என்ன செய்தார் சைதை துரைசாமி – 208
காமராஜர் சாலை சீரமைப்புக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி 33 கோடி ரூபாய் நிதி பெற்று வந்த மேயர் சைதை துரைசாமியின் தெளிவான திட்டமிடலைக் கண்டு அதிகாரிகள் ஆச்சர்யமானார்கள். காமராஜர் சாலையை முழுமையாக நவீன மாடலில் மாற்றலாம் என்று ஆலோசனை சொன்னார்கள்.
மெரினா கடற்கரை என்பது உலக நாட்டவர் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலா தலம். ஆகவே, அங்கு நம் பாரம்பரியமும் நல் கலாச்சாரமும் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியுடன் இருந்தார். எனவே, பழமையில் புதுமை இருக்க வேண்டும் என்று தெளிவாகத் திட்டமிட்டு செயல்படுத்தினார்.
அதன்படி, புதைந்த நிலையிலும் சேதமடைந்தும் கிடைத புராதன கல் தூண்கள் அதே பாணியில் மாற்றப்பட்டன. இந்த கல் தூண்களுக்கு இடையில் கலைநயமிக்க துருப்பிடிக்காத வார்ப்பு இரும்புகளாலான கிரில்கள் அமைக்கப்பட்டன. அது மட்டுமின்றி, அங்கு கிரானைட் நடைபாதை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகளை எல்லாம் ஏசி அறைக்குள் இருந்து நிறைவேற்றாமல் ஒவ்வொரு கட்டத்திலும் நேரில் வந்து நின்று ஆய்வுகள் செய்தார்.
தான் செயல்படுத்தும் திட்டங்கள் நீண்ட காலம் உழைக்கும் வகையிலும் அதேநேரம் அதீதப் பயன்பாட்டைத் தாங்கும் வகையில் உறுதியாகவும் அமையவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஒவ்வொரு பொருட்களின் தரத்தையும் பரிசோதனை செய்தே பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுத்தார்.
இதே போன்று மாநிலக் கல்லூரியின் நுழைவாயிலும் களை இழந்து பொலிவின்றிக் கண்டு, உடனடியாக முதல்வரை சந்தித்துப் பேசினார். நுழைவாயிலை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். அதோடு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரையும் சந்தித்து மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்த பிறகே மாநிலக் கல்வியின் நுழைவாயில் பொலிவாக மாறியது.
மேயராக சைதை துரைசாமி இருந்த நேரத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைத்தது. இதனால், யாரும் முன்னெடுக்காத பிரச்னைகளையும் தானே எடுத்துப் போட்டுக்கொள்வது மட்டுமின்றி, அதை செம்மையாகச் செய்துமுடிக்கும் சிறந்த நிர்வாகி என்ற அங்கீகாரமும் கிடைத்தது.
- நாளை பார்க்கலாம்.