என்ன செய்தார் சைதை துரைசாமி – 283
மாநகராட்சி நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அதன் மீது மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மேயர் சைதை துரைசாமி காலத்தில் தான் மக்களுக்குத் தெளிவாகத் தெரியவந்தது. கட்சி பலம், ஆள் பலம், பண பலம் போன்றவைகளைக் காட்டி நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் புரிந்தது.
எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் நடந்திருக்கிறது என்று பொதுமக்கள் நேரடியாக மேயர் சைதை துரைசாமிக்குத் தகவல் தருவதும், அந்த தகவல் குறித்து முழுமையாக விசாரித்து, உண்மை என்று தெரிந்தால் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்தது. அதோடு, நீண்ட காலமாக இழுபறியில் இருந்த விவகாரங்களுக்கும் மேயர் சைதை துரைசாமி முற்றுப்புள்ளி வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை மேல்நிலைப் பள்ளிகளின் அருகில் உள்ள 32 மனை பரப்புள்ள இடத்தை பள்ளி வளர்ச்சிக்குப் பெறுவதற்காக கடந்த 35 ஆண்டு காலமாக முயற்சி எடுக்கப்பட்டது. வேறு வழியே இல்லாத நிலையில் அந்த இடத்தை, வழிகாட்டி மதிப்பின்படி கையகப்படுத்த அரசாணை பெறப்பட்டது. ஆனால் இந்த நிலையில், சைதை துரைசாமி பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பணம் கொடுப்பதற்கு அரசாணை பெறப்பட்டு இருந்தாலும், மாநகராட்சிக்கு எந்த செலவும் இல்லாமல் அந்த இடத்தை மீட்க வேண்டும் என்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அதில் வெற்றியும் கண்டார். மேயர் சைதை துரைசாமியின் முயற்சி காரணமாக பிரச்னையில் சிக்கியிருந்த நிலம் மாநகராட்சிக்கு ஒரு ரூபாய்கூட செலவில்லாமல் பெறப்பட்டது. இது, மேயர் சைதை துரைசாமியின் சிறப்பான நிர்வாகத்திற்கு சிறந்த உதாரணம் என்று இன்றும் அதிகாரிகள் பெருமையுடன் பாராட்டி வருகிறார்கள்.
- நாளை பார்க்கலாம்.