என்ன செய்தார் சைதை துரைசாமி – 507
காமராஜருக்கு மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆருக்கு சத்துணவுத் திட்டம் போன்று ஜெயலலிதாவும் நேரடியாக ஏழைகளுக்கு உதவுவதற்கு ஒரு திட்டம் வழங்கவேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி கூறியதை ஜெயலலிதா கவனத்துடன் கேட்டுக்கொண்டார்.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகத்தின் அன்னலட்சுமியாக போற்றப்படுவீர்கள் என்று மேயர் சைதை துரைசாமி கூறியதைக் கேட்டு ஜெயலலிதா மகிழ்ச்சி அடைந்தார். அதனாலே பல்வேறு குறுக்குக் கேள்விகள் கேட்டு, தெளிவு பெற்றார்.
இதையடுத்து கொஞ்சநேரம் கண்களை மூடி அமைதியாக யோசித்தார் ஜெயலலிதா. அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் சைதை துரைசாமி அமைதி காத்தார்.
நன்றாக யோசித்து சிந்தனை செய்து முடித்தவுடன் மலர்ந்த முகத்துடன் கண் திறந்தார். ‘’மிஸ்டர் சைதை. நீங்கள் சொல்வது போன்று செய்துவிடலாம். தமிழகம் முழுக்க 1,000 இடங்களில் மலிவு விலை உணவகம் நடத்துவோம். முதல் கட்டமாக சென்னையில் 200 வார்டுகளில் தொடங்கிவிடுவோம். இதுகுறித்து மாநகர பட்ஜெட்டில் அறிவித்து விடுங்கள்..’’ என்று அனுமதி கொடுத்தார்.
தன்னுடைய மலிவு விலை உணவகத் திட்டம் பிரமாண்டமாக செயல்படப் போகிறது என்றதும் சைதை துரைசாமிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. உடனடியாக மாநகராட்சியின் முதல் நிதிநிலை அறிக்கையில் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் மேயர் சைதை துரைசாமி.
இந்த அறிவிப்பு சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால்..?
- நாளை பார்க்கலாம்.
