என்ன செய்தார் சைதை துரைசாமி – 282
மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் இல்லாத காரணத்தாலே பலரும் தைரியமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்கள். அரசியல் மற்றும் அதிகார பலத்தைக் காட்டி அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுத்து வந்தார்கள். ஆனால், மேயராக சைதை துரைசாமி வந்ததும் சென்னையில் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்தன. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை எல்லாம் கண்டறிந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்.
மாணவர்களுக்கு கல்விச் சேவை செய்வதற்குத் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களும் வியாபார நோக்கத்திற்கு மாறிவிடுகின்றன. மாணவர்களுக்கு நேர்மையையும், நியாயத்தையும் கற்றுத்தர வேண்டிய கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துவந்தன. என்ன காரணம் என்றாலும், ஆக்கிரமிப்பு என்பதை மேயர் சைதை துரைசாமி ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை.
பெருநகர சென்னை கோட்டூர் கிராமத்தில் சென்னை மாநகராட்சி பெயரில் பட்டா உள்ள நிலத்தில் 10 ஏக்கர் 2 கிரவுண்ட் நிலத்தை தூய பேட்ரிக் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி முன்வந்தார். அப்போது அரசியல்வாதிகள், மாநகராட்சி அதிகாரிகள் என பலரும் கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல, மக்களுக்கு நன்மை செய்துவரும் நிறுவனத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள்.
கல்வி சேவை செய்யவேண்டிய நிறுவனம் முறைகேடாக சொத்து சேர்ப்பது தவறு என்று நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. அங்கே மாநகராட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு பெறப்பட்டது. கல்வி நிறுவனம் மேல்முறையீட்டுக்குப் போனது என்றாலும் மேயர் சைதை துரைசாமி மீட்டெடுத்த நிலத்தின் மதிப்பு தோராயமாக 525 கோடி ரூபாய் ஆகும்.
- நாளை பார்க்கலாம்.