பெண்களே தயவுசெஞ்சு செய்யாதீங்க
உலகில் உள்ள அத்தனை ஆண், பெண்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமை உள்ளது. அனைவருமே, ’தங்களுடைய அந்தரங்க உறுப்பு அத்தனை சிறப்பானது இல்லை, அவலட்சணமாக இருக்கிறது’ என்ற குற்றவுணர்வுடன் இருக்கிறார்கள். அதனாலே அந்த உறுப்பு பராமரிப்பு, சந்தேகம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கும் விவாதம் செய்வதற்கும் தயங்குகிறார்கள்.

இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி ஆண் உறுப்பு பெரிதாக்குதல் பெண் உறுப்பு புழை சிறிதாக்குதல் போன்ற சிகிச்சையளித்து பணம் கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் அதிகரித்துவருகிறார்கள். இவர்கள் பரப்பும் பொய்யான மூட நம்பிக்கையில் யாரும் குறிப்பாகப் பெண்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார் டாக்டர் பதூர் மொய்தீன்.
பாலியல் உறுப்புகள் குறித்து நிலவும் மூடநம்பிக்கை குறித்துப் பேசும் பதூர், ‘’எல்லா ஆண்களுக்கும் பெண்களைத் திருப்திபடுத்துவதற்குத் தேவையான நீளத்துடன் உறுப்பு இருக்கிறது. அதற்கு மேல் தேவையில்லை என்றாலும் தங்கள் உறுப்பு நீளம் குறித்து கவலைப்படுகிறார்கள். அதனாலே நம்பிக்கையூட்டும் வகையில் விளம்பரம் தரும் போலி மருத்துவர்களை தேடிச் சென்று நிறைய நிறைய பணம் ஏமாறுகிறார்கள். தேவையில்லாத மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு உடல் நலனையும் கெடுத்துக்கொள்கிறார்கள்.
ஆண்களை மட்டுமே காலம் காலமாக திட்டமிட்டு ஏமாற்றிவந்த இந்த கும்பல் இப்போது பெண்களையும் ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்களின் பிறப்புறுப்பு குறித்து பொய்யான மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள். திருமணம் முடித்த பெண்கள், சுகப்பிரசவம் ஆன பெண்களை குறி வைத்து இந்த மோசடியினால் லட்சம் லட்சமாய் பணத்தை இழக்கிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணின் பெண்ணுறுப்பும் தனித்துவமானது என்பதே உண்மை. பிறப்புறுப்பின் உருவம், அளவு, நிறம், தோற்றத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சின்னச்சின்ன வித்தியாசம் இருக்கும். ஆனால், எப்படி இருந்தாலும், அதுவே அவரவர் உடம்புக்கு ஏற்றது, சரியானது. ஆனால், நிறைய பெண்கள் தங்கள் உறுப்பு அழகாக இல்லை, வாசனையாக இல்லை, கவர்ச்சியாக இல்லை என்ற கவலையுடனே இருக்கிறார்கள். அதேநேரம், மனதில் இருக்கும் சந்தேகத்தை மருத்துவரிடம் கேட்பதற்கும், பேசுவதற்கும் முன்வருவதில்லை.
இப்படிப்பட்ட பெண்களின் சஞ்சலத்தை சில மருத்துவர்களும், அழகு நிலையத்தினரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குழப்பத்துடன் இருக்கும் பெண்களிடம், ‘’உங்கள் லேபியா எனப்படும் பிறப்புறுப்பின் வெளிப்பகுதி கவர்ச்சியாக இல்லை, பெரிதாக இருக்கிறது, யோனிப் புழை மிகவும் அகலமாக உள்ளது. இப்படி இருந்தால் ஆண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. உங்களிடம் சொல்வதற்கு விருப்பமின்றி உறவு கொள்வதை தள்ளிப் போவார்கள். சரியான துணை கிடைத்துவிட்டால் பிரிந்து சென்றுவிடுவார்கள்..’’ என்று அச்சமூட்டுகிறார்கள்.
பின்னர் அவர்களே, ‘’ஆனால், இதனை அழகுபடுத்துவதற்கு சிம்பிளாக லேபியாபிளாஸ்டி (labiaplasty) செய்துவிடலாம். இதனால் எந்த பக்கவிளைவும் இருக்காது. அழகாகவும் கவர்ச்சியாகவும் மாறிவிடும் என்பதால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்துவிடும், உங்களையே கணவர் சுற்றிச்சுற்றி வருவார்’’ என்றெல்லாம் ஆசையைத் தூண்டி ஒப்புக்கொள்ளச் செய்கிறார்கள். அதனால் பெருநகரங்களில் ‘லேபியாபிளாஸ்டி’ எனப்படும் பெண்ணுறுப்பில் செய்யப்படும் காஸ்மெடிக் சர்ஜரி வசதியான இளம் பெண்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன் என்பதை வேறு பெண்களிடம் பேசும் அளவுக்கு பெருமைப்படவும் செய்கிறார்கள்.
இந்த அறுவை சிகிச்சை யாருக்குமே தேவையில்லை என்பதே உண்மை. இந்த சிகிச்சை காரணமாக உறவு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதில் தேவையில்லாத சிரமம் உண்டாக வாய்ப்பு உண்டு. தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே, பெண்ணுறுப்பு தோற்றத்தை மாற்றுவது, புழையின் அகலம் குறைப்பது போன்ற எல்லாமே தேவையில்லாத மூடநம்பிக்கை’’ என்கிறார்.
இந்த சிகிச்சை இந்தியாவில் இப்போது தான் அதிகரித்து வருகிறது என்றாலும் வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக கொடி கட்டிப் பறக்கிறது. இதற்கு காரணம் செல்போன் பயன்பாடு. தற்போது எல்லோருடைய கைகளிலும் ஆண்ட்ராய்டு செல்போன் இருப்பதால், எல்லோராலும் நிறைய பெண்கள் மற்றும் ஆண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கவும், ஒப்பிட்டுக்கொள்ளவும் முடிகிறது.
ஒரு சில வீடியோக்கள் பெண்ணுறுப்பு இப்படித் தான் இருக்க வேண்டும், ஆண்களுக்கு இது தான் பிடிக்கும் என்று பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்புகின்றன. இந்த ரகசிய வீடியோக்களில் டாக்டர் என்று சிலர் பேசுவதைக் கேட்டு, உண்மை என்று நம்பி சிகிச்சைக்கு முன்வருகிறார்கள். அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச சங்கத்தின் (ISAPS) கூற்றுப்படி, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023ல் உலகளவில் லேபியாபிளாஸ்டி செய்பவர்களின் எண்ணிக்கை 14.8% வெளிநாடுகளில் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதாரச் சேவை தரும் என்.ஹெச்.எஸ்., “லேபியாபிளாஸ்டி செய்துகொள்வது பல அபாயங்களைக் கொண்டது. இதில் பெண்கள் விரும்பும் ரிசல்ட் கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’’ என்று எச்சரிக்கிறது. மேலும், லேபியாபிளாஸ்டி காரணமாக ரத்தப்போக்கு, நோய்த்தொற்று, திசுக்களில் வடு, பெண்ணுறுப்புகளின் உணர்திறன் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
எனவே, மாணவப் பருவத்திலேயே பாலியல் உறுப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்போது தான் தங்கள் உறுப்பு பற்றிய குற்றவுணர்வு, கவலை, தயக்கத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள்.
டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், ஃபாத்திமா நர்சிங் ஹோம், சென்னை
தொடர்புக்கு : 9003414537