• Home
  • தமிழ் லீடர்
  • எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்டு வந்தவர் வி.என்.ஜானகி

எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்டு வந்தவர் வி.என்.ஜானகி

Image

மறைக்கப்பட்ட புரட்சித்தலைவி

முன்னாள் முதல்வரும் புரட்சிச்தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவியுமான வி.என்.ஜானகியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது அ.தி.மு.க. இயக்கம். புரட்சித்தலவரின் மனைவி மட்டுமல்ல, சினிமாவிலும் அரசியலிலும் பல சாதனைகள் படைத்தவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

வைக்கம் நாராயணி ஜானகி என்கிற பெயரைத் தான் சுருக்கி வி.என். ஜானகி என்று பலரும் அழைத்தார்கள். அவர் பிறந்தது கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில். பொன்மனச் சேரி இல்லத்தில் ஜானகி அம்மாள் பிறந்தது 1923ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி. இவருடைய தந்தை ராஜகோபால் அய்யர். தாயார் வைக்கம் நாராயணி அம்மாள். இவருடைய தந்தை ராஜகோபால் தமிழ்ப்புலவர். இவர்களுடைய பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கும்பகோணம்.

இவருடைய சகோதரர் பாபநாசம் சிவன் நாடறிந்த பிரபலமான பாடலாசிரியர். தமிழ்த் தியாகய்யர் என்று அழைக்கப்பட்டவர். ராஜகோபால் அய்யரும் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் பள்ளிப்படிபை முடித்தவர் ஜானகி. இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டியம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை உண்டு.

கேரளாவிலிருந்து ஜானகி தனது 12வது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட தென்னிந்தியக் கலைகளில் பயிற்சி பெற்ற ஜானகி  பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்ரமணியம் நடத்தி வந்த ‘நிருத்யோதயா’ நாட்டியப் பள்ளியில் முறைப்படி நடனம் பயின்றவர்.

டைரக்டர் கே.சுப்பிரமணியம் தனது ‘இன்பசாகரன்’ என்ற படத்தில் ஜானகிக்கு நாட்டியமாடும் வேடம் அளித்தார். அப்போது ஜானகிக்கு வயது 13. ஜானகியுடன் இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மனைவியும், நடிகையுமான எஸ்.டி. சுப்புலட்சுமியும் சேர்ந்து இந்தியா முழுவதும் நாட்டிய நாடகங்களை நடத்தினார்கள். வள்ளி திருமணம் நாட்டிய நாடகத்தில் ஜானகி – முருகனாகவும், சுப்புலட்சுமி – வள்ளியாகவும் நடித்திருக்கிறார்கள்.

1948-ல் பம்பாயில் தயாராகி வந்த ‘சித்ரபகாவல்லி’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும்போது வி.என்.ஜானகி தன் பெயரை ‘சித்ரலேகா’ என மாற்றியிருக்கிறார். “பெண்களே பெண்களுக்கு மேக்கப் போட வேண்டும்” என்று சொன்னவர் ஜானகி. அப்போதே திரையுலகில் அவரது உரிமைக்குரல் ஒலித்திருக்கிறது.

ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆரும். வி.என். ஜானகியும் இணைந்து நடித்துள்ளனர். எம்.ஜி.ஆருடன் பழக்கம் ஏற்பட்டபோது ஜானகி முன்னணி நட்சத்திரம். மோகினி விளம்பரங்களிலும், டைட்டிலிலும் அவருக்கே முக்கியத்துவம் கிடைத்தது.

1944 ஆம் ஆண்டில் கே.சுப்பிரமணியமும், சி.எஸ்.வி. ஐயரும் இணைந்து இயக்கிய “பர்த்ருஹரி” படத்தில் ஒரு விசேஷம். வி.என். ஜானகி நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடைய தந்தை ராஜகோபால் ஐயரும், உறவினரான பாபநாசம் சிவனும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். படம் வெளியான தேதி 13.4.1944. அடுத்து ஜானகி நடித்து 1947 ஆம் ஆண்டு வெளிவந்த “தியாகி” படத்திலும் பாடல்களை எழுதியிருக்கிறார் ஜானகி தந்தையான ராஜகோபால் ஐயர்.

வி.என். ஜானகி நடித்த திரைப்படங்கள் மொத்தம் 31. அதில் தமிழில் மட்டும் 29 படங்கள், தெலுங்கில் 2 படங்கள். நடிப்பு, நடனம் மட்டுமில்லாமல் பாடுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஜானகி. மும்மணிகள் என்ற திரைப்படத்தில் சொந்தக்குரலில் திரைப்பாடலைப் பாடியிருக்கிற ஜானகி தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் பாடியிருக்கிறார்.

பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்ட மாதிரியே மணிப்புரி, கதக் போன்ற நாட்டியங்களையும் கற்றுக் கொண்டார் ஜானகி.  பேரறிஞர் அண்ணா வசனம் எழுதி 1949ல் வெளிவந்த ‘வேலைக்காரி’ படத்தில் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து நடித்திருக்கிறார் வி.என்.ஜானகி. படம் பெரு வெற்றியைப் பெற்றது. ‘மருத நாட்டு இளவரசி’ மைசூர் நவஜோதி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட நாட்களில்தான் அதில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். வி.என். ஜானகி இருவருடைய இதயங்களும் ஒன்றுபட்டுப் பிறகு தம்பதியாகக் கரம் பற்றினர்.

எம்.ஜி.ஆரும் – ஜானகியும் திரையுலகில் உச்சம் தொட்டிருந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைவுக்குப் பிறகு, 1962-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கும் ஜானகிக்கும் திருமணம் நடைபெற்றது.

1968 ஆம் ஆண்டு. ஜெய்ப்பூரில் ‘அடிமைப் பெண்’ படத்திற்கான படப்பிடிப்பு. ஜானகி அம்மாவும் உடன் சென்றிருந்தார். அப்போது ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா எம்.ஜி.ஆர் தம்பதியினருக்கு விருந்து வைத்தார். அப்போது எம்.ஜி.ஆருக்குத் தங்கள் பாரம்பரியப்படி வெள்ளைத் தொப்பி ஒன்றை அணிவித்தார்கள். எம்.ஜி.ஆருக்கு அந்தத் தொப்பி அழகாகப் பொருந்தியிருந்தபோது, உடனிருந்த ஜானகி அம்மாள் சொன்னார். “இனிமேல் தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் அணிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தனி அடையாளமாக இது இருக்கும்” அதன் படியே தன்னுடைய தோற்றத்தை அமைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

1985-ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர், அனைத்துக் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜானகி அம்மாவும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் வாழும் காலம் வரை ராமாபுரம் இல்லத்தின் கதவுகள், பசித்த மக்களுக்காகத் திறந்தே இருந்தன.  கும்பகோணத்தில் தொடங்கிய ஜானகி அம்மையாரின் பயணம், கோட்டை வரை சிறப்பாகச் சென்றடைந்ததே பெருமைக்குரிய ஒன்றுதான்.

எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ என்ற வெற்றித் திரைப்படம் உருவாகப் பின்னணியில் இருந்த மிக முக்கியமானவர் திருமதி.வி.என்.ஜானகி அம்மா தான். ஜானகி அம்மாள் தோட்டத்தில், வீட்டில் வேலை செய்கின்ற பணியாளர்களை அன்பாகவும், அக்கறையாகவும் கவனித்துக் கொண்டார்.

1984-ல் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோதும், அவரை உடனிருந்து கவனித்து நிழலைப் போல் உடனிருந்து காப்பாற்றியவர் ஜானகி அம்மாள்.  “எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்டு வந்த நவீன சாவித்திரி ஜானகி” என்று குறிப்பிட்டது ஆனந்த விகடனில் பிப்ரவரி 1985 இதழில் வெளியான கட்டுரை.

“எம்.ஜி.ஆர் நோயுற்றிருந்தபோது அவரைக் குளிக்க வைத்து உடையமாற்றி வேளா வேளைக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி ஒரு குழந்தையைப் போல் தன் கணவரைப் பார்த்துக்கொண்டார் ஜானகி அம்மையார்.”- இப்படிச் சொன்னவர் எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டரான பி.ஆர். சுப்பிரமணியம்.

அமெரிக்காவில் இருந்து எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு சென்னையில் கலந்து கொண்ட முதல் விழா துவங்கி எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வரை அவர் கலந்து கொண்ட விழாக்கள் வரை அவருடன் கூடவே கலந்து கொண்டவர் ஜானகி அம்மாள்.  எம்.ஜி.ஆர். ஜானகி அம்மாவை ‘ஜானு’ என்றழைப்பார். ஜானகி அம்மாளோ எம்.ஜி.ஆரை ‘அம்மா’ என்ற விகுதியுடன் ‘என்னம்மா’ ‘ஏனம்மா! ‘அதில்லைம்மா’ என்றுதான் அழைப்பாராம்.

ஜானகி அம்மாள் 1986 ஆம் ஆண்டில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் மக்கள் திலகம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனைவியாக வாழ்ந்தது குறித்து ஜானகி அம்மா இப்படிச் சொல்லியிருக்கிறார். “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது உற்ற துணையாக, அவரது நிழலாக, தொண்டு செய்யும் வாழ்க்கைத் துணையாக வாழ்ந்தேனே தவிர, வேறு எதற்கும் நான் ஆசைப்பட்டதில்லை”.

1988 மார்ச் 19 ஆம் தேதி ஜானகி அம்மாவுக்கு மறக்க முடியாத நாள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட “பாரத ரத்னா” விருதைக் கலங்கிய கண்களோடு பெற்றுக் கொண்டார் ஜானகி அம்மாள்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின் படி கழகத்தின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜானகி அம்மாள். “நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு நள்ளிரவில் நான் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தப்பட்டேன்” என்று அப்போதைய முடிவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் அவர்.

தமிழகத்தின் 11வது முதல்வர் என்பதோடு தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையோடும், இந்திய அளவில் 5வது பெண் முதலமைச்சராகவும் பொறுப்பெற்றார் திருமதி.வி.என். ஜானகி அம்மையார். (24 நாட்களுக்குள் (7-1-1988 முதல் 30 -1-1988 வரை) முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார்.)

எம்.ஜி.ஆருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அந்த நிலமும் கட்டடமும், தனது கணவரின் கட்சியான அதிமுகவின் அலுவலகமாக பயன்படுத்துவதற்கு, 1987 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 29 ம் தேதி தானமாக வழங்கினார் ஜானகி அம்மையார்.

தன்னுடைய கணவர் உருவாக்கிய அ.தி.மு.க இயக்கத்தின் வெற்றிக்காகப் பிளவுபட்டிருந்த அ.தி.மு.க.வை 1989ல் மீண்டும் ஒன்றிணைத்தார். எதிர் அணியில் இருந்த ஜெயலலிதாவை அழைத்துப் பேசி கட்சியை ஒன்றுபடுத்தினார். ஜெயலலிதா அவருக்குக் கட்சித் தலைமைப் பொறுப்பைத் தர முன் வந்தபோதும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அ.தி.மு.க இயக்கம் இரு அணிகளாகப் பிரிந்தபோது, புரட்சித்தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அதை மீண்டும் அ.தி.மு.க. இயக்கத்திற்குப் பெற்றுத் தந்தவர் ஜானகி அம்மாள். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை ஏழைக் குழந்தைகளும், ஊனமுற்றோரும் பயன்பெறும்படி தானமாக தந்தவர்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய காது கேளாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக்காலத்தை கழித்த ஜானகி அம்மையார், 1996 ஆம் ஆண்டு இதே மே 19இல் தனது 73-வது வயதில் மறைந்தார்.

Leave a Comment