அழகு அள்ளித்தரும் கோழிக்கால்

கொலாஜன் சத்து

கோழிக் கறி வாங்கும்போது கோழிக் கால்களை தூக்கி வீசுகிறார்கள். ஆனால், இவற்றில் எத்தனை சத்துக்கள் நிரம்பியிருக்கிறது என்று தெரியுமா?

இயற்கையிலேயே கொலாஜன் (Collagen) அதிகம் நிறைந்த உணவுகளில் ஒன்றாக கோழிக்கால் இருக்கிறது. ஆனால், இந்த உண்மை புரியாமல் எல்லோருமே கோழிக்கால்களை அலட்சியம் செய்கிறார்கள்.

கோழிக் கால்களை நீண்ட நேரம் மெதுவாக வேக வைத்து சூப் தயாரித்துக் குடித்தால் அதிகபட்ச பலன் கிடைக்கிறது. கோழிக்காலில் உள்ள கொலாஜன் ஜெலட்டினாக மாறி, கிளைசின் (Glycine), புரோலின் (Proline), ஹைட்ராக்ஸிபுரோலின் (Hydroxyproline) போன்ற முக்கிய அமினோ அமிலங்களை வெளியிடுகிறது. இவை தோல், மூட்டுகள், எலும்புகள், தசைநார்கள் மற்றும் உடலின் இணைப்புத் திசுக்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் சத்துகள்

சமீபத்தில் ஜர்னல் ஆஃப் அக்ரிகல்சரல் அண்ட் ஃபுட் கெமிஸ்ட்ரி இதழில் வெளியான ஆய்வுகள் கோழிக்கால் கொலாஜினை உறுதிபடுத்துகிறது. கொலாஜன் நிறைந்த விலங்கு திசுக்களை சமைக்கும்போது ஜெலட்டினும், கொலாஜனிலிருந்து பெறப்படும் அமினோ அமிலங்களும் வெளிவருகின்றன. மேலும், கொலாஜன் சப்ளிமெண்ட்கள் குறித்த சில ஆய்வுகள், இந்த அமினோ அமிலங்கள் தோலின் நெகிழ்வுத்தன்மை, மூட்டு ஆரோக்கியம் மற்றும் இணைப்புத் திசுக்களின் செயல்பாட்டை ஆதரிக்கக்கூடும் என்று ஆதாரபூர்வமாக கூறுகின்றன.

கோழி இறைச்சித் துண்டுகள் தசைப் புரதத்திற்காக மதிக்கப்படுகின்றன. ஆனால், கோழிக் கால்கள் உடலின் இணைப்புத் திசுக்களுக்கு வலிமையும் நெகிழ்வுத்தன்மையும் அளிக்கும் கட்டமைப்புப் புரதங்கள் கொண்டவை. அதனாலே முன்னோர்கள் பாரம்பரிய உணவுகளில் கோழிக்கால் மூலம் சத்துமிக்க சூப் தயாரித்துக் குடித்துவந்தனர்.

அதனாலே சளி, காய்ச்சல் மட்டுமின்றி எந்த ஒரு நோய் என்றாலும் கோழி அடித்து, அதன் அத்தனை பாகங்களையும் சூப், குழம்பு என்று வைத்து சாப்பிடுவது தமிழர் பண்பாடாக இருந்தது. விருந்தினர் வருகையின் போதும் கோழிக் குழம்பு வைப்பது மதிப்புமிக்க விருந்தாக கருதப்பட்டது.

எலும்பு சூப் என்பதை நேரடியாக மருந்தாக நினைக்கக்கூடாது.  ஆனால், சமநிலையான உணவுமுறையின் ஒரு பகுதியாக, உயர்தரப் புரதம் மற்றும் கொலாஜனிலிருந்து கிடைக்கும் சத்துகளைப் பெற உதவும் நல்ல உணவாக இருக்கலாம்.

கோழிக்கால் சூப் செய்வதற்கு அதிகம் மெனக்கெட வேண்டாம். கோழிக் கால்களுடன் கொஞ்சம் வெங்காயம், வினிகர் சேர்த்து நிறைய நீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நான்கு கோழிக் கால்களில் இருந்து கிடைக்கும் சூப்பில் இருந்து நான்கு பேர் குடிக்கும் அளவுக்கு வந்ததும் இறக்கிக் குடிக்கலாம்.

முகத்தில் பளபளப்பு, தோலில் மினுமினுப்பு வருவதுடன் மூட்டுகளில் ஆரோக்கியம் திரும்பும். வாரம் ஒரு முறை குடித்துப் பாருங்கள்.

Leave a Comment