என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 136
இன்று உலக அளவில் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது என்றால், சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி செய்த தலைவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே காரணம். குறிப்பாக பெருந்தலைவர் காமராஜர் கல்விக் கண் திறக்கும் வகையில் ஏராளமான பள்ளிகளைத் திறந்து மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அந்த மதிய உணவுத் திட்டத்தில் பெரும் சீர்திருத்தம் செய்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டமே அத்தனை மாணவர்களையும் பள்ளிக்குக் கொண்டுவந்து சேர்த்தது.
இவர்களுடைய வழியில் மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவமும் உதவிகளும் செய்பவர் சைதை துரைசாமி. ஒரு மாணவன் நன்கு படித்து, வேலையில் சேர்ந்துவிட்டால், அந்த குடும்பம் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு பொருளாதார சுதந்திரம் அடைந்துவிடும் என்பதை நன்கு அறிவார்.
அதனாலே சைதை துரைசாமி பொதுவாழ்க்கையில் நுழைந்த காலத்தில் இருந்தே மாணவர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். முன்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் மட்டுமே பள்ளியில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. எனவே, மாணவர்களுக்கு சொந்த செலவில் நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை ஆண்டுதோறும் வழங்கிவந்தார். அரசு இலவசமாக நோட்டு கொடுக்கத் தொடங்கிய பிறகு வேறு வகைகளில் சேவையைத் தொடங்கினார். அவற்றில் ஒன்று தான் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள். இது குறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
கல்வி மீது சைதை துரைசாமிக்கு மிகப்பெரும் மதிப்பு உண்டு. கல்வி என்பது மட்டுமே நிலையான செல்வம். அது காலத்தால் அழியாது. கள்வர்களால் கவர முடியாதது. வெள்ளத்தால் போகாது. தீயினாலும் வேகாது. கொடுக்கக் கொடுக்க குறையாது. அறியாமை, வறுமை ஆகியவற்றை போக்கும் என்று உறுதியாக நம்பினார்.
அதேநேரம், கல்வியை வியாபாரமாகச் செய்து பணம் சம்பாதிப்பதில் சைதை துரைசாமிக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. அதனால் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கான முதல் வாய்ப்பு சைதை துரைசாமிக்குக் கிடைத்தபோது, ’கல்வியை வியாபாரமாக்க விரும்பவில்லை, அதனை சேவையாக மட்டுமே தொடர்வேன்’ என்று மறுத்துவிட்டார்.
கல்வி மீது மதிப்பு, மரியாதை மட்டுமின்றி இதுவொன்றே சமூக மாற்றத்தை உண்டாக்கும் கருவி என்பதில் பெரும் நம்பிக்கை வைத்திருந்த சைதை துரைசாமிக்கு பெருநகர சென்னை மேயராக வாய்ப்பு கிடைத்ததும், மாநகராட்சிப் பள்ளிகளில் மிகப்பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டார்.
- நாளை பார்க்கலாம்.