பள்ளிகளில் எல்லாம் பரிசோதனைக் கூடங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 145

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் நலனுக்கு என்னவெல்லாம் தேவை என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து நிறைவேற்றத் தொடங்கினார் மேயர் சைதை துரைசாமி. ஒரு மேயராக அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்வதற்கு அவசியம் இல்லை என்றாலும் கல்வி விஷயத்தில் ஒருபோதும் சைதை துரைசாமி சமரசம் செய்துகொள்ளவே இல்லை.

தனியார் பள்ளிகளில் பரிசோதனைக் கூடங்கள் பெரிதாக இருப்பதைக் காட்டியே அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். வாரத்தில் ஒரு நாள் பரிசோதனைக் கூடத்தில் பிள்ளைகள் பொழுதைக் கழிப்பதை பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பரிசோதனைக் கூடங்கள் இருந்தாலும், அவை முறைப்படி பராமரிப்புடன் இருப்பதில்லை. ஒருசில பள்ளிகளில் பரிசோதனைக் கூடங்களே இல்லை. இதுவும் மேயராக இருந்த சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

தனியார் பள்ளிகளின் மாணாக்கர்களுக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணாக்கர்களுக்கும் பரிசோதனைக் கூடங்கள் பயன்படுத்துவதில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்று மேயர் சைதை துரைசாமி நினைத்தார். எனவே, அனைத்து பள்ளிகளிலும் பரிசோதனைக் கூடங்கள் கட்டாயம் இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு பரிசோதனைக் கூடங்களில் அனைத்து உபகரணங்களும் பரிசோதனைக்கு உகந்ததாகவும், போதிய பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பது கட்டாயம் என்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. பரிசோதனைக் கூடம் இல்லாத பள்ளிகள் மற்றும் உபகரணங்களில் குறை இருக்கும் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, உடனடியாக அவற்றை நிறைவேற்றும் பணிகள் துரித வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து மாநகராட்சி மாணவர்களுக்கும் பரிசோதனைக் கூடங்கள் அதிக உற்சாகம் தரும் அனுபவமாக மாறின.

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவில் மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்ட நேரத்தில், சாமியானா பந்தலில் விழா நடைபெற்றது.  இதுகுறித்து விசாரித்ததும், மாநகராட்சிப் பள்ளியில் பரிசளிப்பு விழா, கலை நிகழ்ச்சிக்கு சாமியானா போட்டு கொண்டாடுவதுதான் வழக்கம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையை மாற்றுவதற்கு சைதை துரைசாமி முன்வந்தார். இதையடுத்து, 100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளில் ஆடிட்டோரியம் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது. நான்கு அல்லது ஐந்து வகுப்பறைகளை ஒன்றிணைத்து ஆடிட்டோரியம் அமைக்க வழி வகுக்கப்பட்டது. தரைப் பகுதியில் இடம் இல்லாத பள்ளிகளின் மாடியில் ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிகளில் தங்குதடையின்றி விழாக்கள் நடைபெற முடிந்தது. சாமியானா அமைப்பதற்குச் செய்யப்படும் செலவும் மிச்சமானது.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment