இதுவும் டாஸ்மாக் போதை
ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘’இப்போது அரசு சார்பிலே ஜல்லிக்கட்டு நடத்துவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது’’ என்றபடி அருகில் அமர்ந்தார்.
‘’அரசு நடத்துவது எல்லாமே சரி என்று நினைத்துவிடக் கூடாது. டாஸ்மாக் மூலம் ஒரு சமுதாயத்தை குடியில் தள்ளியிருக்கும் அரசு இப்போது ஜல்லிக்கட்டு மூலம் ஒரு புதுவித போதையை மக்களிடம் உருவாக்குகிறது என்பதே உண்மை.
முன்பு ஜல்லிக்கட்டு என்று ஒரு வீர விளையாட்டு தமிழகத்தில் இருந்தது என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படலாம். இன்றும் நடப்பதில் பெருமைப்பட எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்றைய நாகரிக யுகத்திலும் மாடு குத்தி செத்துப்போகும் அவலம் இருப்பதற்கு அவமானப்பட வேண்டும். முன்பு மாடு பிடித்தவனுக்கு சொந்த மகளை கட்டிக் கொடுத்தார்கள். இதன் அர்த்தம் மாட்டை விட பெண் கேவலமான நிலையில் வைக்கப்பட்டிருந்தாள் என்பது தான்.
மாடு என்பது அசையும் சொத்தாக கருதப்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை என்றாலும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதை இன்றும் குடும்ப கெளரவமாகவே பார்க்கிறார்கள். சாதி பார்த்தே மாடு விடுகிறார்கள், சாதி பார்த்தே மாடு பிடிக்கிறார்கள். எந்த பெண்ணும் மாடு பிடிக்கக்கூடாது என்று ஒதுக்கி வைக்கிறார்கள்.
மாட்டுக்கு நன்றி சொல்வது அல்லது மாடு இனத்தைக் காப்பாற்றுவதற்கு இது வழியல்ல. ஜெயித்தாலும் தோற்றாலும் மாட்டுக் கிடைப்பது புல்லுக்கட்டு தான். பரிசு, பாராட்டு, கெளரவம் என்பதெல்லாம் மனிதருக்கு மட்டும் தான். அடிமைகளை சண்டை போட வைத்து ரசித்த கூட்டம் இப்போது மாடுகளை மனிதருடன் மோதவிட்டு ரசிக்கிறது. ஒரு நாள் ராஜாவாக ஆசைப்பட்டு இளைஞர்களும் துள்ளிக் குதிக்கிறார்கள். அடிபட்டு ஊனமுற்றவர்கள், செத்துப் போனவர்களை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. எனவே, ஜல்லிக்கட்டு என்பது வரலாற்று அடையாளமாக இருந்தாலே போதும்…’’
‘’மாடு பிடிப்பவர் செத்துப்போனால் 10 லட்சம் பணமும் அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே…’’
‘’கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போனவர்களுக்கு 10 லட்சம் பணம் கொடுத்தால் இதற்கும் கேட்கத்தான் செய்வார்கள். இந்த விளையாட்டை அரசு நிறுத்தும் வரை இதுபோன்ற கேள்விகளும் வரவே செய்யும்…’’
‘’மாட்டை காப்பாற்றத் துடிக்கும் பீட்டா போன்று பேசுகிறீர்களே..?’’
‘’நான் மாடுகளுக்காகப் பேசவில்லை. மனிதருக்காகவே பேசுகிறேன். வீர விளையாட்டுகள் உலகில் எத்தனையோ இருக்கிறது. எல்லாவற்றிலும் மனிதர்களே, மனிதர்களுடன் மோதுகிறார்கள். பாதுகாப்பு கவசம் போட்டுக்கொண்டு மோதுகிறார்கள். குதிரை பந்தயத்திலும் குதிரைக்கும் குதிரைக்குமே போட்டி நடக்கிறது. இங்குதான் விசித்திரமாக இருக்கிறது.
மனிதரை நம்பி, மனிதருக்கு இரையாகும் விலங்கு மாடு. அதன் மீது கருணை காட்டுவது மனிதரின் இயல்பு அல்ல. மனிதரின் உணவுப் பட்டியலில் மாட்டுக்கும் இடம் உண்டு. ஆகவே, முதலில் மனிதர்களைக் காப்பாற்றுவோம்’’ என்றார் ஞானகுரு.