• Home
  • மனம்
  • சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமப்பா…

சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமப்பா…

Image

முயற்சி செய்து பாருங்கள்

‘’உங்களைப் போன்ற சாமியார்கள்தான் கொடுத்துவைத்தவர்கள். செய்து முடிக்க வேண்டிய வேலை என்று எதுவும் கிடையாது. யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. சும்மா இருந்தாலே போதும், சுகமான வாழ்க்கை’’ என்று ஞானகுருவிடம் கூறினார் மகேந்திரன்.

‘’உண்மைதான் மகேந்திரா… இந்த வாழ்க்கையில் இத்தனை இன்பம் இருக்கிறது என்று தெரியும்போது, நீயும் ஏன் என்னைப் போன்று துறவியாக மாறிவிடக் கூடாது. நீயும் சும்மா இருக்கலாமே…’’ ஞானகுரு கேட்டதும் பதில் சொல்லத் தடுமாறிய மகேந்திரன் யோசித்துப் பேசினார்.

‘’எனக்கு குடும்பம் இருக்கிறது, கடமை இருக்கிறது, நான் இல்லை என்றால் அவர்களை யார் காப்பாற்றுவது?’’

‘’ஏன், கடவுள் மீது நம்பிக்கை இல்லையா?’’

மீண்டும் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த மகேந்திரனின் தோளை தட்டியபடி, ‘’சாதாரண மனிதர்களுக்கு ஒரு நொடிகூட சும்மா இருக்கமுடியாது. அதுதான் மிகப்பெரும் கொடுமை’’ என்றார் ஞானகுரு. என்னவென்று புரியாமல் விழித்தார் மகேந்திரன்.

‘’நீ காய்ச்சலுக்கு ஒரு மாத்திரை போட்டுவிட்டால், கொஞ்சநேரம் சும்மா இருக்க மாட்டாய். ஜூரம் குறைந்துவிட்டதா என்று அவ்வப்போது தொட்டுப் பார்ப்பாய். உடற்பயிற்சி செய்ததும், உடல் பலமாகிவிட்டதா என்று தொட்டுப் பார்ப்பாய். அழகு க்ரீம் போட்டதும், தோல் வெள்ளையாகிவிட்டதா என்று அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கொள்வாய். லிஃப்ட் வருவதற்கு பட்டனை அழுத்திவிட்டு கொஞ்சநேரம் சும்மா இருக்க முடியாமல் திரும்பத்திரும்ப அழுத்திக்கொண்டு இருப்பாய். பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்ததும் சும்மா இருக்க மாட்டாய். நீ எழுதிய பதில்கள் எல்லாம் சரிதானா என்று பார்த்து டென்ஷன் ஆவாய். இத்தனை எதற்கு, ரயில்வே ஸ்டேஷன் போயிருப்பாய். ரயில் வந்துவிட்டதா என்று தண்டவாளத்தில் எட்டியெட்டி பார்ப்பாய். நீ எட்டிப் பார்க்கவில்லை என்றால் ரயில் வராதா..? இதுபோன்ற நேரங்களில் எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதற்குப் பெயர்தான் சும்மா இருத்தல். அதுதான் உண்மையான ஞானியர் குணம். இந்த குணத்தை மட்டும் கைவரப்பெற்றால், நீ எதற்காகவும், யாருக்காகவும் அச்சப்படவே மாட்டாய்’’ என்றார்.

‘’இதுபோன்ற நேரங்களில் சும்மா இருப்பது எப்படி..?”

‘’சும்மா இருப்பதை பொறுமையாக இருத்தல் என்றும் சொல்லலாம். நீ வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டால், அது அங்கேதான் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதுபோல், எல்லா விஷயங்களிலும் உறுதியாக இரு. பரீட்சைக்கும் போட்டிக்கும் தயாராவதும், அதை எதிர்கொள்வதும்தான் உன்னுடைய வேலை. அதன்பிறகு முடிவை உன்னால் தீர்மானிக்கவே முடியாது. எனவே, முடிவு தெரியும் வரையில் சும்மா இரு. நீ எதிர்பார்க்கும் முடிவு வந்தால் நல்லது, வராவிட்டாலும் நல்லது என்பதை சும்மா இருக்கும்போது தெரிந்துகொள்வாய்’’ என்றார் ஞானகுரு.

‘’சும்மா இருப்பதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா..?”

‘’சும்மா இருந்துபார்’’ என்று சிரித்தார் ஞானகுரு.

Leave a Comment