• Home
  • சினிமா
  • மறைந்த பாடகி பவதாரணி மீண்டும் பாட வருகிறார்

மறைந்த பாடகி பவதாரணி மீண்டும் பாட வருகிறார்

Image

தொழில்நுட்ப யுகத்தில் புதிய புரட்சி

தொழில்நுட்ப புரட்சி காரணமாக எதுவெல்லாம் முடியாது என்று நினைத்தோமோ, அது எல்லாமே நடக்கத் தொடங்கியிருக்கிறது. பாடகி பவதாரணி மறைந்துவிட்டார், இனி அவர் குரலை கேட்க முடியாது என்று நினைத்த ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் வகையில், மீண்டும் பவதாரணியின் குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. அதனை, மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. 

இதனை சாதித்திருப்பவர், இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தன். அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி ‘திமிரி எழுடா’ என்ற உத்வேக‌மூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, கோட் திரைப்படத்தில் இடம்பெறும் குடும்ப பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகியுள்ளார்.

இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெரிதும் மகிழ்ந்த கிருஷ்ண சேத்தன், பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து பெற்று, மூன்று தினங்கள் தனது குழுவினருடன் உழைத்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்கு அதை பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய கிருஷ்ண சேத்தன், “பவதாரிணி அவர்களின் குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா அவர்களும் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்,” என்று கூறினார்.

டைம்லெஸ் வாய்சஸ் குறித்து கிருஷ்ண சேத்தன் கூறுகையில்,  “பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். ரஹ்மான் சாரிடம் இந்த யோசனையை நாங்கள் முன்வைத்த போது அவர் அதை வரவேற்றார். இதைத் தொடர்ந்து ‘திமிரி எழுடா’ பாடலுக்கு பம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீதின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவர்களது குரலை பயன்படுத்தினோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்றார்.

Leave a Comment