புதிய சமஸ்கிருத சட்டங்கள் மாற்றம்
ஒவ்வோர் ஆட்சியின் காலகட்டத்திலும் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவருவார்கள். இதுபோன்று ஏராளமான சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போது முதன்முதலாக சட்டங்களையே பா.ஜ.க. அரசு மாற்றுகிறது. ஜூலை 1 முதல் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு பெரும் போராட்டத்தைக் கிளப்பியிருக்கிறது.
இனி எந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியும், சிறுவர், சிறுமியரை பாலியல் கொடுமை செய்பவருக்கு மரண தண்டனை, ஒரு வழக்கினை இரண்டு முறை மட்டுமே கோர்ட் ஒத்தி வைக்க முடியும் என்பது போன்று புதிய சட்டங்களைக் கொண்டுவருகிறோம் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் உண்மையில், அந்தச் சட்டங்களுக்கு புதிதாக சமஸ்கிருதத்தில் பெயர்களை வைத்திருக்கிறார்களே ஒழிய, சட்டங்கள் என்னவோ அப்படியேதான் இருக்கின்றன. எனவே, இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசும் வழக்கறிஞர்கள், ‘’சட்டத்தின் பெயர்களை ‘இந்திமயம்’ ஆக்குகிறோம் என்று சொல்லி, சமஸ்கிருதத்தில் பெயர்களை வைத்திருக்கிறார்கள். எந்தச் சட்டத்துக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கும் நடைமுறை எப்போதுமே இருந்ததில்லை. இதுவரை சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. அதே நேரத்தில், அந்தந்த மாநிலங்களில் மக்களின் வசதிக்காக மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்துகொள்ளப்படுவது நடைமுறையாக இருந்துவருகிறது.
மத்திய அரசால் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும், சட்டங்களும் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 சொல்கிறது. இதற்கு மாறான வகையில், பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், சமஸ்கிருதம் அல்லது இந்தி என்று குறிப்பிட்ட ஒரு மொழியில் சட்டங்களைக் கொண்டுவருவது ஏற்புடையது அல்ல. அது அனைத்து மக்களின் உரிமைக்கும் எதிரானது.
தற்போது இருக்கும் சட்டங்களின் பிரிவுகளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் காலங்காலமாகக் கையாண்டு வருகிறார்கள். பெரும்பாலான சட்டப்பிரிவுகள் அவர்களுக்கு மனப்பாடமாக இருக்கும். இப்போது, புதிய குற்றவியல் சட்டங்களில் பிரிவுகள் எல்லாம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் பெரும் குழப்பத்துக்கு ஆளாவார்கள். இந்தப் பிரச்னையை சில நீதிபதிகளே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்படட் தேசத்துரோகச் சட்டமான பிரிவு 124 ஏ-வை நீக்க வேண்டுமென்று நீண்டகாலமாக பலரும் குரல் எழுப்பிவருகிறார்கள். அதுபோன்ற சட்டங்கள் முற்றிலுமாக நீக்கப்படாமல், அதற்கான பிரிவுகளை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.
புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்படுவதால், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலிருந்து பிரச்னைகள் தொடங்கும் என்றும், நடைமுறை சார்ந்த நிறைய சிக்கல்கள் வரும் என்று நீதிமன்றம் சார்ந்த அத்தனை பேரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதையும் தாண்டி சட்டங்களை திணித்தால் விவசாயிகள் போராட்டம் போன்று வழக்கறிஞர்கள் டெல்லி நோக்கி போராட்டத்தைத் தொடங்குவார்கள்’’ என்று சொல்கிறார்கள்.