ஆண்டுக்கு 480 கோடி ரூபாய் மிச்சமாகும்’ என்றும் சார்லஸ் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இந்த திட்டமே சரியானது. அலோபதி மருத்துவர்களும் ஹோமியோபதி மருத்துவர்களும் இணைந்து செயல்படத் தொடங்கினால் உலகின் தலைசிறந்த மருத்துவத் தலைநகரமாக நம் இந்தியா மாறிவிடும். ஜாதி, மத பேதத்தை தவிர்ப்பது போன்று மருத்துவ பேதத்தையும் தவிர்த்தால் மட்டுமே எல்லோருக்கும் குறைந்த செலவில் நல்ல மருத்துவம் கிடைக்கும்.
தொடர்புக்கு : 98415 55955