சின்ன கோட்டுக்கு அருகில் பெரிய கோடு

Image

சொத்து போராட்டத்துக்கு ஒரு கவுன்சிலிங்

கார்த்திகேயனும் அவரது மனைவி புஷ்பாவும் வந்து அமர்ந்தார்கள். இருவரது முகமும் கலங்கியிருந்ததால் யாருக்குப் பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்களே சொல்லட்டும் என்று அமைதி காத்தேன்

புஷ்பா பேசத் தொடங்கினார். ‘’இவங்க அப்பா செத்ததும் சொத்துப் பிரச்னை வந்திச்சு. இவருடைய அண்ணன் கிட்டத்தட்ட எல்லா சொத்தையும் எடுத்துக்கிட்டார். நாங்க கோர்ட்டுக்குப் போனோம். போன மாசம் இவரோட அண்ணனுக்கு சாதகமா தீர்ப்பு வந்திச்சு. அதுல இருந்து ரொம்பவும் கோபமா இருக்கிறார். எதற்கெடுத்தாலும் எரிஞ்சு விழுறார். ஏற்கெனவே ரொம்பவும் செலவழிச்சுட்டோம், இவரு திரும்பவும் மேல் கோர்ட்டுக்குப் போய் சொத்தை வாங்கப்போறேன்னு நிக்கிறார். அவரோட அண்ணனை அடிக்கப்போறேன், கூலிப்படையை வைச்சுக் கொல்லப் போறேன்னு என்னென்னவோ பேசுறார்… ஏதாச்சும் தப்புத்தண்டா நடந்துடுமோன்னு பயமா இருக்கு’’ என்று மனைவி சொல்வதைக் கேட்டு அமைதியாகவே இருந்தார்.

நான் பேசிக்கொள்கிறேன் என்று அவரது மனைவியை வெளியே அனுப்பிவிட்டு கார்த்திகேயனிடம் பேசினேன்.

‘’என்ன வேலை பார்க்கிறீங்க..?”

‘’ஸ்கூல்ல டீச்சரா இருக்கிறேன்… குடும்ப சொத்து எவ்வளவு முக்கியம், அது எத்தனை பெருமைன்னு என் பொண்டாட்டிக்குப் புரிய மாட்டேங்குது. நீங்க ஆம்பிளைங்கிறதால உங்களுக்குப் புரியும். இன்னைக்குத் தேதிக்கு 75 லட்சம் ரூபாய் சும்மா வருமா… எனக்கு பாதிப் பங்கு இருக்குது. அதை ஏமாத்தி அண்ணன் வைச்சிருக்காரு…’’ என்றார்.

‘’ஏன், சமமா பங்கு பிரிக்கலை…’’

‘’அப்பா ஒரு பலசரக்குக் கடை வைச்சிருந்தாரு. அண்ணனும் அப்பா கூடவே இருந்து கடையை பார்த்துக்கிட்டாரு. நான் படிச்சு வேலைக்கு வந்துட்டேன். ஒரு பெரிய வீடும் கடையும் இருக்குது. அது, எப்படியும் ஒன்றரை கோடிக்கு மேலே போகும். அண்ணன் எப்படியோ வீடு, கடைக்கு சொத்து வரி, கரண்ட் பில் எல்லாம் அவர் பெயருக்கு முந்தியே மாத்திக்கிட்டாரு. நான் பங்கு கேட்டதுக்கு, ‘’உன்னை படிக்க வைச்சாச்சு. நல்லா சம்பாதிக்கிறே. நானும் அப்பாவும் ராத்திரி பகலா கடையில இருந்து சம்பாதிச்சிருக்கோம். ஊருக்கு வெளியே நிலம் இருக்கு. எப்படியும் 20 லட்சம் போகும். அதை வேணும்னா வாங்கிக்கோ. இதுல இருந்து எதுவும் தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆளுங்களை வைச்சு நியாயம் பேசியும் அண்ணன் கட்டுப்படலை. இப்போ அவர் பக்கம் கேஸ் ஜெயிச்சிடுச்சு. ஆனாலும், நான் விடப் போறதில்லை, மேல் கோர்ட் போகப்போறேன்… இல்லைன்னா வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறேன்’’ என்றார்.

‘’இப்போ நீங்க சொந்த வீட்ல இருக்கீங்களா இல்லைன்னா…’’

‘’அது சொந்த வீடுதான். நான் லோன் போட்டு வாங்குனது. அப்போ அப்பா ஒரு அஞ்சு லட்சம் ரூபா குடுத்தாரு, அதையெல்லாம் பெரிய ரூபாயின்னு பேசுறாரு அண்ணன். அவர் சும்மா இருந்தாலும் அவரோட பசங்க ரொம்பவும் துள்ளுறாங்க. எனக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான். எனக்கு பேசுறதுக்கு யாரும் இல்லை, அதான் எல்லோரும் என்னை ஏமாத்துறாங்க…’’ என்றார்.

’’அம்மா என்ன செய்றாங்க…?’’

‘’அம்மா அஞ்சு வருஷத்துக்கு முந்தியே தவறிட்டாங்க. வீடும் கடையும் ஒரே இடத்துல இருந்ததால அண்ணன் கூடவே அப்பா இருந்துட்டாரு. அதனால, அப்பாவுக்குத் தெரியாம வீட்டையும் கடையையும் அவர் பெயருக்கு மாத்தியிருக்கிறார்…’’

நியாயமாக அப்பா சொத்தில் இருவருக்கும் பங்கு இருக்கிறது என்றாலும் அண்ணன் படிக்காமல் அதே கடையில் அப்பாவுக்கு உதவியாக இருந்ததால், அந்த வீட்டுக்கும் கடைக்கும் சொந்தம் கொண்டாடுகிறார். தம்பியை படிக்க வைத்துவிட்டதால் வீட்டிலும் கடையிலும் பங்கு தர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அவர் பக்கம் இருந்து பார்த்தால் அது நியாயமாகத் தெரியலாம். அதனால் 75 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 20 லட்சம் ரூபாயைக் கொடுக்க முன்வந்திருக்கிறார். ஆனால், 50 லட்சத்துக்கும் மேல் விட்டுத்தர கார்த்திகேயன் தயாராக இல்லை. இப்போது நீதிமன்றமும் அண்ணனுக்கு சாதகமாக நடந்துகொண்டதால் தன்னுடைய கோபத்தை அடக்க முடியாத நிலைக்கு ஆளாகியிருக்கிறார் என்பது புரிந்தது.

‘’அப்பீலுக்குப் போனா ஜெயிக்க முடியும்னு நினைக்கிறீங்களா..?’’

‘’நல்ல சீனியர் லாயர் வைச்சு வாதாடுனா ஜெயிக்க முடியும்னு எங்க வக்கீல் சொல்றார். ஆனால், இந்த கேஸ் முடியவே அஞ்சு வருஷமாச்சு. மேலே போனா எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலை. அதான் கையில அருவாளை எடுத்தாத்தான் நியாயம் கிடைக்கும்… நான் போனா மாட்டிக்குவேன், மாட்டிக்காத மாதிரி ஏதாச்சும் செய்யணும்’’ என்றார்.

‘’ஆசிரியரா இருக்கிறீர்கள்… மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டாமா… இப்படி வன்முறையை கையில் எடுப்பதாகச் சொல்றீங்க, எப்படியும் மாட்டிக்குவீங்கன்னு தெரியலையா….?’’

‘’வேற என்ன செய்றது, எங்க அப்பா சம்பாதிச்ச சொத்து சார்… அப்பாவுக்கு என் மேல எவ்வளவு மரியாதை தெரியுமா சார். அவர் உசுரோட இருந்தா எல்லா சொத்தையும் எனக்கே குடுத்துருப்பார்’’ என்று அவர் கண்கள் உஷ்ணமானது.

‘’உங்க சொந்தக்காரங்க என்ன சொல்றாங்க…?’’

‘’இரண்டு பக்கமும் பேசுறாங்க…. அனுசரிச்சுப் போன்னு சொல்றாங்க’’ என்றார்.

அப்பீலுக்குப் போனாலும் இவர் ஜெயிக்க முடியாது என்பதாலே வன்முறையை கையில் எடுத்து கூடுதலாக சொத்து கிடைக்குமா என்று பார்க்கிறார் என்பது புரிந்தது. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக இவரும் குடும்பமும் சிக்கலில் மாட்டிக்கொள்வார். இவர் விட்டுக்கொடுப்பது மட்டுமே சரியான தீர்வு. ஆனால், ஏமாளி என்ற பட்டம் கிடைத்துவிடும் என்பதால் பிடிவாதமாக இருக்கிறார். சொத்தை விட நிம்மதியே முக்கியம் என்பதை நேரடியாக எடுத்துச் சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதும் புரிந்தது. எனவே, வேறு வகையில் தான் இவருக்குப் புரிய வைக்க முயல வேண்டும் என்பது புரிந்தது.

‘’உங்க குடும்பத்துல எல்லோரும் எப்படி பழகுவீங்க..?’’

‘’எங்க அப்பா சாகுற வரைக்கும் நல்லா இருந்தோம் சார். என்ன விசேஷம்னாலும் அண்ணன் வீட்டுக்குப் போவோம். நல்லா கவனிப்பாங்க. இப்பத்தான் அது எல்லாமே சொத்தை சீட்டிங் போடுறதுக்குப் போட்ட வேஷம்னு தெரியுது. சொத்து பிரச்னை ஆரம்பிச்சதுல இருந்து வீட்ல சண்டையும் சச்சரவுமாத்தான் இருக்குது. இந்த பிரச்னை முடிஞ்சாத்தான் நிம்மதி கிடைக்கும்…’’

‘’உங்க மனைவிக்கும் உங்களுக்கும் வேற ஏதாச்சும் பிரச்னை இருக்குதா..?’’

‘’அதெல்லாம் ஒண்ணும் கிடையாது சார். ரொம்பவும் நல்லவ. அவளால தான் பொறுமையா இருக்கேன், இல்லைன்னா என்னைக்கோ அருவாவை கையில் எடுத்திருப்பேன்’’ என்றார். ஏமாந்து போன வலியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரும் அவஸ்தைப்பட்டு மற்றவர்களையும் வருத்தப்பட வைக்கிறார் என்பது புரிந்தது. நேரடியாக இதை சொன்னால் புரிந்துகொள்ளவே மாட்டார். அதனால், அவருக்குத் தெரியாமல் என் செல்போனில் இருந்து நண்பருக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பினேன்.

சில நிமிடங்களில் போன் வந்தது. அந்த செல்போன் எண்ணைப் பார்த்ததும், ‘’ஸாரி மிஸ்டர் கார்த்திகேயன். வழக்கமா கவுன்சிலிங் நேரத்தில் யாருடைய போனையும் எடுக்க மாட்டேன். இது ரொம்ப நேரமாக நான் எதிர்பார்த்த போன். இதைப் பேசிக்கொள்ளவா?’’ என்றதும் கார்த்திகேயன் பதறிக்கொண்டு சம்மதம் கொடுத்தார்.

போனை எடுத்ததும், ‘’இந்திராவுக்கு என்ன ஆச்சு..?’’ என்றேன். நான் அவ்வப்போது இப்படி மெசேஜ் செய்து, அவரை பேசச்சொல்வது வழக்கம் என்பதால் அவர் புரிந்துகொண்டு சமாளித்துப் பேசினார். நான் அவ்வப்போது, ‘’அச்சச்சோ…’’, ‘’அப்புறம்…’’, ‘’அடக்கடவுளே… சரி, நைட் நேரில் வர்றேன்’’ என்று சில பரிதாபமான கமென்ட்ஸ் சொல்லி போனை கட் செய்து கொஞ்சநேரம் அமைதியாக இருந்தேன்.

‘’சார், பெரிய பிரச்னையா?’’ என்று கார்த்திகேயன் கேட்டார்.

‘’ம்… உங்ககிட்டே சொல்றதுக்கு என்ன..? இந்திராங்கிறது என் சொந்தக்காரப் பொண்ணு. நாலு வருஷமா பிள்ளை இல்லாம டெஸ்ட் டியூப் பேபிக்குப் போனாங்க. வயித்துல இரட்டைக் குழந்தை உருவாகிடுச்சு. டெலிவரிக்கு ரெண்டு மாசம் இருக்குது. நேத்து ராத்திரி இந்திராவுக்கு வலிப்பு மாதிரி வந்திச்சுன்னு ஹாஸ்பிடல்ல சேர்த்தோம். இப்போ அவ நார்மலுக்கு வந்துட்டா. ஆனா, ரெண்டு குழந்தையையும் காப்பாத்த முடியலை. சிசேரியன் செஞ்சு எடுத்துட்டாங்க. இதுல கொடுமை என்னன்னா, அவளோட கர்ப்பப்பையையும் சேர்த்து எடுத்துட்டாங்க. இனிமே அவ குழந்தை பெற முடியாது. இதைக் கேட்டதும் இந்திராவோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து, அவரும் இப்போ சீரியஸா இருக்கார்… 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியுமாம்’’ என்றேன்.

நான் சொன்ன மாடுலேஷனில் பரிதாபப்பட்டு அதிர்ச்சியானார் கார்த்திகேயன். ‘’என்ன சார், இந்தக் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனையா வரணும்… எப்படித்தான் அந்தக் குடும்பம் இதையெல்லாம் தாங்குதோ?’’ என்றார்.

‘’ஆமாங்க, காசு பணம் போனாக் கூட சம்பாதிக்கலாம். யாருக்காவது ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா ஒட்டுமொத்த வாழ்க்கையும் போயிடும்… இதை விட மோசமான சூழ்நிலையில் நிறைய பேர் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க சார்… நைட்டு போய் அந்தப் பொண்ணைப் பார்த்து ஆறுதல் சொல்லணும்… இதுல இன்னொரு விஷயம் இருக்குது. செத்துப்போன இந்திராவோட அப்பாவுக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து கேஸ் ஒண்ணு நடந்துக்கிட்டு இருக்குது, அது இனி என்ன ஆகும்னு தெரியலை… ’ என்று சொல்லிவிட்டு அமைதி காத்தேன்.

அவர் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதி காத்தார். அவர் யோசனை செய்வதும் குழப்பமாவதும் புரிந்ததும் மீண்டும் பேசத் தொடங்கினேன். 

‘’ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியில் கஷ்டப்படுறாங்க. அதை விடுங்க. உங்க அண்ணனை இங்கே கூப்பிட்டு வர முடியுமா? நான் பேசிப் பார்க்கிறேன். அவர் குடியிருக்கிற வீடுங்கிறதால அதை கண்டிப்பா தர மாட்டார். ஆனா, வேற என்ன வழின்னு பேசுவோம்’’ என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்தார்.

‘’சார், பணம் ரொம்பவும் முக்கியம். ஆனா, அது மட்டும் வாழ்க்கை இல்லை. உங்களுக்கு குடும்ப வாழ்க்கை முக்கியமா இல்லைன்னா சொத்து முக்கியமான்னு யோசிச்சு காரியத்தில் இறங்குங்க. ஏன்னா ரொம்பவும் கோபப்பட்டா உடம்புக்குச் சிக்கலாயிடும். யாருக்கு எப்ப என்ன ஆகும்னு சொல்ல முடியாது… நீங்க கூலிப்படை பத்தி யார்கிட்டேயும் தயவுசெஞ்சு பேசாதீங்க. உங்க அண்ணன் ரோட்ல போய் யார் மேலயாவது சாதாரணமா மோதுனா கூட, நீங்க ஏற்பாடு செஞ்ச ஆளுன்னு நினைச்சு கேஸ் கொடுத்துடுவார். அப்புறம் ஜெயிலுக்குப் போயிட்டீங்கன்னா உங்க பொண்ணு வாழ்க்கையும் பாழாப் போயிடும்… வேலை போயிடும்…’’ என்றேன்.

முகத்தில் பயம் தெரிந்தது. மெதுவாகப் பேசினார். ‘’கோபத்துல பேசுறேன், ஆனா அப்படி செய்ய மாட்டேன்..’’

‘’சூழ்நிலை அப்படியெல்லாம் பார்க்காது கார்த்திகேயன். உங்க அண்ணன் நினைக்கிறாரோ இல்லையோ, உங்க மனைவி கூட அப்படி நினைக்கலாம்… அவருக்குத் தெரியாம ஆள் ஏற்பாடு செஞ்சதா சந்தேகப்படலாம்… அதனால், இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுறது நல்லது…’’ என்றேன்.

‘’அண்ணன் நான் கூப்பிட்டா வருவாரான்னு தெரியலை. எங்க மாமா தான் மத்தியஸ்தம் பேசிக்கிட்டு இருக்கார். அவர்கிட்டே பேசிப் பார்க்கிறேன்…’’ என்றார்.

‘’அண்ணன் வராட்டியும் பரவாயில்லை. நீங்க நாளைக்கு வாங்க. இன்னும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு…’’ என்று அனுப்பி வைத்தேன்.

அவரது சின்ன சிக்கலுக்குப் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய சிக்கல் வரப்போவதை உணர்த்தும் இரு கோடுகள் தத்துவத்தைப் பயன்படுத்தினேன். அவரை விட அதிகமான சோகத்துடன், வேதனையுடன் நிறைய பேர் வாழ்கிறார்கள் என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தேன். அடுத்த நாளே அதற்கான பலன் தெரிந்தது. 

‘’மாமாகிட்டே பேசினேன். எதுக்கு வீணா அப்பீலுக்கு அலையப் போறே… நான் பார்த்துப் பேசி கூடுதலா பணம் வாங்கித்தர்றேன். சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு சொன்னார். விட்டுக் கொடுத்தா கெட்டுப் போக மாட்டாங்கன்னு சொன்னார்… எங்க அம்மாவும் அப்படித்தான் சொல்வாங்க…. அதனால நானும் பேசச் சொல்லிட்டேன். தோத்துப் போனதால பேச வர்றேன்னு நினைப்பாங்க. நினைச்சா நினைச்சுட்டுப் போகட்டும்’’ என்றவர் மறக்காமல், ’’இந்திராவோட அப்பா நல்லா இருக்கிறாரா?’’ என்று ஆர்வமாகக் கேட்டார்.

’’ஆமா, சார் நல்லாயிட்டார்… ரெண்டு பிளாக் இருக்குது, ஸ்ட்ண்ட் வைச்சா போதும்னு சொல்லிட்டாங்க. சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பிடுவார்’’ என்று அனுப்பிவைத்தேன்.

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

9840903586

Leave a Comment