எல்லாம் ரத்தமயம்
தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதை பார்க்கப் பொறுக்க முடியாமல் எதிர்க் கட்சியினர் பொய் குற்றச்சாட்டும் அவதூறும் செய்கிறார்கள் என்று முதல்வர் சொல்லி வாயை மூடுவதற்குள் சென்னையில் ரத்தம் தெறித்துள்ளது. சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கத் தெரியாமல் ஸ்டாலின் தடுமாறுகிறார் என்று ஒட்டுமொத்தமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கவுரி என்ற பெண் வணிகர் மாமூல் தர மறுத்ததால் அவரை பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்திருக்கிறார். அதைத் தடுக்க முயன்ற கவுரியின் கணவர் மாரியும் கத்திக்குத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆறுமுகம் என்பவர் நடத்தி வந்த இனிப்புக்கடையை திமுகவைச் சேர்ந்த நகராட்சி உறுப்பினர் காசி பாண்டியன் என்பவர் தலைமையிலான கும்பல் தாக்கி சூறையாடியுள்ளது.
இந்த நிலையில் சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து: தமிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இது குறித்து அன்புமணி ராமதாஸ், ‘’சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை’’ என்று கண்டனம் செய்திருக்கிறார்.
இப்படி தாக்குதல் நடந்துகொண்டு இருந்தால் எப்படி வைத்தியம் பார்க்க முடியும் என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என்று எல்லோருமே ஸ்டாலின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். இது தான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்..?