அண்ணா தி.மு.க.வின் அக்டோபர் 17
அண்ணா மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மூலம் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் கருணாநிதி. அடுத்த 1971 தேர்தலில் கருணாநிதியை ஜெயிக்க வைப்பதற்கு எம்.ஜி.ஆர். சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மிகப்பெரும் வெற்றி தி.மு.க.வுக்குக் கிடைத்தது.
வெற்றிக்கு உழைத்த எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எம்.ஜி.ஆரும் ஆசைப்பட்டார். ஆனால் கருணாநிதி, ‘சினிமாவில் நடிக்கிறதை விட்டுட்டா குடுத்துடலாம்’ என்று ஒரு நிபந்தனை விதித்தார். இப்படியொரு நிபந்தனையை எம்.ஜி.ஆர். எதிர்பார்க்கவில்லை. அதேநேரம், வெளிப்படையாக எதிர்க்கவும் இல்லை.
எம்.ஜி.ஆரை நீண்ட நாட்கள் காத்திருக்கச் செய்ய முடியாது என்பதை உணர்ந்த கருணாநிதி, அவரது செல்வாக்கை சினிமாவிலும் அரசியலிலும் குறைப்பதற்கான நட நடவடிக்கையில் இறங்கினார். மு.க.முத்துவை எம்.ஜி.ஆர். போலவே வேடமிட்டு நடிக்க வைத்தார். அதோடு எம்.ஜி.ஆர். மன்றங்களுக்குப் போட்டியாக மு.க.முத்து ரசிகர் மன்றங்கள் வளரத் தொடங்கின.
இந்த நேரத்தில் தி.மு.க. ஆட்சியில் லஞ்ச லாவண்யமும் ஊழலும் பெருகியோடுவதாக பெருந்தலைவர் காமராஜர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதை காரணம் காட்டி எம்.ஜி.ஆர். அக்டோபர் 8ம் தேதி கணக்கு கேட்டார். 10ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அக்டோபர் 17ம் தேதி புதிய கட்சியை தொடங்கிவிட்டார்.
அண்ணா தி.மு.க.வை புரட்சித்தலைவர் தொடங்கிய தினத்திலிருந்தே கருணாநிதிக்கு சிக்கல் தொடங்கிவிட்டது. அதன்பிறகு எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த வரையிலும் கருணாநிதி ஆட்சிக்கு வரவே முடியாமல் வனவாசம் செல்ல நேர்ந்தது.
இந்த சம்பவம் குறித்து கவிஞர் கண்ணதாசன் அவரது, ‘நான் பார்த்த அரசியல்’ எனும் புத்தகத்தில் அவருக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். வரலாற்று ஆச்சர்யத்தை ரசியுங்கள்.
அந்த புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி இங்கு.
’’கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் ‘கணக்கு அனுப்ப வேண்டும்’ என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
‘’இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.’’ என்று எழுதியிருக்கிறார்.
கருணாநிதி போட்ட தப்புக்கணக்கினால் 10 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த வரையிலும் வெற்றியைத் தொட முடியவே இல்லை.