• Home
  • சட்டம்
  • வாரிசுக்கும் நாமினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுங்க

வாரிசுக்கும் நாமினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுங்க

Image

சட்டம் தெரிஞ்சுக்கலாம்

வங்கியில் டெபாசிட் போடும் நேரத்தில் நாமினி யாரு என்று கேட்பார்கள். நாமினி என்றால் வாரிசு என்றே பலரும் நினைக்கிறார்கள். நாமினிக்கும் வாரிசுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது என்கிறார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நிலா.

பொதுவாகவே முதலீடு, சொத்து போன்றவை எதிர்காலத்தில் யாருக்குச் சேரவேண்டும் என்று எழுதி வைப்பது நல்லது. அப்போதுதான் சட்டச் சிக்கல் உருவாகாமல் இருக்கும். நாமினி நியமனம் என்பது முதலீடுகளைப் பெறுவதற்கு பயன்படும். ஆனால், அதை அனுபவிப்பதற்கு அவருக்குச் சட்டப்படி உரிமையில்லை. அவர் அந்த முதலீட்டைப் பெற்று, வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது உயிலில் குறிப்பிட்டுள்ளபடி பிரித்துக்கொடுக்க வேண்டும்.

ஒரு முதலீட்டிற்கு நாமினியை நியமிப்பதன் மூலம், அந்த முதலீடு நாமினிக்கே போய்ச் சேராது. மற்ற வாரிசுகளுக்குச் சட்டப்படி அதில் பங்கு உண்டு. இதைத் தவிர்க்க, ஒருவர் முறைப்படி உயில் எழுதவேண்டும். அதில், இந்த முதலீடுகள் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், பி.எஃப் முதலீட்டுக்கு ரத்த சம்பந்தமான உறவுகளையே நாமினியாக நியமிக்க முடியும். திருமணமான பிறகு நாமினியை மாற்ற வேண்டும். இல்லையெனில் ஏன் அவர்களை நாமினியாக நியமித்திருக்கிறீர்கள் என்பதற்கான விளக்கம் தரவேண்டும். உயில் இல்லாதபட்சத்தில் வாரிசுதாரர்கள் பங்கு கோரலாம். ஆனால், நாமினிக்கே முன்னுரிமை அதிகம்.

வங்கிக்கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், பிக்ஸட் டெபாசிட் லாக்கர், பி.பி.எஃப் : நாமினி இருந்தாலும், வாரிசுதாரர்களுக்கே உரிமை.  லைஃப் இன்ஷூரன்ஸ் : பெனிபிஷரி நாமினி என்று குறிப்பிட்டிருந் தால் மட்டுமே நாமினிக்கு சொந்தம். இல்லாவிட்டால் வாரிசுதாரர்களுக்கே முன்னுரிமை. டீமேட் கணக்கில் உள்ள நிறுவனப் பங்குகள்: நிறுவன சட்டப் பிரிவு 109ஏ மற்றும் டெபாசிட்டரி சட்டப்பிரிவு 9.11-படி நாமினிக்கே முழு உரிமை. நாமினி மைனராக இருந்தால் அவருக்கு ஒரு கார்டியன் நியமிக்க வேண்டியிருக்கும். நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தவர் இறந்து விட்டால், வேறு நாமினியை நியமிக்க வேண்டும். வியாபார நிமித்தம் நாமினியாக மூன்றாவது நபரையும் சொந்த விஷயங்களுக்கு நாமினியாக உறவுகளையும் நியமிப்பது குழப்பத்தைத் தீர்க்கக்கூடியதாக இருக்கும்.

  • எம்.நிலா, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.

Leave a Comment