ஈஷா யோகா மையத்தில் போலீஸ்
தமிழகத்தில் போலி சாமியார்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. கடவுளின் பெயரைச் சொல்லி மக்கள் கூட்டத்தைக் கூட்டி எக்கச்சக்க பணம் சம்பாதிப்பதும் எஸ்கேப் ஆவதும் புதிது இல்லை. தற்போது கோவை ஈஷா யோகா மையத்தில் காவல் துறை நுழைந்திருப்பதும், பல்வேறு சோதனைகள் நடப்பதன் எதிரொலியாக நித்தியானந்தா போன்று ஜக்கி வாசுதேவும் எஸ்கேப் ஆகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.
ஈஷோ யோகா மையத்தின் மீது யானைப் பாதையை அபகரித்தது, அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டியது, ஆட்கள் காணாமல் போனது போன்று ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. ஆனாலும், அதிகாரவர்க்கதும் பா.ஜ.க. தொட்ங்கி தி.மு.க. வரை அனைத்துக் கட்சியினரின் ஆதரவு காரணமாக ஈஷா மையத்தின் ஜக்கி வாசுதேவ் எந்த சிக்கலிலும் மாட்டாமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்.
இந்த நிலையில், பேராசிரியர் காமராஜ் என்பவர் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருக்கின்ற நிலையில், அவர்களை சந்திக்க ஈஷா மையம் அனுமதி மறுப்பதாக தெரிவித்து, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருடைய மகள்கள் இருவரும் ஈசா யோகா மையத்தில் துறவியாக மாற்றுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்ற சம்பவம் நடப்பதாக கூறிய அவர் மருத்துவர் ஒருவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் தெரிவித்ததைடுத்து நீதிபதிகள் விரிவாக விசாரணை செய்தனர். ஈஷா மையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, நீதிமன்றத்தில் ஆஜரான இரு பெண்களின் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மை தன்மை தெரிந்து கொள்ள விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஈசா யோகா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய மகள் லதா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக, மனுதாரர் ஆன காமராஜருக்கு மொபைல் போனின் வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் வளாகத்தில் நுழைந்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஈஷா மையம் நில அபகரிப்புப் புகாரில் மாட்டியிருப்பதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் போராட்டம் நடத்தியதும், அதை ஈஷாவின் அடியாட்கள் தடுத்து தாக்குதல் நடத்தியதும் பரபரப்புப் புகாராக மாறியிருந்தது. இப்போது பேராசிரியர் காமராஜ் விவகாரம் மட்டுமின்றி அனைத்து முறைகேடு குறித்தும் விசாரணை செய்வதற்கு உத்தரவு இடப்பட்டிருப்பதால் ஈஷாவுக்குச் சிக்கல் ஆரம்பித்திருக்கிறது. விஷயம் வில்லங்கமாக மாறுகிறது என்றால் ஜக்கி வாசுதேவ் ஏதேனும் வெளிநாட்டிற்குப் பறந்துபோய் நித்தியானந்தா போன்று நிம்மதியாக செட்டில் ஆகிவிடுவார் என்று கூறப்படுகிறது.